Published : 26 Jul 2019 05:10 PM
Last Updated : 26 Jul 2019 05:10 PM

காயமே இது மெய்யடா 43: தைராய்டு - பிரச்சினைகளும் தீர்வும்

போப்பு 

தொண்டையில் குரல்வளைக்குக் கீழ்ப் பகுதியில் மூச்சுக் குழலை மையமாகக் கொண்டு பட்டாம்பூச்சியின் இறக்கை விரிப்பைப் போல அமைந்திருக்கும் தைராய்டு எனும் நாளமில்லாச் சுரப்பு நீர், ரத்தத்தில் கலப்பதைப் பொறுத்து நம்முடைய உடலியக்கமும் புறத் தோற்றமும் தீர்மானிக்கப்படுகின்றன. பிட்யூட்ரியின் செயல்திறனுக்கு ஏற்ப தூண்டலுக்கு உள்ளாகும்  T -3 (Triiodothyroine) T - 4 (Thyroxine) ஆகிய சுரப்புகள் தைராய்டைச் சுரக்கச் செய்கின்றன. ரத்தத்தில் கலக்கும் தைராய்டின் அளவைப் பொறுத்து நமது இயக்கமும் தோற்றமும் அமைவதைப் போலவே ரத்தத்தில் உள்ள அயோடின் அளவைப் பொறுத்துத்தான் அது சுரக்கிற அளவும் தீர்மானிக்கப்படுகிறது.

குறை தைராய்டு

நாம் வாழும் பகுதி நிலத்திலிருந்து நீரில் சேரும் தாதுகளின் விகிதத்தைப் பொறுத்து ரத்தத்தில் அயோடினின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. உலகின் சில நிலப் பகுதிகளில் உள்ள தாதுக்களின் அளவு கூடுதல் குறைவாக இருப்பதால், ரத்தத்தில் உள்ள அயோடினின் அளவு பிட்யூட்ரியை உந்துவதற்குப் போதுமானதாக இல்லை. எனவே, தைராய்டும் போதிய அளவுக்குச் சுரப்பதில்லை.

தைராய்டு (hypo) குறைவாகச் சுரப்பதால் தசைகள் பலவீனமடைந்து அடிக்கடி உடற்சோர்வு ஏற்படும். உடற்சோர்வு ஏற்பட்டால்,  மென்தசைகளின் சுருங்கி விரியும் தன்மை குறைந்து மலம், சிறுநீர், வியர்வை போன்ற கழிவுநீக்கச் செயல்பாடுகள் மந்தமாகும். குறிப்பாக, மலச்சிக்கல் ஏற்படும்.  மலச்சிக்கலால் உடல் வெப்பம் இயல்பை இழந்து மற்றவர்களுக்கு ஏற்படாத குளிர் உணர்வு தைராய்டு குறைவாகச் சுரப்பவர்களுக்கு ஏற்படும்.
உள்ளும் புறமும் குளிர்ச்சி மிகுந்திருப்பதாலேயே (வளர்) சிதை மாற்றத்தில் (metabolism) குளறுபடி ஏற்பட்டு விரும்பத்தகாத வகையில் எடை அதிகரிக்கும்.

இயல்புக்கு மாறான எடை உயர்வால் தோலில் வறட்சியும் தடிப்பும் நிலைத்துவிடும். சிலருக்குத் தோல் தடித்து விடுவதோடு மரு போன்ற கருப்பான முடிச்சுகளும் குறிப்பாகத் தோள், கழுத்துப் பகுதிகளில் தோன்றும்.  இளம் பெண்களுக்கு நாடி, மூக்கின் கீழ்ப்பகுதி போன்ற இடங்களில் முடி முளைத்தல் போன்ற இடையூறுகளும் ஏற்படலாம்.

தைராய்டு குறைவாகச் சுரக்க நிலம் – நீர்க் காரணிகளோடு உண்ணும் உணவில் தாதுச் சத்துக்கள் குறைவாக இருப்பதும் முதன்மைக் காரணியாகும். குறிப்பாகக் கீரை, காய்கறிகளை எடுக்காததும் அயோடின் பற்றாக் குறைக்குக் காரணமாக இருக்கலாம். மாவுச் சத்துக்கள், மிகைச் சுவை உணவைத் தொடர்ந்து எடுத்து வரும்போது தன்னியல்பாகவே தாது சத்துகள் உள்ள உணவை எடுப்பதில் நாட்டக் குறைவு ஏற்படும்.

மிகை தைராய்டு

கடற்கரைப் பகுதியில் வசிப்போரிடம் அடிக்கடி ஏற்படும் தைராய்டு பிரச்சினைகள் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில்தான் தைராய்டு சுரப்புக்காக உப்பில் அயோடினைச் சேர்க்குமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்தது.  ஆனால், முன்னர் நீடித்துவந்த தைராய்டு பற்றாக்குறைக்கு மாறாக உப்பில் அயோடின் கலக்கப்பட்ட பின்னர் மிகை தைராய்டு பிரச்சினை தலைதூக்கத் தொடங்கியுள்ளது.

உடலில் மிகைச்சத்துக்களாலோ மருந்து, உணவு ஆகியவற்றின் மூலம் உடலில் சேர்ந்த வேதிச் சேர்க்கையின் வாயிலாகவோ கூடுதலாக உந்தப்பட்ட தைராய்டு சுரப்பு (hyperthyroid) இயல்புக்கு மாறான விளைவுகளை ஏற்படுத்துகிறது. பதற்றம், எரிச்சல், எதையும் சீக்கிரம் முடித்தாக வேண்டும் என்ற விரைவுணர்ச்சி, கை விரல்களில் நடுக்கம், சருமத்தின் மேற்பரப்பு எப்போதும் சூடாக இருத்தல், தலைமுடி உதிர்தல் போன்றவை ஆண், பெண் இருவருக்குமே ஏற்பட வாய்ப்பு உண்டு. குறிப்பாகப் பெண்களுக்கு உதிரப்போக்குத் தள்ளிப் போகவோ அடிக்கடி நிகழவோ வாய்ப்பு உண்டு.

நகப்பூச்சு, தலைச்சாயம், வாசனைத் திரவியங்கள் பயன்பாடு போன்ற அதீத ரசாயன நுகர்வும் தைராய்டின் மிகைத் தூண்டலுக்குக் காரணமாகக் கூடும் என்கின்றனர் உடலியலாளர்கள். பின்னிரவு வரை விழித்திருப்பதன் வாயிலாக உடலில் வெப்பம் மிகுந்து அதன் காரணமாகவும் தைராய்டு கூடுதல் தூண்டலுக்கு உள்ளாகக்கூடும்.  தைராய்டு சுரப்பு உடலின் வேறு பல சுரப்புகளுடனும் தொடர்புடையது என்பதால் அதை இயற்கைக்கு மாறாக வெளியிலிருந்து கட்டுப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எதிர்பாராத விளைவுகளையே ஏற்படுத்தும். தைராய்டு அளவைக் கட்டுக்குள் வைப்பதற்காக எடுக்கும் மருந்தை நிரந்தரமாக எடுக்கத் தொடங்கினால் உடலில் இதுவரை இல்லாத விளைவுகள் ஏற்படத் தொடங்கிவிடும்.

என்ன செய்ய வேண்டும்?

தைராய்டு சுரப்பை உரிய அளவுக்குள் வைத்திருக்க வேண்டும்தான். அதற்கு நாம், சுரப்புகளின் மூலாதாரமாக விளங்கும் நீர் மூலகமான சிறுநீரகத்தையும் அதனிடம் ஆற்றலைப் பெற்று இயங்கும் கல்லீரலையும் முழுத்திறனுடன் இயங்கும்படி செய்ய வேண்டும்.  ஆனால், நம்முடைய நவீன வாழ்க்கைமுறையில் காலையில் பல் துலக்கும் பற்பசையில் தொடங்கி புனிதமானது என்று நம்பப்படுகிற பால் வரைக்கும் ரசாயனக் கலப்பற்றவை என்று எதுவுமே இல்லை. இதன் காரணமாக, சிறுநீரகமும் கல்லீரலும் முழு ஆற்றலுடன் இயங்க முடியாமல் போவதால், தைராய்டு உட்பட எந்தச் சுரப்பும் இயல்பாகச் சுரப்பதில்லை.

உடலுக்கு ஏற்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்வது முடிந்த அளவு இரவுத் தூக்கத்தைத் தவிர்க்காமல் இருத்தல் போன்ற இயற்கை வாழ்க்கை முறையைத் தொடர் வதன் மூலமாக சுரப்புகளைச் சீரான நிலையில் வைத்து உடல்நலனை மேம்படுத்த முயல வேண்டும். தொடர்ந்து சிறுநீரகத்தின் முதன்மைத் துணை உறுப்பாகிய சிறுநீர்ப்பையில் தோன்றும் தொல்லைகள் குறித்தும் அவற்றைக் களையும் முறை குறித்தும் பார்ப்போம்.

(தொடரும்...)
கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x