Published : 26 Jul 2019 06:23 PM
Last Updated : 26 Jul 2019 06:23 PM

ஒட்டமான் இருக்கைகள்

விபின் 

அறைக்கலன்களில் பல வகை இருக்கின்றன. வடிவமைப்பு, அது முதலில் பயன்பாட்டிலிருந்த நாடு போன்ற அம்சங்களின் அடிப்படையில் அவை பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் ஒட்டமான் (Ottoman). சோகூட், பூர்சா, இஸ்தான்புல் உள்ளிட்ட இன்றைய துருக்கிப் பகுதிகளைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ஒட்டமான் பேரரசு ஆட்சிக் காலத்தில் பயன்பாட்டில் இருந்ததால் இந்த அறைக்கலனுக்கு ஒட்டமான் எனப் பெயர் வந்தது. 

உதராணமாக இன்றைக்குத் தமிழ்ச் சொல்லாகிவிட்ட ‘மேஜை’, போர்த்துக்கீசியத்திலிருந்து வந்தது. காலனியக் காலத்தில் போர்த்துக்கீசியர்கள் பயன்படுத்திய ‘மேச’ என்னும் அறைக்கலன் நம் பயன்பட்டுக்கும் வந்தது. அதற்கான பெயரும் மூல மொழியான போர்த்துகீசியத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. அதுபோல் தமிழும் ஒரு பெயர்ச் சொல்லை ஆங்கிலத்துக்குக் கொடையளித்துள்ளது. நீர்நிலைகளில் மிதவையாகப் பயன்படுத்தும் கட்டுமரம் என்னும் சொல், காலனியக் காலத்தில் ஆங்கில மொழிப் பயன்பாட்டில் ‘Catamaran’ ஆகியிருக்கிறது. பல ஐரோப்பிய மொழிகளும் இதைச் சுவீகரித்துக்கொண்டுள்ளன.

இந்த ஒட்டமான் பேரரசுக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த அறைக்கலனுக்குச் சில தனித்துவம் உண்டு. இது சாய்வு இருக்கையும் கைப்பிடியும் அற்றது. மேலும், இதை இருக்கையாக மட்டுமின்றிப் பொருட்களை வைத்துக்கொள்ளும் அறைக்கலனாகவும் பயன்படுத்த முடியும். அதுபோல் இருக்கை மெத்தைவைத்துத் தைக்கப்படும். இது 18-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவியது. ஒட்டமானிலிருந்து வந்ததால் இது ஒட்டமான் என்றே அழைக்கப்பட்டது. பிறகு அந்தப் பெயரே நிலை பெற்றது. இந்த அறைக்கலனிலும் வடிவமைப்பைப் பொறுத்துப் பலவகை உள்ளன. 

கனசதுர ஒட்டமான்

கன சதுர வடிவமுள்ள இது படுக்கையறைக்கு ஏற்றது. ஸ்டூல் போன்ற வடிவமுள்ள இதன் மேல் புறத்தைத் திறந்து அதற்குள் துணிகளை வைத்துக்கொள்ள முடியும். இது ரூ.500லிருந்து கிடைக்கிறது.

காபி மேஜை ஒட்டமான்

இது காபி மேஜையாகப் பயன்படக்கூடியது. அதற்குக் கிழே செய்தித் தாள்கள், புத்தகங்கள் போன்ற பொருட்களை வைத்துக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. வடிவமைப்பு, பயன்படுத்தும் பொருட்கள் போன்றவற்றின் அடிப்படையில் இதன் விலை வேறுபடும்.

இழுப்பறை ஒட்டமான்

இந்த வகை ஒட்டமான் பொருட்களைச் சேகரிக்க இழுப்பறையுடன் வடிவமைக்கப்படுகிறது. இதை இருக்கையாகவும் பயன்படுத்த முடியும். இந்த இழுப்பறைக்குள் பேனா, கோப்புகள் போன்ற பொருட்களை வைத்துக்கொள்ளலாம். ரூ.2000லிருந்து கிடைக்கிறது.

கூடை ஒட்டமான்

மூங்கில் போன்ற மரப் பொருட்களைக் கொண்டு பின்னப்பட்ட ஒட்டமானும் இப்போது சந்தையில் கிடைக்கிறது. ஆனால், இதை இருக்கையாகப் பயன்படுத்துவது சிரமம். இதுவும் தயாரிப்பைப் பொறுத்துப் பல விலைகளில் கிடைக்கிறது. விலை ரூ. 500லிருந்து கிடைக்கிறது.  சணல் பொருட்களிலும் ஒட்டமான் கிடைக்கிறது.

செவ்வக வடிவ ஒட்டமான்

இந்த வடிவ ஒட்டமானை இரு இருக்கை சோபாவாகப் பயன்படுத்தலாம். இதற்குள்ளும் பொருட்களை வைத்துக்கொள்ள முடியும். வரவேற்பறை, புத்தக அறை போன்ற அறைகளில் பயன்படுத்துவதற்கு இவை ஏற்றவை. பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களைப் பொறுத்துப் பல வகைகளில் கிடைக்கிறது. இரு இருக்கை ஒட்டமான் தோலால் செய்யப்பட்டது ரூ.2,000லிருந்து கிடைக்கிறது.

மர ஒட்டமான்

இது பல வடிவங்களில் கிடைக்கிறது. இது முழுவதும் மரப் பலகையால் செய்யப்படுகிறது. இதையும் இருக்கையாகவும் துணிகள் வைக்கும் அறையாகவும் பயன்படுத்தலாம். இது ரூ. 1200லிருந்து கிடைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x