Published : 27 Jul 2019 07:50 PM
Last Updated : 27 Jul 2019 07:50 PM

வட்டத்துக்கு வெளியே: வழக்கிலும் வாழ்க்கையிலும் வெற்றி

தன்பால் ஈர்ப்பு குற்றமல்ல என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் 2018-ல் வழங்கியது. வழக்கறிஞர்கள் மேனகா குருசாமியும் அருந்ததி கட்ஜுவும் இந்தத் தீர்ப்புக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள். சமீபத்தில் இவர்கள் இருவரும் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தங்களை தன்பால் ஈர்ப்பு கொண்ட ஜோடிகள் என அறிவித்துள்ளனர்.

இதையடுத்து இவர்கள் இருவர் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. வழக்கறிஞர் மேனகா குருசாமி, முன்னாள் வெளியுறவுத் துறை ஆலோசகர் மோகன் குருசாமியின் மகள். இந்தியச் சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்த மேனகா, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் ஹார்வர்டு சட்டப் பள்ளியிலும் சட்ட மேற்படிப்புகளை முடித்தவர். டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகத் தற்போது பணியாற்றிவருகிறார்.

அருந்ததி கட்ஜு, அலகாபாத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். பெங்களூருவில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படித்தார். 11 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய அருந்ததி, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பை முடித்தார்.

சட்டப் போராளிகள்

அருந்ததி, மேனகா இருவரும் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கியதிலிருந்தே பொதுநல வழக்குகள், கல்வி, திருநங்கைகள், மனித உரிமை மீறல் போன்றவற்றுக்காகச் சட்டரீதியிலான போராட்டத்தை முன்னெடுத்தவர்கள். குறிப்பாக வழக்கறிஞர் மேனகா குருசாமி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதைக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப் பரிந்துரைத்தார். மணிப்பூர் மாநிலத்தில் ராணுவ வீரர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் நலனுக்காகவும் வழக்குத் தொடர்ந்தார். 

2ஜி அலைக்கற்றை வழக்கு, நடிகை ஜெசிகா லால் கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் அருந்ததி கட்ஜு வாதிட்டுள்ளார். எல்.ஜி.பி.டி. மக்களுக்கான சட்டப் போராட்டத்தையும் இவர் முன்னெடுத்திருக்கிறார். இருந்தபோதும், தன்பாலின ஈர்ப்பு தண்டனைக்குரிய குற்றமில்லை என்ற தீர்ப்புக்குப் பிறகே இவர்கள் இருவரது பெயர்கள் அனைவராலும் அறியப்பட்டன. இந்த வழக்குக்காக 2013-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியான சட்டப் போராட்டத்தை இவர்கள் மேற்கொண்டனர்.

குற்றவாளியாக உணர்ந்தேன்

தன்பால் ஈர்ப்பு தண்டனைக்குரிய குற்றம்; இயற்கைக்கு எதிரானது; தன்பால் ஈர்ப்பு கொண்டவர்களுக்கு வாழ்நாள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் 157 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின்போது இயற்றப்பட்டது. இந்தப் பிற்போக்குத்தனமான சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மேனகா குருசாமியும் அருந்ததி கட்ஜுவும் உச்ச நீதிமன்றத்தில் 2013-ல் வழக்குத் தொடர்ந்தனர். 

இதனால் அவர்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கப்பட்டார்கள். “நாங்கள் இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வாதாடிக்கொண்டிருந்தோம். அப்போது இந்த வழக்கைக் கேட்டுக்கொண்டிருந்த நீதிபதி, அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம், “உங்களுக்கு தன்பால் ஈர்ப்பு கொண்டவர்களைத் தெரியுமா?” எனக் கேட்டார். அதற்கு அந்த வழக்கறிஞர் சிரித்துக்கொண்டே “நான் அந்த அளவுக்கு நவீனமானவன் கிடையாது. எனக்கு யாரையும் அப்படித் தெரியாது” என்றார். அந்த நொடி என்னை மிகவும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது.

வழக்கில் நாங்கள் தோற்கப்போகிறோம் என அப்போதே தெரிந்துவிட்டது. வழக்கு முடிந்து நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறியபோது நான் அவமானகரமாக உணர்ந்தேன். இந்த வழக்கில் எனக்கு ஏற்பட்ட இழப்பு ஒரு வழக்கறிஞராக என்னைக் குற்றவாளியாக உணரவைத்தது. மீண்டும் வேறு வழக்குகளை வாதாட நீதிமன்றத்துக்குள் ஒரு குற்றவாளியாக எப்படி நுழைவேன் என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். 377 சட்டப் பிரிவை மறுபரிசீலனை செய்வதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்வதென அந்த நொடியே தீர்மானித்தேன்” என்கிறார் மேனகா குருசாமி.

குரலற்றவர்களின் குரல்

377 சட்டப் பிரிவைத் தடைசெய்வதற்கான ஆய்வில் மேனகா குருசாமியும் அருந்ததி கட்ஜுவும் 2013 முதல் 2016 வரை ஈடுபட்டார்கள். இவர்களுக்கு வலுச்சேர்க்கும் விதமாகத் தன்னார்வ அமைப்பாளர்கள், தன்பால் ஈர்ப்பு கொண்டவர்களின் பெற்றோர் ஆகியோர் இந்த வழக்கில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

377 சட்டப் பிரிவைத் தடை செய்யக்கோரி பல மாதங்கள் நடைபெற்றுவந்த வழக்கின் தீர்ப்பு, நாட்டின் கவனத்தைத் திருப்பியது. இதையடுத்து, ‘தன்பால் ஈர்ப்பு கிரிமினல் குற்றமாகாது’ என ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு  2018-ல் தீர்ப்பு வழங்கியது. “இந்தத் தீர்ப்பை வாசிக்கும்போது என் பெற்றோர் நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்தனர்.

நாங்கள் இருவரும் இந்த வழக்கை எப்படி வாதிடுகிறோம் என்பதைப் பார்க்க அவர்கள் வந்திருந்தார்கள்” என்று குறிப்பிடுகிறார் அருந்ததி கட்ஜு. ஆனால், அப்போது இவர்கள் இருவரும் தன்பால் ஈர்ப்பு கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்தாமல் இருந்தனர். தற்போது தொலைக்காட்சி விவாதத்தில் தங்களை ஜோடிகளாக அறிவித்த பிறகு இவர்களுக்குப் பாராட்டு குவியத் தொடங்கியுள்ளது. ‘டைம்’ பத்திரிகை வெளியிட்ட உலகின் ஆளுமை மிக்க 100 நபர்களின் பட்டியலில் மேனகாவும் அருந்ததியும் இடம்பெற்றனர்.

“திருநங்கைகள், தன்பால் ஈர்ப்பாளர்கள், சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் எனக் குரலற்றவர்களின் குரலாய் நாங்கள் இருக்க விரும்புகிறோம். அவர்களுக்கான சுதந்திரத்தைச் சட்டத்தின் வழியாகக் கிடைக்கச் செய்கிறோம்” என்கிறார்கள் வழக்கறிஞர்கள் மேனகா குருசாமியும் அருந்ததி கட்ஜுவும்.

- அன்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x