Published : 27 Jul 2019 08:16 PM
Last Updated : 27 Jul 2019 08:16 PM

வானவில் பெண்கள்: மெஸ்ஸி மார்த்தா மாரியம்மாள்

வரலாற்றில் இடம்பெறுவது பெண்களுக்கு எளிதான காரியமல்ல. வாய்ப்பு மறுக்கப்படுவதும் தடைகளைத் தாண்டி தடம்பதித்தவர்களைப் புறக்கணிப்பதும் காலம்தோறும் நடந்துவருகிறது. அதற்காகப் பெண்கள் சோர்ந்துவிடுவதில்லை. முட்டிமோதித் தங்களை நிரூபித்தே வருகிறார்கள்.

அந்தச் சாதனைப் பட்டியலில் இளம் வயதிலேயே தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் மாரியம்மாள். பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் இவர், இந்தியாவில் 2020-ல் நடைபெறவுள்ள 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘மகளிர் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி’யில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்றில் தேர்வாகியிருக்கிறார். தமிழகம் சார்பில் தேர்வாகியிருக்கும் ஒரே பெண் இவர்.

இந்தியாவில் நடைபெறும் முதல் ஜூனியர் உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டி என்பதால் இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் கலந்துகொள்ளவிருக்கும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்யும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக நாடு முழுவதிலுமிருந்து 35 வீராங் கனைகள் முதற்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டார்கள்.

அதில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற தகுதித் தேர்வில் 24 பேரில் ஒருவராக மாரியம்மாள் தேர்வாகியிருப்பது இந்திய அளவில் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறது. செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் தேர்வுபெறுவதற்காக மாரியம்மாள் கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறார்.

தெரியாததைத் தெரிந்துகொள்

ஈரோட்டில் பள்ளி மாணவர்களுக் கான மாநிலக் கால்பந்துப் போட்டி சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. நான்கு பிரிவுகளாக நடைபெற்ற லீக் கால்பந்துப் போட்டியில் அதிக புள்ளிகளைப் பெற்று மாரியம்மாள் 

இடம்பெற்றிருந்த நாமக்கல் மாவட்ட அணி வெற்றிபெற்றது. அந்த மகிழ்ச்சியில் இருந்த மாரியம்மாள் மூச்சிரைக்கப் பயிற்சியெடுத்தபடியே, தான் கடந்துவந்த பாதை பற்றிப் பகிர்ந்து கொண்டார். பொருளாதாரரீதியில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாரியம்மாள், ஈரோடு சங்ககிரியில் பிறந்தவர். இவரின் பெற்றோர் சாயப் பட்டறைத் தொழிலாளர்கள்.

ஏழாம் வகுப்புவரை சங்ககிரியில் படித்துவந்த மாரியம்மாள், அதன் பிறகு குடும்ப வறுமை காரணமாக நாமக்கல்லில் உள்ள மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கிப் படித்தார். மாரியம்மாளின் தடகளத் திறமையே அந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. எட்டாம் வகுப்புப் படித்தபோது பயிற்சியாளர் கோகிலாவின் வழிகாட்டலில் மாரியம்மாள் கால்பந்து விளையாடத் தொடங்கினார்.

“என் அண்ணன் கால்பந்து வீரர். அவரைப் பார்த்துத்தான் எனக்கும் கால்பந்து மீது ஆர்வம் பிறந்தது. விடுதியில் சேருவதற்கு முன்புவரை கால்பந்து விளையாட்டின் நுணுக்கங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. அண்ணன் விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன் அவ்வளவுதான். தெரியாத ஒரு விளையாட்டைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்தான் கால்பந்தைத் தேர்வுசெய்ய வைத்தது” என்கிறார் மாரியம்மாள்.

படிக்கட்டாக 12 கோல்கள்

ஆரம்ப காலப் பயிற்சியின்போது நடைபழகும் குழந்தையைப் போல் தத்தி தத்தித்தான் மாரியம்மாள் விளையாடினார். ஆனால், இடைவிடாத பயிற்சியால், கால்பந்தில் தனது கால்களை உறுதியாக ஊன்றி நிற்கத் தொடங்கினார். அதற்குப் பிறகு மாரியம்மாளின் கால் பந்தைத் தொட்டபோதெல்லாம் கோல் அடிக்கத் தவறிய தருணங்கள் குறைவு. பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் தன்னுடைய முதல் கோலை அடித்து, கால்பந்துப் போட்டிகளில் தன் முதல் அடியைப் பதித்துள்ளார்.

ஒன்பதாம் வகுப்பிலேயே மாநிலக் கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு முன்னேறினார். ஜூன் மாதம் கோவாவில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் தேசிய ஜூனியர் கால்பந்துப் போட்டியில் 12 கோல்களை அடித்து, அந்தத் தொடரில் அதிக கோல்களை அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார். மாரியம்மாள் அடித்த அந்த 12 கோல்கள் மகளிர் ஜூனியர் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் தகுதிச் சுற்றுக்கு, அவரை தேர்வுபெற வைத்தன.

“அம்மா, அப்பாவுக்குக் கால்பந்து பற்றி எதுவும் தெரியாது. ஆனால், விளையாட்டில் ஜெயிச்சிட்டு வந்தால் ரொம்ப சந்தோஷப்படுவாங்க. பொம்பளப் புள்ளைக்கு எதுக்கு விளையாட்டு என மற்றவர்கள் சொன்னாலும், அதற்கெல்லாம் காது கொடுக்க மாட்டார்கள். நான் விளையாட்டில் மட்டுமல்ல; வாழ்க்கையிலும் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் அவங்க கனவு” எனும் மாரியம்மாளின் வார்த்தையில் பல தலைமுறைகளின் வெற்றி அடங்கியுள்ளது.

நம்பிக்கையின் வெற்றி

“மாரியம்மாள் கால்பந்துப் பயிற்சியில் ஈடுபட்டபோது சாதாரண நிலையில்தான், அவரது விளை யாட்டுத் திறமை இருந்தது. ஆனால், அடுத்தடுத்த பயிற்சிகளின்போது அவருக்குள் சிறந்த வீராங்கனை ஒளிந்திருப்பது தெரிந்தது. அதுதான் தமிழக அளவில் மகளிர் கால்பந்துப் பிரிவில் மாரியம்மாளை முக்கிய வீராங்கனையாக அடையாளம் காட்டியிருக்கிறது. கால்பந்து மீது மாரியம்மாள் வைத்துள்ள ஈடுபாடுதான், அவரை இந்த நிலைக்கு உயர்த்தி யிருக்கிறது. அவரது கால்பந்துப் பயிற்சிக்கான அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கவனித்துக் கொள்கிறது.

காலை ஐந்தரை மணிக்கெல்லாம் மைதானத்துக்கு அவர் வந்துவிடுவார். எந்தச் சூழ்நிலையிலும் கடினமான பயிற்சிகளை மேற்கொள்வார். அவர் விளையாடத் தொடங்கியதிலிருந்து மாரியம்மாளுக்குப் பயிற்சி அளித்துவருகிறேன். மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய அணியில் மாரியம்மாள் நிச்சயம் இடம்பெறுவார் என நம்புகிறேன்.

அப்படி நடந்தால் தமிழகத்திலிருந்து சர்வதேசக் கால்பந்துப் போட்டிகளில் கலந்துகொள்ளும் முதல் வீராங்கனை என்ற பெருமையும் அவருக்குக் கிடைக்கும். அதற்கான தீவிரப் பயிற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார்” என்கிறார் பயிற்சியாளர் கோகிலா.

உலக மகளிர் ஜூனியர் கால்பந்துப் போட்டியின் தகுதிச் சுற்றுக்கு மாரியம்மாள் தேர்வானதையொட்டி தமிழகத்தில் உலக மகளிர் கால்பந்துப் போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. “கால்பந்துப் போட்டிகளின் நாயகன் மெஸ்ஸி, மகளிர் வீராங்கனை மார்த்தா இருவரும் என்னுடைய ரோல் மாடல்கள். அவர்களும் என்னைப் போல் வறுமை நிறைந்த பின்புலத்திலிருந்து வந்தவர்கள்.

கால்பந்து என்பது தனிநபர் விளையாட்டல்ல. என் குழுவின் ஒத்துழைப்புதான் பல கோல்கள் அடிக்க எனக்கு உதவியது. மற்றவர்களின் ஊக்கமான வாத்தைகள்தாம் என்னுடைய வளர்ச்சிக்குக் காரணம்” என்கிறார் மாரியம்மாள். வறுமை வாட்டினாலும் அதை விளையாட்டால் ஜெயிக்க முடியும் என்று மாரியம்மாள் உறுதியோடு நம்புகிறார். மைதானத்தில் கோல் கம்பத்தை நோக்கி நகரும் பந்தாக, அந்த நம்பிக்கை அவரை அடுத்தடுத்த நிலைக்கு நகர்த்திக்கொண்டே இருக்கிறது.

- எல்.ரேணுகாதேவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x