Published : 27 Jul 2019 07:40 PM
Last Updated : 27 Jul 2019 07:40 PM

அறிவியல் பெண்கள்: அறிவால் அண்டத்தை ஆட்கொண்டவர்கள்

வனிதா முத்தையா - ரிது கரிதால்

பெண்ணின் முகத்தை நிலவாகவும் கூந்தலைக் கார்மேகமாகவும் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆனால், நாங்கள் அழகுப் பதுமைகள் அல்ல; அறிவால் நிலவைத் தொட்டு விடுப வர்கள் என நிரூபித்துள்ளனர் இஸ்ரோ பெண் விஞ்ஞானிகள். சந்திரயான்-2 ஆராய்ச்சியில் பணிபுரிந்துவரும் விஞ்ஞானிகள் வனிதா முத்தையா, ரிது கரிதால் இருவரும் இதற்குச் சமீபத்திய உதாரணங்கள்.

ஜூலை 22 அன்று சந்திரயான் -2 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அறிவியல் துறையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இது கருதப்படுகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த செலவில் இந்த விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலவில் தரையிறங்கும் முதல் இந்திய விண் கலம் என்ற பெருமையையும் சந்திரயான் - 2 பெற்றுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பி ஆராய்ச்சிகள் மேற்கொண்ட பிறகு, ஏன் இந்தியாவின் சந்திரயான் – 2 இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?

மற்ற நாடுகள் மனிதர்களை அனுப்பியிருந்தாலும் இந்தியாவிலிருந்து கடந்த 2008-ம் ஆண்டு நிலவுக்கு  அனுப்பப்பட்ட சந்திரயான் -1 விண்கலம் நிலவிலிருந்து நூறு கி.மீ. தொலைவிலிருந்தே  நிலவில் நீர் உள்ளது என்பதைக் கண்டறிந்து உலகுக்கு முதன் முறையாகத் தெரிவித்தது. சந்திரயான் – 1 விண்கலம் மேற்கொண்ட ஆராய்ச்சியை மேலும் தீவிரமாக மேற்கொள்ளவிருக்கிறது சந்திரயான் – 2. அதற்காக சந்திரயான் – 2 விண்கலத்தில் மூன்று தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்றான தாய்க்கலன், நிலவில் மெதுவாகத் தரையிறங்கும். அதிலிருந்து இரண்டாம் கலன் ‘விக்ரம்’ தனித்துப் பிரியும். அதிலிருந்து மூன்றாம் கலனான ‘பிரக்யான்’, நிலவில் இறங்கி அங்குள்ள கனிம வளங்களை ஆராய்ச்சி செய்யவுள்ளது.
உலகைத் திரும்பிப் பார்க்கவைத்திருக் கும் சந்திரயான் – 2 விண்கலத்தின் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வனிதா முத்தையா. ரிது கரிதால், இதன் திட்டச் செயல்பாடுகள் துணை இயக்குநர். இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் முதன்முறையாக இவ்வளவு பெரிய திட்டத்தைப் பெண்கள் தலைமையேற்றுச் செயல்படுத்தியது இதுவே முதல் முறை. மேலும், சந்திரயான் – 2 விண்கலம் ஆராய்ச்சியில் ஈடுபட்ட வர்களில் 30 சதவீதத்தினர் பெண்கள்!

சிறந்த  பெண் விஞ்ஞானி

சென்னையைச் சேர்ந்த வனிதா முத்தையா, இஸ்ரோவில் திட்ட இயக்குந ராகப் பொறுப்பேற்ற முதல் பெண். மின்னணு அமைப்புப் பொறியியலில் பட்டம் பெற்றவர் வனிதா. 20 வயதிலேயே பெங்களூருவில் உள்ள யூ.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் பணியாற்றத் தொடங்கினார்.

கடந்த 20 ஆண்டுகளாக இஸ்ரோ திட்டத்தின்கீழ் பணியாற்றி வருகிறார். இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரைதான் தன்னுடைய முன்மாதிரி எனப் பல நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளார். டிஜிட்டல் சிக்னல் மூலம் தகவல்களைப் பரிமாற்றம் செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர் வனிதா. செயற்கைக்கோளிலிருந்து டிஜிட்டல் சிக்னல் மூலம் தகவல்கள் பெறுவது குறித்து எண்ணற்ற கட்டுரைகளை அவர் சமர்ப்பித்துள்ளார்.

‘அஸ்ட்ரனாடிகல் சொசைட்டி’என்ற அமைப்பின் சார்பில் 2006-ல்  வனிதா முத்தையாவுக்குச் சிறந்த பெண் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டது. செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய 2013-ல் ஏவப்பட்ட ‘மங்கள் யான்’ விண்கலத்தை உருவாக்கும் பணி யிலும் வனிதா முத்தையா பங்களித் திருக்கிறார். ‘கார்டோசாட் 1’ ‘ஓசன்சாட் 2’ உள்ளிட்ட விண்கலங்களிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார். இஸ்ரோவின் திட்ட இயக்குநராக 2018-ல் இவர் பொறுப்பேற்றார். தற்போது இவரது தலைமை யின்கீழ்தான் சந்திரயான்–2 சார்ந்த ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

ராக்கெட் பெண்

இஸ்ரோவில் பல பெண் விஞ்ஞானிகள் பணியாற்றினாலும் ‘ராக்கெட் பெண்’ என்ற தனித்த அடையாளத்துடன் நாடு முழுவதும் அறியப்பட்டவர் ரிது கரிதால். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் விண்வெளிப் பொறியியலில் பட்டம் பெற்றவர்.

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி விருதை 2007-ல் பெற்றவர். செவ்வாய் கோளுக்கு அனுப்பப்பட்ட ‘மங்கள்யான்’ விண்கல ஆராய்ச்சியில் சிறப்பாகப் பணியாற்றியதால் ரிது கரிதாலுக்கு இஸ்ரோவின் சார்பில் சிறந்த விஞ்ஞானி விருது வழங்கப்பட்டது. “சிறு வயதில் நான் படித்த அறிவியல் பாடங்கள்தாம் அறிவியல் மீதான என்னுடைய பேரார்வத்துக்குக் காரணம். உங்களுக்கு ஒரு விஷயத்தின் மீது ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக அது உங்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும்.

உங்களின் லட்சியத்துக்கு யார் தடையாக இருந்தாலும் நாம் விரும்பும் விஷயத்தில் கண்டிப்பாக வெற்றிபெறுவோம். பெண் குழந்தைகளை அறிவியல் படிக்க ஊக்கு வியுங்கள். நிச்சயம் அவர்கள் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பார்கள்” என்கிறார் ரிது.
நிலவில் தரையிறங்கவுள்ள விக்ரம், பிரக்யான் கலன் ஆகியவற்றின் பாகங் களைத் தயாரிப்பதில் ரிது முக்கியப் பங்காற்றியுள்ளார்.

நிலவின் மேற்பரப்பு ‘அனார்தோசைட்’ (Anorthosite) என்ற மண் துகள்களால் நிரம்பியுள்ளது. இந்த மண் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தம் பூண்டி, குன்னமலை ஆகிய கிராமங்களில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து ஐம்பது டன் அனார்தோசைட் மண் இஸ்ரோவுக்கு அனுப்பப்பட்டது. அங்கு நிலவில் தரையிறங்கும் பிரக்யான் கலனை இந்த மணலில் தரையிறக்கி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

நிலவில் பிரக்யான் ஊர்ந்துசெல்வதற்கான பணிகளையும் அது தொடர்பான செய்திகளை இஸ்ரோ வுக்கு அனுப்பும் பணிகளையும்  ரிது கரிதால் மேற்பார்வை யிடுவார். வனிதா முத்தையா, ரிது கரிதால் ஆகிய இரண்டு பெண்களின் திறமை நிலவில் எதிரொலிக்கவிருக்கிறது.

- எல்.ரேணுகாதேவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x