Published : 29 Jul 2019 11:11 AM
Last Updated : 29 Jul 2019 11:11 AM

ஏழு பேர் பயணிக்கும்  பிஎம்டபிள்யு எக்ஸ் 7

பிஎம்டபிள்யு பிராண்டிலிருந்து புதிய எஸ்யுவி மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏழு பேர் பயணிக்கக் கூடிய இந்த எஸ்யுவிக்கு எக்ஸ் 7 என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதில் இரண்டு வகையான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யுவிக்கு போட்டியாக வருகிறது.

எக்ஸ் டிரைவ் 40ஐ என்ற வேரியன்ட் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இது 340 ஹெச்பி பவரையும் 450 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதற்கு அடுத்த எக்ஸ் டிரைவ் 30டி என்ற வேரியன்ட் 3.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினுடன் வருகிறது. இது 265 ஹெச்பி பவரையும் 620 என்எம்  டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடியது. இரண்டு இன்ஜின்களுமே எட்டு கியர்களைக் கொண்ட ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.  

டிசைனைப் பொருத்தவரை எக்ஸ் 7 மாடல் பெரிய பிரீமியம் எஸ்யுவி செக்மெண்டில் உள்ளது. இதில் ஸ்லிம்மான எல்இடி ஹெட்லைட், பெரிய கிட்னி வடிவ கிரில் அமைப்பு உள்ளது. பின்புறத்தில் அகலமான எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன. இவை மெல்லிய ஸ்ட்ரிப் மூலம் குரோமுடன் இணைக்கப்பட்டுள்ளன. 5.1 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம், 1.8 மீட்டர் உயரம் என இதன் அளவுகள் உள்ளன. 

இன்டீரியரைப் பார்த்தால் கிட்டத்தட்ட புதிய பிஎம்டபிள்யு எக்ஸ் 5 போலவே இருக்கிறது. ஒரே வித்தியாசம் எக்ஸ் 7-னில் மூன்று இருக்கை வரிசைகள் உள்ளதுதான். மற்றபடி வசதிக்கும், பொழுதுபோக்குக்குமான அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 5 சோன் கிளைமேட் கன்ட்ரோல், லேசர் லைட் ஹெட்லேம்ப், ஆம்பியன்ட் லைட்டிங், மூன்று வரிசை இருக்கைகளுக்கும் கிளாஸ் சன்ரூஃப், தானாகவே பார்க்கிங் செய்யும் அட்வான்ஸ்ட் அசிஸ்டன்ஸ் ஆகியவை உள்ளன.  பிஎம்டபிள்யு எக்ஸ் 7-ல் உள்ள மூன்று வரிசை இருக்கைகளிலும் ரெக்லைனிங் வசதி உள்ளது. 

இதில் டீசல் வேரியன்ட்டில் ஆறு இருக்கைகளும், பெட்ரோல் வேரியன்ட்டில் ஏழு இருக்கைகளும் உள்ளபடி வடிவமைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் வேரியன்ட்டில் ஆறு இருக்கைகள் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதில் 30டி வேரியன்ட் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுகிறது. 40ஐ வேரியன்ட் இறக்குமதி செய்யப்படுகிறது. இவற்றின் அறிமுக விலை ரூ.98.90 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு டாப் வேரியன்ட் எக்ஸ் 7 எம்50டி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x