Published : 27 Jul 2019 07:54 PM
Last Updated : 27 Jul 2019 07:54 PM

வாசிப்பை நேசிப்போம்: கல்யாணி காட்டும் வழி

தொடர்ந்திடும் பணிகளுக்கு இடையில் புத்தகத்தின் துணைகொள்ளும் பொழுதில் கதாபாத்திரங்களின்வழி மனித ஆளுமைப் பண்புகளைக் காணும் நோக்கில் படித்துச் சுவைப்பது என் வழக்கம். அந்த வகையில் தேர்ந்த ஆளுமைப் பண்பின் உறைவிடமாக என்னைக் கவர்ந்தவள் ‘கல்யாணி’. ஜெயகாந்தனின், ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ கதையின் நாயகி.

தன் கருத்துக்கு மாறான லட்சியம் மனைவிக்கு இருந்தால் அதை எதிர்ப்பதையும் அழிப்பதையுமே பெரும்பாலான ஆண்கள் நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர். தனது சொந்த விருப்பு வெறுப்புகளையும் கொள்கைகளையும் மனைவி மீது திணித்துச் சாதாரண ரசனைகளையும்கூட அழித்துவிட நினைக்கும் ஆக்கிரமிப்பாளராகவே பலரும் இருக்கின்றனர்.

இப்படி ஆக்கிரமிக்கப்படும் மனைவியோ அனைத்தையும் உள்ளுக்குள் போட்டுப் புதைத்துக்கொண்டு, தான் அமைதியாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம். ஆனால், இது மனத்தின் அமைதியல்ல. இந்த அமைதி, சச்சரவுகளின் அடித்தளத்துக்கு மேலும் மேலும் வலுச்சேர்க்கிறது.

சமாதானம்தான் நிரந்தரமானது. அமைதி என்ற போர்வைக்குள் ஒளிந்துகொள்ளும் இந்த மனத்தின் ஓய்வோ மறுபடியும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் யுத்தமாகக் கிளர்ந்தெழவே செய்யும்.

இல்லற வாழ்க்கையில் முரண்பட்ட கருத்துகளுடன் பயணிக்கும் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய நகர்வுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை ‘கல்யாணி’ கதாபாத்திரம் கரம்பிடித்து வழிநடத்திச் செல்லும். காட்சியில் நிகழ்வினைப் படித்தவுடன் நம் உள்ளம் பதறும். ஆனால், எந்தவிதப் பாதிப்புக்கும் உட்படாத மனநிலையே கல்யாணி தனது வாழ்வில் ஏற்படும் மோதல்களையும் அவலங்களையும் தவிர்ப்பதற்கான உத்தியாகக் கொண்டிருக்கிறாள்.

எவ்விதச் சூழ்நிலையிலும் புறவாழ்க்கையில் சற்றும் தன் மன பாதிப்பைக் காட்டிக்கொள்ளாத மனோநிலையில் அவளின் மேன்மையான முதிர்வுநிலைப் பண்பைக் காணமுடிகிறது.

தனது விருப்பு வெறுப்புகளைத் தன் துணையின் ஆக்கிரமிப்பு குணத்துக்கு இழந்துவிடாமல் அதற்கான எதிர்ப்பைப் புன்முறுவலோடு எதிர்கொள்கிறாள். அன்புக்கு அடங்குவதாகக் காட்டிக்கொள்ளாமல் அதே நேரம் துணையின் மன உணர்வுகளுக்கு மதிப்பளித்தல், கடினமான சூழலை எதிர்கொள்ளும்போதும் தீர்க்கமான தெளிந்த அறிவாண்மையோடு முடிவெடுத்தல், முரண்பட்ட கருத்துகளைக் கூறும்போதும் உதட்டில் சிரிப்போடு தன் கருத்தை உரக்கச் சொல்லுதல், இழப்பின்போது அவளது இருப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திடும்விதமாகத் தன் தூய அன்பைப் பரிசளித்திருத்தல், உண்மையான அன்பு என்பது நாம் அன்பு செலுத்துபவரைத் தன் சொந்தக் கருத்துக்குத் திசைதிருப்பாமல் அவர்களை அவர்களாகவே வாழவிடுதல் என்பது போன்ற இல்லறத்துக்கான குணநலன்களைக் காட்சிப்படுத்தி ஆளுமைப் பண்பின் உயர்ந்தநிலையை மனத்தில் பதிவுசெய்தவள் கல்யாணி.

வாழ்க்கைத்துணையோடு நட்புணர்வுடன் கூடிய பயணத்துக்கான பண்புகளைப் புன்னகையோடு கற்றுக்கொடுக்கும் கல்யாணியின் ஆளுமைப் பண்பினைஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் வாசித்து அறிந்திட வேண்டும்.

- ம.தனப்பிரியா, உதவிப் பேராசிரியர்,தமிழ்க் கல்லூரி, பேரூர், கோவை.

பொட்டலத்தில் பொக்கிஷத் தேடல்

எனக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தியவர் என் தந்தைதான். அவருடன் கடைவீதிக்குச் செல்லும்போது மளிகைப் பொருட்களை நாளிதழ்களில் பொட்டலமாக மடித்துக்கொடுப்பார்கள். வீட்டுக்கு வந்த பிறகு அப்பா அந்த பொட்டலக் காகிதங்களைப் படித்துவிட்டு என்னையும் படிக்கச் சொல்வார்.

சிறுவயதிலிருந்தே ரமணிச்சந்திரன் நாவல்களை விரும்பி வாசிப்பேன். என் தந்தை விவசாயியாக இருந்தாலும் என் விருப்பம் அறிந்து புத்தகங்களை வாங்கிக் கொடுப்பார். ரமணிச்சந்திரனின் நாவல்கள் என்னைக் குடும்பச் சூழ்நிலைக்கு ஏற்பப் பக்குவப்படுத்தின.

தமிழ்ப் பேராசிரியரை மணம் முடித்தேன். அவரோ புலவரின் தவப்புதல்வர். அவரிடம் அரிய புத்தகங்கள் பல இருந்தன. கவிஞர் சிற்பியின் கவிதைகளை நான் மிகவும் ரசித்து வாசித்தேன். சு. வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ நாவலை நானும் என் கணவரும் பலமுறை வாசித்திருக்கிறோம். நாங்கள் இருவரும் புத்தகங்களை வாசித்துவிட்டு மாலை வேளைகளில் நடைப்பயிற்சியின்போது விவாதிப்போம். கவிஞர் நா. முத்துக்குமாரின் ‘அணிலாடும் முன்றில்’ என் மனத்தை மிகவும் பாதித்த புத்தகம். அதில், அவர் உறவுகளைப் பற்றி எழுதியுள்ளார்.

ஒவ்வொருவரும் அந்தப் புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும். எஸ். ராமகிருஷ்ணன், கி.ரா. ஆகியோரின் புத்தகங்களும் கொங்குத் தமிழில் கொஞ்சி விளையாடும் மா. நடராசனின் ‘ஊர் கலைஞ்சு போச்சு’ போன்ற புத்தகங்களையும் நான் வாசித்துள்ளேன். வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசமும்’ எனக்குப் பிடித்த நாவல். எழுத்தாளர் வீரபாண்டியன் எழுதிய ‘பருக்கை’ நாவல் அருமையாக இருந்தது. கவிஞர் புவியரசின் முதல் நாவலான ‘கண்மணி சோபியா’, பெண்களின் இன்றைய நிலையை அப்பட்டமாக எடுத்துக்காட்டும் நாவல். ராபின் சர்மாவின் ‘பொக்கிஷத்தை விற்ற துறவி’ என்ற நூல் நான் பொக்கிஷத்தைக் கண்டடையும் வழியைச் சொன்னது.


‘இந்து தமிழ்’ நாளிதழில் தொடராக வெளியான எஸ். ராமகிருஷ்ணனின் ‘கடவுளின் நாக்கு’ பகுதியை வாசிப்பதற்காக வியாழன்தோறும் காத்திருப்பேன். அதில் அவர் அறிமுகம் செய்த புத்தகங்கள் சிலவற்றை வாசித்து மகிழ்ந்திருக்கிறேன்.
எனக்கும் என் வாசிப்புக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் நான் கேட்கும் புத்தகங்களை இன்முகத்தோடு வாங்கித் தரும் என் கணவருக்கு நன்றி. வாசிப்பு ஒன்றே மனிதனைப் பண்படுத்தும். நான் உடல்நலமின்றிப் படுக்கையில் பல மாதங்கள் இருந்தபோதும் என் பெற்றோரை இழந்தபோதும் என் கணவரோடு புத்தகங்களும் எனக்குத் துணையாக நின்றன. பாரதிக்கு எப்படி கண்ணன் தோழனாகவும் காதலனாகவும் காதலியாகவும் தாயாகவும் தந்தையாகவும் இருந்தானோ அதுபோலத்தான் எனக்குப் புத்தகங்கள்.

நீ
என்னைத் தலை குனிந்து பார்
நான்
உன்னைத் தலை நிமிர வைப்பேன்
புத்தகம்!

- என்ற ஹைக்கூவுக்கு ஏற்பத் தினமும் வாசிப்பதையே சுவாசிப்பதுபோல் கொள்ள வேண்டும். சாகித்ய அகாடமி வெளியிட்ட, கவிஞர் சிற்பி பதிப்பித்த ‘ம.ப.பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகள்’ என்ற நூலைத் தற்போது படித்துவருகிறேன். சுவாசிப்பைப் போல் வாசிப்பு என்னுள் ஒன்றாக கலந்துவிட்டது.

- எஸ். அம்புஜம் வேல்முருகன், திருவாரூர்.

தாகம் தீர்க்கும் புத்தகக் கடல்

பதினாறு வயதில் தொடங்கிய வாசிப்பு ஐம்பது வயதைக் கடந்தும் தொடர்கிறது. பொதுவாகப் பெண்கள் வெளியே சென்றால் பாத்திரம், நகை, புடவை போன்றவற்றை வாங்கவே விரும்புவார்கள். ஆனால், எனக்கோ புடவையைவிடப் புத்தகம் வாங்குவதில் விருப்பம் அதிகம். வீட்டுக்கும் நூலகத்துக்கும் குறைந்தது நான்கு கிலோ மீட்டராவது இருக்கும். நூலகத்துக்குப் போக  முடியவில்லையே என்பதற்காகவே விபிபி மூலம் 400 புத்தகங்களாவது வாங்கியிருப்பேன்.

வீட்டில் மூன்று நாளிதழ்களையும் வார இதழ்கள் சிலவற்றையும் வாங்குகிறோம். அப்படியும் வாசிக்கும் ஆர்வம் குறையவில்லை. எனக்கு எப்போதெல்லாம் பதற்றம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அதைத் தணிக்கும் மருந்து புத்தகங்களே.  அனுராதா ரமணன் எழுதிய, ‘மீண்டும் மீண்டும் உயிர்த்தெழலாம்’, ‘ உறவுகள்’, ‘சிரிக்கப் பழகு’, ‘மன ஊஞ்சல்’ போன்ற புத்தகங்களையெல்லாம் வாசிக்கத் தொடங்கினால் கீழே வைக்க முடியாது.

அவரது புத்தகங்கள் என்றால் படித்துக்கொண்டே இருக்கலாம். வித்யா சுப்ரமணியத்தின் ‘உப்புக் கணக்கு’, ‘ஆகாய மலர்கள்’ இரண்டும் எனக்குப் பிடித்தவை.

இவற்றைத் தாண்டி மகா பெரியவர் குறித்து யார் எழுதினாலும் அந்தப் புத்தகத்தை வாங்கி வாசித்துவிடுவேன். கொத்தமங்கலம் சுப்பு எழுதிய, ‘தில்லானா மோகனாம்பாள்’, நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’, கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’, பாலகுமாரனின் ‘உடையார்’ என அடுத்தடுத்து வாசித்துக்கொண்டே இருக்கிறேன்.

என் வாசிப்பு வேகம் அதிகம் என்பதால் அதிகப் புத்தகங்களை வாசித்துவிட முடிகிறது. நான் இங்கே குறிப்பிட்டிருக்கும் புத்தகங்கள் எல்லாம் சிறுதுளி மட்டுமே. கடலைக் குடித்துவிடும் ஆவலோடு புத்தகங்களைத் தேடிக்கொண்டே இருக்கிறேன்.

- ஆர். புவனேஸ்வரி, ராணிப்பேட்டை.

வாசிப்பை நேசிப்போம்

புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக்கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்க்க முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்கள் ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள். 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x