Published : 24 Jul 2019 10:47 AM
Last Updated : 24 Jul 2019 10:47 AM

திறந்திடு சீஸேசம்: நெப்போலியனின் தங்கப் புதையல்

முகில் 

ஸ்வீடன் நாட்டு மன்னர் பன்னிரண்டாம் சார்லஸ், கி.பி.1708-ல் சுமார் 40,000 வீரர்களுடன் ரஷ்யா மீது படை எடுத்துச் சென்று தோல்வியுடனேயே நாடு திரும்பினார். பிரான்ஸ் சக்கரவர்த்தி நெப்போலியன், கி.பி.1812-ல் ரஷ்யா மீது படையெடுத்துச் சென்று, பல களங்களில் வென்று, இறுதியில் பெரும் உயிர்ச் சேதத்துடனேயே சொந்த மண்ணுக்குத் திரும்பினார். அடால்ஃப் ஹிட்லர், இரண்டாம் உலகப்போரில் ‘ஆபரேஷன் பார்பரோஸா’ என்ற பெயரில் ரஷ்யாவை வீழ்த்த நாஜிப் படைகளை அனுப்பினார்.

ஆரம்பத்தில் ஜெர்மனிக்குப் பல வெற்றிகள் கிடைத்தாலும் இறுதியில் அது தோல்விமுகத்துடன் புறமுகுகிட்டு ஓடித்தான் வந்தது. இந்த மூன்று முக்கியமான போர்களிலும் ரஷ்யா வீழாமல் காத்தது அதன் படைபலம் அல்ல. பனிபலம். ஆம், அந்த நாட்டின் கோரமான குளிர்தான் எதிரிகளின் உயிரை உறையவைத்து ஓட ஓட விரட்டியது.
நெப்போலியன், ரஷ்யாவுக்குப் படையெடுக்கும் முன் தெளிவாகத்தான் திட்டமிட்டிருந்தார். ஜெனரல் ராபர்ட் தாமஸ் வில்சன் (ரஷ்ய ஜார் மன்னருக்கு ராணுவ ஆலோசகராக இருந்தவர்) எழுதிய ரஷ்ய ராணுவம் குறித்த புத்தகம் ஒன்றையும், ரஷ்யாவின் வரலாறு குறித்த புத்தகங்களையும் மீண்டும் மீண்டும் வாசித்து அறிவை விரிவுபடுத்திக்கொண்டார்.

ஸ்வீடன் மன்னர் சார்லஸின் ரஷ்ய யுத்தக் குறிப்புகளைப் படித்து, அவர் சறுக்கிய இடங்கள் எவை என்பதையும் ஆராய்ந்தார். லட்சம் பிரெஞ்சு வீரர்களைப் புதிதாகப் படையில் சேர்த்தார். பிரஷ்யா, இத்தாலி, ஆஸ்திரியாவுடன் ரகசிய ஒப்பந்தங்கள் போட்டுக்கொண்டு, உணவு, படை உதவிகளைப் பெற்றுக்கொண்டார்.
‘இப்போது ஜூன். ரஷ்யாவில் கடும்குளிர் காலம் ஆரம்பிக்க இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. ரஷ்யாவுக்குள் புகுந்து மாஸ்கோ வரை முன்னேறி, அதனை நசுக்க மூன்று மாதங்கள் போதும். மீதமிருக்கும் ஒரு மாதத்தில், அதாவது அக்டோபரின் இறுதிக்குள் வெற்றி நடை நடந்து வீடு வந்து சேரலாம்’ என்று நெப்போலியன் கணக்குப் போட்டார். 1812 ஜூன் 24-ல் படைகளுடன் ரஷ்யா நோக்கிக் கிளம்பினார்.

ஆரம்பம் முதலே களத்தில் பிரான்ஸின் ஆதிக்கம்தான். ரஷ்யப் படைகள் எதிர்நின்று போரிடாமல் உள்நோக்கி ஓடிக்கொண்டே இருந்தன. செப்டம்பர் 14 அன்று பிரெஞ்சுப் படைகள் மாஸ்கோவுக்குள் நுழைந்தன. கடும் எதிர்ப்பு இருக்கும். பெரும் போராட்டம் இருக்கும் என்று நினைத்த நெப்போலியன் அதிர்ந்து நின்றார். ஏனென்றால், மாஸ்கோ நகரமே பற்றி எரிந்துகொண்டிருந்தது. ‘எதிரிகளுக்குக் குடிக்க நீரோ, உணவோ எதுவும் கிடைக்கக் கூடாது. தீயிட்டுக் கொளுத்துங்கள்’ என்று ரஷ்ய மன்னர் முதலாம் அலெக்சாண்டர் கட்டளையிட்டதன் விளைவு அது.

ரஷ்ய மன்னரோ, வீரர்களோ, பொதுமக்களோ எதிர்ப்பதற்கு யாரும் அங்கே இல்லை. சுமார் ஒரு மாதம் நெப்போலியன் மாஸ்கோவில் முகாமிட்டிருந்தார். அங்கே கிடைத்த செல்வங்களை எல்லாம் பிரெஞ்சுப் படைகள் கொள்ளையடித்தன. ஆனால், போதுமான உணவும் நீரும் இல்லை. பனி பெய்யத் தொடங்கியிருந்தது. வேறுவழியின்றி பிரான்ஸுக்குத் திரும்ப முடிவெடுத்தார் நெப்போலியன்.

கொள்ளையடித்த செல்வங்களில் தங்கம் அதிகம். ‘தங்கத்தாலான ஆபரணங்கள், பொருட்கள் அனைத்தையும் உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றுங்கள்’ என நெப்போலியன் கட்டளையிட்டார். சுமார் 80 டன் தங்கக் கட்டிகள் உருவாக்கப்பட்டன. அவற்றைப் பிரான்ஸுக்குக் கொண்டு செல்வதற்கென ஏறத்தாழ இருநூறுக்கும் மேற்பட்ட வண்டிகள் தயார் செய்யப்பட்டன. பிரான்ஸை நோக்கிக் கிளம்பினார்கள். பனி பெய்துகொண்டே இருந்தது.

மாஸ்கோவிலிருந்து மேற்கே சுமார் 300 கி.மீ. பயணம் செய்து செம்லெவோ என்ற கிராமத்தை அடைந்தபோது, பிரெஞ்சுப் படைகளின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. உயிர்க்கொல்லி குளிரினால் ஆயிரக்கணக்கான வீரர்களும் குதிரைகளும் இறந்து போயிருக்க, தங்கம் சுமந்த வண்டிகளைத் தள்ள ஆள் இல்லை. 

நெப்போலியன் ஒரு முடிவெடுத்தார். ‘செம்லெவோ ஏரியில் இந்தத் தங்கத்தை ரகசியமாகப் புதைத்துவிடுங்கள். காலம் கனியும்போது வந்து எடுத்துக்கொள்ளலாம்’ என்று கட்டளையிட்டார். அப்படியே செய்தார்கள். சுமார் ஆறு லட்சம் வீரர்களுடன் ரஷ்யா நோக்கிக் கிளம்பிய நெப்போலியன், சில ஆயிரம் வீரர்களுடன் பிரான்ஸுக்கு வந்து சேர்ந்தார். மீண்டும் அவர் ரஷ்யாவுக்குச் செல்லும் வாய்ப்பே அமையவில்லை.

1820-களில் செம்லெவோ ஏரிக்கரைப் பகுதியில் பிரெஞ்சுப் படைகள் கைவிட்டுச் சென்ற ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் ரஷ்யர்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். 1830 முதலே செம்லெவோ ஏரியில் நெப்போலியன் புதைத்த தங்கத்தைத் தேடும் பணி ஆரம்பமாகிவிட்டது. சோவியத் அரசாங்கம் பலமுறைத் தேடிச் சலித்தது. ராணுவ வீரர்கள், ஆய்வாளர்கள், புதையல் கண்டுபிடிப்பாளர்கள், அரசாங்கப் படையினர் என்று வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு தரப்பினரும் அதைத் தேடிக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஏரிப் பகுதியில் வெடிவைத்துத் தகர்த்துக்கூடப் பார்த்துவிட்டார்கள். இதுவரை எதுவும் கிடைக்கவில்லை.

எனில், நெப்போலியன் நிஜமாகவே தங்கத்தை செம்லெவோ ஏரியினுள்தான் புதைத்தாரா? என்ன ஆதாரம்? ரஷ்யப் போரில் பங்கேற்ற நெப்போலியனின் தளபதிகளில் ஒருவரான ஃபிலிப்பே பவுல் தி ஸெகூர் என்பவரது டைரி குறிப்பில் தங்கப் புதையல் செம்லெவோ ஏரியில் புதைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த நாவலாசிரியரான சர் வால்டர் ஸ்காட், 1825-ல் எழுதிய நெப்போலியன் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்திலும் இந்தப் புதையல் குறித்த செய்திகள் உள்ளன.

அந்தக் குளிரில், பனிபொழியும் நாட்களில் ஏரியினுள் பெரும் பள்ளம் தோண்டி, எட்டு டன் தங்கத்தைப் புதைப்பது இயலவே இயலாத காரியம். இந்தத் தங்கப் புதையல் விஷயமே பொய்தான் என்று சில வரலாற்றாளர்கள் வாதிடுகிறார்கள். ரஷ்யாவில் இப்போது வாழும் வரலாற்றாளரான ரைஸ்கொவ் (Viacheslav Ryzhkov) என்பவர், 2019-ன் ஆரம்பத்தில் புதிய தகவல் ஒன்றை முன்வைத்தார்.

செம்லெவோ ஏரியில் நெப்போலியனின் தங்கப் புதையல் புதைக்கப்படவே இல்லை. பிரெஞ்சுப் படைகளை ரகசியமாகப் பின்தொடர்ந்து வந்த ரஷ்ய ஒற்றர்களைத் திசைதிருப்பவே செம்லெவோவில் புதையல் மறைக்கப்பட்டதாக நெப்போலியன் நாடகம் ஆடினார். ஃபிலிப்பேவின் டைரிகுறிப்பும் புதையலைப் பாதுகாக்கச் சொல்லப்பட்ட பொய்யே. உண்மையில் அந்தத் தங்கப் புதையல் அங்கிருந்து 40 மைல்கள் தள்ளியிருக்கும் ருட்னியா என்ற ஊரில் அமைந்த Bolshaya Rutavech என்ற ஏரியில்தான் புதைக்கப்பட்டிருக்கிறது என்று ரைஸ்கொவ் வாதிடுகிறார்.

ருட்னியா அவரது சொந்த ஊரும்கூட. ரைஸ்கோவ் இன்னும் தன் வாதத்தை முறையாக நிரூபிக்கவில்லை.
பிரெஞ்சுப் படைகள் மாஸ்கோவைக் கொள்ளையடித்தது நிஜம். செல்வங்களை நெப்போலியன் பிரான்ஸுக்குக் கொண்டு செல்ல நினைத்ததும் உண்மை. அது பிரான்ஸுக்கும் வந்து சேரவில்லை. ரஷ்யர்களும் கண்டெடுக்கவில்லை. எனில் எங்கே போனது நெப்போலியனின் தங்கப் புதையல்?

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x