Published : 27 Jul 2019 08:07 PM
Last Updated : 27 Jul 2019 08:07 PM

நட்சத்திர நிழல்கள் 16: நின்று கொன்ற கருத்தம்மா

இன்றுவரை ‘நித்திய கண்டம் பூரண ஆயுசு’ என்பதுதான் பெண்களின் நிலைமையாக இங்கே தொடர்கிறது. ஏனெனில், அன்றாடம் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான கணக்கிலடங்காக் கொடுமைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண்களும் துணிச்சலுடன் அவற்றை எதிர்த்துப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவையெல்லாம் பிறந்து வளர்ந்த பின்னர் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்.

ஆனால், பிறந்த உடனேயே குழந்தைக்குக் கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் பழக்கம் இங்கே இருந்துவந்துள்ளது. கருவிலேயே பெண் சிசுவைக் கலைக்கும் வழக்கம் இருந்ததைப் போல இதுவும் பெண்களுக்கு எதிரான பெருங்கொடுமை. இப்படியான பழக்கத்தின் பாதிப்பை நமக்கு எடுத்துச் சொல்கிறது கருத்தம்மாவின் கதை.

அதிர்ச்சி தரும் வழக்கம்

ஆண் உயர்வு, பெண் தாழ்வு என்னும் தவறான மனோபாவம்தான் பெண்ணைக் கொல்லவைக்கிறது. பெண்ணைப் பெற்று வளர்த்து மணமுடித்துக்கொடுப்பது வரையிலான பெரும் பாட்டை எதிர்கொள்ள அஞ்சி, பெண் குழந்தை பிறந்தவுடனேயே கள்ளிப்பால் தந்து கொன்ற போக்கு 21-ம் நூற்றாண்டின் தொடக்கம்வரை தொடர்ந்த உண்மை அதிர்ச்சியைத் தரத்தான் செய்யும்.

இந்த மூடப் பழக்கத்தைச் சுட்டிக்காட்டிச் சாடிய வகையில் 1994-ல் வெளியானது ‘கருத்தம்மா’. தலைப்புப் பாத்திரத்தில் நடித்த ராஜ அறிமுகமான இந்தத் திரைப்படத்தின் கதை வசனம், M. ரத்னகுமார், இயக்கம் பாரதிராஜா. 

நம்மைக் காப்பவர்களாகச் சித்தரிப்பட்டிருக்கும் கடவுளர்களின் கைகளில் எண்ணிலடங்கா ஆயுதங்களைத் தந்த சமூகம் மனிதரிடையே அன்பைப் போதிப்பது சற்று முரணான அம்சம்தான். அற்புதம் நிகழ்த்தவல்ல கடவுளரே ஆயுதங்களை ஏந்தித்தான் பாதுகாக்கின்றனர் எனும்போது, அற்ப மனிதர் ஆயுதங்களைத் தள்ளிவைப்பாரா?

பொட்டல்பட்டிக்காரியான கருத்தம்மாவும் ஆயுதம் ஏந்தினாள்; தன் மானத்தைக் காக்கவும் கண் முன்னே நடந்தேறவிருந்த மணம் என்னும் கொடுமையைத் தவிர்க்கவும் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. ஆகவே, அவள் தன்னை மணமுடிக்க எண்ணியிருந்த தன் அக்காவின் கணவனான மாமனையும் மற்றொரு காமுகனையும் அடித்தே கொன்றாள். சட்டத்தின் முன் குற்றவாளியாகக் கூனிக் குறுகி நின்றாலும் தர்ம தேவதையாக நிமிர்ந்து நின்றவள் கருத்தம்மா.

கருத்தம்மா சிறுவயதிலிருந்தே பெண்ணுக்கு எதிரான கொடுமைகளை அனுபவித்து வளர்ந்தவள். ஆண் என்பதால் அப்பனுக்கு ஆத்தா வெடக்கோழி முட்டையைப் பாசத்துடன் தருவதையும் ஆண் குழந்தையைக் கருத்தரித்திருக்கிறாள் எனும் நம்பிக்கையில் அப்பன், ஆத்தாவை அக்கறையுடன் கவனித்துக்கொள்வதையும் ஏக்கத்துடன் பார்த்து வந்தவள் கருத்தம்மா.

அவள் பிறந்த ஊரில் பெண் குழந்தை பிறந்துவிட்டால், தாய் அதற்குத் தன் பாலைத் தருவதற்கு முன்னர் யாரும் அறியாமல் கள்ளிப்பால் தந்து குழந்தையின் துடிப்பை நிறுத்திவிடும் வழக்கம் நிலவிவந்தது.

கள்ளிக்குத் தப்பிய கரு

கருத்தம்மா தன் தகப்பன் மொக்கையன் சாயலில் பிறந்ததால் தப்பித்தாள். அவளுக்குப் பின் பிறந்த இரண்டு பெண்கள் கள்ளிப்பாலில் கரைந்தார்கள். அதற்குப் பின்னர் ஐந்தாவதாக ஆண் பிறக்கும் என்று கோடாங்கி குறி சொன்னதை நம்பிப் பெற்றுக்கொண்ட குழந்தையும் பெண்ணாகப் பிறக்க அதையும் கொல்லச் சொன்னார் அவளுடைய தந்தை. தன் தொழுவத்துப் பசுவைக் காப்பாற்ற முயலும் மொக்கையன் தனக்குப் பிறந்த பெண் சிசுவைக் கொல்லத் தயங்கவேயில்லை. கஷ்டப்படும் கன்றை காந்தி கொல்லச் சொன்னாரே என்று அவர் தன் பக்க நியாயத்துக்கு காந்தியை வேறு துணைக்கு அழைத்துக்கொள்கிறார்.

ஆனால், ஆயாவின் கையேந்தியிருந்த சங்குப் பாலுக்கும் மடியில் கிடந்த குழந்தையின் நாவுக்கும் இடையிலான தூரத்தை எமன் கடப்பதற்குள் அந்த ஊர் வாத்தியார் முந்திக்கொண்டார். பிழைத்துக்கொண்ட பெண்ணை வாத்தியார் எடுத்துச்சென்று வளர்த்தார். எந்தப் பெண்ணை மொக்கையன் கருவிலேயே அழிக்கச் சொன்னாரோ அவள் டாக்டராகி ரோஸி என்ற பெயரில் அதே ஊருக்கு வருகிறாள்; மொக்கையன் பக்க வாதத்தால் படுக்கையில் விழுந்தபோது அவனுக்குப் பக்குவம் பார்த்து, அவன் உயிரைக் காப்பாற்றியது அவள்தான்.

தங்கை ரோஸியைப் போன்ற கல்வி வாய்ப்பு கருத்தம்மாவுக்குக் கிடைக்கவில்லை. ஆம், அவள் கல்வி மறுக்கப்பட்டவள். கிராமங்களில் வாழ்ந்த பெற்றோர், ஆண் குழந்தைகளை ஆசையுடன் கல்விச் சாலைக்கு அனுப்பியபோதும் பெண் குழந்தைகளைப் படிக்கவைத்து என்ன செய்ய என அலுத்துக்கொண்ட காலத்தில் பிறந்தவள் கருத்தம்மா. எழுதப் படிக்கத் தெரியாத காரணத்தால்தான், தன் அக்காவைக் கொன்றவர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் எழுதிக் கொடுக்கக்கூட மற்றவரிடம் கையேந்தும் நிலை அவளுக்கு ஏற்பட்டது.

கருத்தம்மா கல்வி கற்காத கிராமத்துப் பெண் என்றபோதும் சூதுவாது அறிந்தவள். அவள் அப்பாவியல்ல; தன்னைச் சூழ்ந்து நிற்கும் சூழ்ச்சிகள் புரியாதவள் அல்ல. சூழலுக்கு ஏற்ப சூதானமாக நடந்துகொள்ளும் வழிமுறைகள் அறிந்தவள். பாலில் தண்ணீர் கலந்து விற்றாள், கிராமத்துக்கு வந்த ‘கேணை டாக்ட’ருக்குக் குளிக்க நீர் இறைத்துத் தந்து அதில் காசு பார்த்தாள்.

பூவில் சாயத்தைப் பூசி அவரிடம் விற்றாள். இப்படி எந்தெந்த வழிகளில் சம்பாதிக்க முடியுமோ அந்தந்த வழிகளில் சம்பாதித்து காசு சேர்த்தாள். புருஷன் கொடுமை தாங்காமல் தன் அக்கா கண்ணைக் கசக்கிக்கொண்டு வந்து நின்றபோது தான் சேர்த்துவைத்த பணத்தைத் தந்து தாயில்லாக் குறையைப் போக்கியவள் கருத்தம்மா.

தங்கையல்ல தாயானவள்

ஆத்தா மறைந்த பிறகு அவளைப் புதைத்த இடத்தில் வளர்ந்து நிற்கும் பிள்ளைத்தாச்சி மரத்தையே தன் தாய் போலெண்ணி, மன பாரம் ஏற்படும்போதெல்லாம் அதனருகே சென்று ஆறுதலடைவாள். ஆத்தாவுக்குப் பிறகு தன் அக்கா பெரியகண்ணிக்குக் கருத்தம்மாவே தாய் போலானாள்.

அப்பனுக்கும் எல்லா உதவியையும் அவள்தான் செய்கிறாள். அதிலும் அப்பனுக்குப் பக்கவாதம் வந்த பின்னர், அவனைக் குளிப்பாட்டிவிட்டு ஆடை மாற்றுவதுவரை அத்தனை வேலைகளையும் கருத்தம்மாதான் கவனித்துக்கொள்கிறாள். அக்காவுக்கு மட்டுமல்ல; அப்பனுக்கும் கருத்தம்மாவே தாயானாள். காசு பணம் வாங்காமல் கருத்தம்மாவைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளத் தயாராக இருந்தார் அந்த கேணை மாட்டு டாக்டர். அவர் கருத்தம்மாவைக் காதலித்தார். கருத்தம்மாவுக்கும் அவர்மீது பிரியம் இருந்தது. ஆனால், அதுவும் கைகூடாமல் போயிற்று. துயர வெள்ளத்தில் தும்பைப் பூ போன்ற தனது காதலும் அடித்துச் செல்லப்பட்டது கண்டு வாளாவிருந்தாள் கருத்தம்மா. 

அப்பனின் குடும்ப சுமையைத் தன் தோளில் வைத்துத் தாங்கினாள் கருத்தம்மா. அக்கா பெரியகண்ணியும் தொடர்ந்து இரண்டு பெண்களைப் பெற்றாள். மூன்றாம் குழந்தை ஆணாகப் பிறந்தால்தான் தான் தப்பிக்க முடியும் என்ற நிலையில் அவள் சோதிடம் பார்க்கும்போது, அவளுக்கு மகாலட்சுமியே மகளாகப் பிறப்பாள் எனச் சோதிடர் கூறியவுடன் பெரியகண்ணிக்குப் பொக்கென்றாகிவிட்டது.

மகாலட்சுமி ஆற்றலுடைய தெய்வமாக இருக்கலாம்; ஆனால், அவள் ஆணில்லையே என்ற உண்மை பெரியகண்ணியை வாட்டியது. தளர்ந்துநின்ற அக்காவை ஆறுதல் வார்த்தைகள் சொல்லித் தேற்றியவள் கருத்தம்மாதான். ஆனால், மூன்றாம் குழந்தையும் பெண்ணானபோது, அக்கா கணவனான, ஆணாகப் பிறந்த மாமன் தவசியும் அவனுடைய தாயும் சேர்ந்து அவளைக் கொன்று தூக்கிவிட்டார்கள். 

கருத்தம்மாவைப் போன்ற பெண்கள் கண்ணும் கருத்துமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டியவர்களே தவிர கள்ளிப்பால் தந்து அழிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என்னும் புரிதலை நம்மிடம் ஏற்படுத்திவிட்டு விடைபெறுகிறாள் கருத்தம்மா. 

 (நிழல்கள் வளரும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@thehindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x