Published : 24 Jul 2019 11:53 AM
Last Updated : 24 Jul 2019 11:53 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: நீரோவின் வயலின்

மருதன் 

ரோம் நகரம் பற்றி எரிந்துகொண்டிருந்தபோது நீரோ என்ன செய்துகொண்டிருந்தார்? தனது மாளிகையின் உச்சியில் நின்றுகொண்டு, சிவப்பு நிறத்தில் கொழுந்து விட்டு எரியும் பெருந்தீயைப் பார்த்து ரசித்துக்கொண்டே வயலின் வாசித்துக்கொண்டிருந்தார். எல்லோருக்கும் தெரிந்த நிகழ்வு இது. நீரோ என்றாலே நெருப்பும் இசையும்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இது உண்மைதானா? வரலாற்றில் இதற்கு ஆதாரம் இருக்கிறதா?
நெருப்பிலிருந்து தொடங்குவோம்.

ரோமில் தீ விபத்து ஏற்பட்டது உண்மையா? ஆம், தேதி முதற்கொண்டு சொல்கிறார்கள். 18 ஜூலை 64 அன்று இரவு நேரம், ரோமில் பெரும் தீ மூண்டது. எங்கிருந்து, எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ஆனால், வீசிய பலமான கோடைக் காற்றில் வேகமாக நாலாபுறமும் தீ பரவத் தொடங்கிவிட்டது. மரத்தைக்கொண்டே அப்போது பெரும்பாலான வீடுகள் கட்டப்பட்டன என்பதால் ஒரு வீட்டில் பரவிய நெருப்பை அணைப்பதற்குள் அங்கிருந்து இன்னொன்றுக்கு, பிறகு மற்றொன்றுக்கு என்று ஊர் முழுக்கப் பரவி, எரிய ஆரம்பித்துவிட்டது.

ரோமைப் புரட்டிப் போட்ட இந்தப் பெரும் நெருப்பு குறித்து டாசிடஸ் என்னும் வரலாற்றாசிரியர் பதிவு செய்திருக்கிறார். கிளாடியஸ், நீரோ என்று பல ஆட்சியாளர்களைப் பற்றி இவர் எழுதியிருக்கிறார். தீயின் கோபம் தீருவதற்கு ஐந்து முழு நாட்கள் தேவைப்பட்டன என்கிறார் டாசிடஸ். அப்படியானால் எத்தனை மனிதர்களை, வீடுகளை, வீதிகளை, உடைமைகளை அது அழித்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். நமக்குக் கிடைத்திருக்கும் குறிப்புகளின்படி, ரோமில் இருந்த 14 மாவட்டங்களில் 3 முழுவதுமாக அழிந்துவிட்டன. ஏழு மாவட்டங்கள் பெருத்த சேதத்தைச் சந்தித்தன. துல்லியமான இழப்பு எண்ணிக்கை தெரியவில்லை.

இது நடந்தபோது ரோமாபுரியை ஆண்டுவந்தவர் நீரோ. 37-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நீரோ, 68 வரை அதிகாரத்தில் இருந்திருக்கிறார். தேடினால் இவரைப் பற்றி ஏராளமான வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கின்றன. டாசிடஸ் போன்று அவர் காலத்திலேயே வாழ்ந்தவர்களும் சரி, பிறகு நீரோவை ஆராய்ந்தவர்களும் சரி; நீரோதான் நெரருப்பைப் பற்ற வைத்தார் என்று ஒருவரும் குறிப்பிடவில்லை. சரி, நகரம் எரிந்தபோது நீரோ வயலின் வாசித்ததற்காவது ஆதாரம் இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. அப்படியானால் எங்கிருந்து வந்தது இந்தச் செய்தி? இது செய்திதானா அல்லது தீயைக் காட்டிலும் வேகமாகப் பரவும் ஆற்றல் கொண்ட வதந்தியா?

இந்தக் கேள்விக்குப் பதில் வேண்டுமானால் பெரும் நெருப்புக்குப் பிறகு நீரோ என்ன செய்தார் என்று பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதியைப் பணியாளர்களை வைத்து உடனடியாகச் சுத்தம் செய்திருக்கிறார். சூட்டோடு சூடாக கட்டுமானப் பணிகளையும் ஆரம்பித்துவிட்டார். கட்டுமானம் என்றால் வீட்டை இழந்த மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் பணி என்று நினைத்துவிடாதீர்கள். ஏற்கெனவே இருந்த பெரிய அரண்மனையை மேலும் விரிவாக்கிக்கொள்வதே அவர் திட்டம். மற்றொரு பக்கம், தனக்குப் பிடிக்காதவர்களை, தன்னை எதிர்ப்பவர்களை, மாற்று மதத்தினரைக் கைது செய்து, நெருப்பு மூட்டியது நீங்கள்தான் என்று அநியாயமாக அவர்கள்மீது குற்றம் சுமத்தி, கடுமையாகத் தண்டித்தார். பலர் கொல்லப்பட்டதும் உண்மை.

ரோம் கொதித்துப் போனது. என்ன மன்னர் இவர்? வீடு போய்விட்டதே, வாழ்க்கை அழிந்துவிட்டதே என்று நாம் தவித்துக்கொண்டிருக்கிறோம். இவர் என்னவென்றால் ரோமைத் தின்றுத் தீர்த்த நெருப்பை வைத்துக் குளிர் காய்ந்துகொண்டிருக்கிறார்! உங்கள் வீடு எக்கேடு கெட்டாலும் எனக்குப் பிரச்சினை இல்லை என்று புத்தம் புதுப் பொலிவோடு அரண்மனையை விரிவாக்கிக்கொண்டிருக்கிறார். நான், என் அரண்மனை, என் பதவி, என் செல்வம், என் அதிகாரம். இதுதான் நீரோ. ஒரு பாவமும் செய்யாதவரை நெருப்புக்குப் பொறுப்பாக்கிக் கொல்ல வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு மனிதத்தன்மையே இல்லாதவராக அல்லவா இவர் இருக்கிறார்?

கோபமும் சோகமுமாக மக்கள் கலங்கி நின்றுகொண்டிருந்தபோது, யாரோ ஒருவருக்கு அந்த யோசனை தோன்றி இருக்க வேண்டும். ஆள் பலமும் அதிகார பலமும் மிக்க ஒரு கொடுங்கோலனை எதிர்க்க நாம் ஏன் ஒரு சின்னஞ்சிறிய தீப்பொறியை உருவாக்கக் கூடாது? காலாகாலத்துக்கும் அவரைக் கலங்கடிக்க வைக்கும் அளவுக்குப் பலமிக்கதாக அந்தத் தீப்பொறியை நாம் ஏன் ஒன்று சேர்த்து வளர்த்துவிடக் கூடாது? முதல் பொறியை ஒருவர் பறக்கவிட்டார்.

‘உங்களுக்குத் தெரியுமா? ரோம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னர் வயலின் வாசித்துக்கொண்டிருந்தார்!‘
‘ஹாஹா, இதை ஊர், உலகம் நம்பாது’ என்றார் நீரோ. அந்தச் சின்ன பொறி பரவ ஆரம்பித்தது. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு. ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு. ஒரு வீதியிலிருந்து இன்னொன்றுக்கு. நீரோவா? அவர் அப்படி எல்லாம் செய்யக்கூடியவர் கிடையாதே என்று ஒருவரும் சந்தேகிக்கவில்லை. நீரோ அசையவில்லை. நான் வயலின் வாசித்ததை யாராவது பார்த்தீர்களா? இப்படி எல்லாம் வதந்தியைப் பரப்பினால் தொலைத்துவிடுவேன் தொலைத்து!

மக்கள் அஞ்சவில்லை. நன்றாக ஊதி ஊதி தீயை வளர்த்து எடுத்தார்கள். ரோமைக் கடந்து உலகம் முழுக்கப் பெரும் புயல்போல் தீ பரவியபோது நீரோ அலறினார். நம்பாதீர்கள், நம்பாதீர்கள், இது வதந்தி. வயலின் என்ற ஒன்றை நான் கண்ணால்கூடக் கண்டதில்லை. அது எனக்கு வெகு காலத்துக்குப் பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆம், எனக்கு இசை பிடிக்கும். நான் சில வாத்தியங்கள் வாசிப்பேன். ஆனால், ரோமை நெருப்புப் பற்றிக்கொண்டபோது அதை நான் மாளிகையிலிருந்து வேடிக்கை பார்க்கவில்லை.

கண்டு மகிழவும் இல்லை. நிச்சயமாக வயலின் வாசிக்கவில்லை! ஆம், இது வதந்தி என்று அப்போதே எழுதியும் வைத்தார் வரலாற்றாசிரியர் டாசிடஸ். யாராவது கேட்டால்தானே? மற்றவர்களின் துயரைப் பொருட்படுத்தாதவரை இன்றும் உலகம் நீரோ என்றுதான் அழைக்கிறது. ரோமை அழித்த நெருப்புகூட சில தினங்களில் அழிந்துவிட்டது. ஆனால், மக்கள் மூட்டிய நெருப்போ 2,000 ஆண்டுகளைக் கடந்தும் இன்னமும் எரிந்துகொண்டிருக்கிறது. நம்பாதீர்கள், நம்பாதீர்கள் என்னும் நீரோவின் அலறலைக் காலம் மூழ்கடித்துவிட்டது!

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x