

ம.சுசித்ரா
பண்பாட்டிலும் மொழியிலும் பன்மைத்தன்மை கொண்ட நாடு இந்தியா. இந்நாட்டின் மாணவர்கள் அவரவர் பிரதேசத்தின் இலக்கியங்களைத் தாண்டி பிற பண்பாட்டுச் சூழலைச் சேர்ந்த இலக்கியப் படைப்புகளைத் தெரிந்துகொள்வது அவர்களுடைய அறிவின் எல்லையை விரிவுபடுத்த உதவுமல்லவா! அப்படியான நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது, ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டி பதிப்பகத்தின் (ஓ.யூ.பி.), ‘வேர்ட்ஸ்கேப்ஸ்’ (Wordscapes) புத்தகம்.
தமிழ், வங்கம், கன்னடம், மராத்தி, இந்தி, உருது, மலையாளம் ஆகிய மொழிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், நாவல்கள் உள்ளிட்டவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இப்புத்தகம் படைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இப்புத்தகத்தை அங்கீகரித்துள்ளது. அப்பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அத்தனை கல்லூரிகளின் இளநிலை ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடப் புத்தகமாகத் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை ஈர்க்கும் படைப்புகள்
மாணவர்களுக்குக் கொண்டுசேர்க்கும் திட்டங்களை வகுத்து இப்புத்தகத்தின் வடிவமைப்பில் பெரும்பங்காற்றியவர் கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியையாகப் பணியாற்றிவரும் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியின் ஆங்கிலத் துறை துணைப் பேராசிரியர் முனைவர் ஜகதீஸ்வரி. “உலகின் தலைசிறந்த இலக்கியப் படைப்புகள் பல மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், அவற்றை மாணவர்களை ஈர்க்கும் வடிவில் மாற்றுவது என்பது சவாலான காரியமே. எங்கோ, எப்போதோ எழுதப்பட்ட விஷயத்தைத் தங்களோடு தொடர்புபடுத்திப் புரிந்துகொள்ளத் தேவையான தகவல்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘வேர்ட்ஸ்கேப்ஸ்’ புத்தகத்தில் பாரதியாரின் ‘காற்று’ கவிதை, ஆர். சூடாமணியின் ‘தோழமை’ சிறுகதை, ஆர்.ஷண்முகசுந்தரம் எழுதிய ‘நாகம்மாள்’ நாவல், சிவகாமியின், ‘நிலம்: பெண்களின் மூச்சும் பேச்சும்’ கட்டுரை, பிரபஞ்சனின் சிறுகதையான ‘பிரும்மம்’ ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்து இணைத்துள்ளோம்” என்கிறார் ஜகதீஸ்வரி.
இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ‘நாகம்மாள்’ நாவலை மொழிபெயர்த்தவர் சென்னை பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறைத் தலைவரான முனைவர் பாரதி ஹரிஷங்கர். கல்லூரி மாணவர்கள் படிப்பதற்குத் தோதாக ’நாகம்மாள்’ நாவலின் சுருக்கம் மட்டுமே ‘வேர்ட்ஸ்கேப்ஸ்’ புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் முழுநீள மொழிபெயர்ப்பானது, காலச்சுவடு பதிப்பகத்தால் ‘Nagammal’ என்ற தலைப்பில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
செயல்வழிப் புத்தகம் “ஓ.யூ.பி.யுடன் சேர்ந்து நான் உருவாக்கியிருக்கும் மூன்றாம் மொழிபெயர்ப்புப் புத்தகம் இது. 2015-ல் வடிவமைக்கப்பட்ட, ‘WordWorlds’ புத்தகம் கேரளப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தற்போது ‘Wordscapes’ புத்தகத்தைப் பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பல மொழியினர் வாழும் நாடாக இந்தியா இருந்தாலும், நமக்குப் பல மொழிகள் தெரிந்திருப்பதில்லை. அப்படியிருக்கும்போது வேற்று மொழியின் இலக்கியங்களை மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தும்போது சிலவற்றைக் கவனத்தில்கொள்ள வேண்டியிருந்தது.
முதலாவதாக வழக்கமான பாடப்புத்தகமாக மட்டுமின்றி செயல்வழிப் புத்தகமாகவும் இதை வடிவமைத்தோம். செயல்வழி எனும்போது புதிய மொழி, வரலாறு, பண்பாட்டுச் சூழலுக்குள் மாணவர்களை அழைத்துவரத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை அல்லது கவிதை தொடர்பான அன்றாட வாழ்க்கை உதாரணங்கள், மூல நூலாசிரியர் பற்றிய குறிப்பு, மொழிபெயர்ப்பாளர் குறித்த குறிப்பு ஆகியவற்றுக்குப் பிறகுதான் பாடப் பகுதி விளக்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் சுயமாக இப்புத்தகத்தை ரசித்து அனுபவித்து வாசிக்க முடியும்” என்கிறார் பாரதி.
நுண்ணுணர்வு வேண்டும்
ஒரு மொழிபெயர்ப்பாளராக அவருடைய அனுபவம் குறித்துக் கேட்டபோது, “1942-ல் ஷண்முகசுந்தரம் எழுதிய நாவல் ‘நாகம்மாள்’. நில உரிமையைக் கோரும் துணிச்சலான ஒரு கைம்பெண்ணின் கதை. ஆண் நாவலாசிரியர் ஒருவர் தமிழில் எழுதிய முதல் பெண்ணிய நாவல் இதுவென்றே சொல்லலாம். அரை நூற்றாண்டுக்கும் முன்னால் எழுதப்பட்ட கொங்கு பகுதி கதை என்பதால் சாதியப் பெயர்கள் இதில் சரளமாகக் காணப்பட்டன. சமூக அரசியல் நுண்ணுணர்வுடன் அவற்றை மொழிபெயர்க்க வேண்டி இருந்தது.
அதேபோல நாட்டார் வழக்கில் சில சொல்லாடல்கள், சொற்பிரயோகம் வரும்போது அவற்றை மொழிபெயர்க்காமல் அப்படியே ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்ப்பு (transliteration) செய்திருக்கிறேன். குறிப்பாக, மூலநூல் எத்தனை பக்கங்களில் எழுதப்பட்டிருந்ததோ கூடுமானவரை மொழிபெயர்ப்பு நூலையும் அதே எண்ணிக்கையில் உருவாக்க முயன்றேன். இதுபோன்ற விஷயங்களை முடிவெடுக்கும் தருணங்களில் இப்புத்தகத்தின் தொகுப்பாசிரியரின் வழிகாட்டல் பெரிதும் உதவிகரமாக இருந்தது” என்கிறார்.
பள்ளி மாணவர்களுக்கு அறவியலைப் பயிற்றுவிக்கும் ‘லிவ்விங் இன் ஹார்மனி’ உள்ளிட்ட நூல்களுக்குத் தொகுப்பாசிரியராகப் பங்காற்றிய ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பதிப்பகத்தின் மொழிபெயர்ப்புப் பிரிவு தொகுப்பாசிரியர் மினி கிருஷ்ணன். அவர் கூறுகையில், “14 இந்திய மொழிகளில் இடம்பெற்றுள்ள கதை, நாடகம், கவிதை, வாழ்க்கைச் சரித்திரம், புனைவு, அபுனைவு உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை ஓ.யூ.பி. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுவருகிறது.
அதிலும் கல்லூரி மாணவர்களின் கல்விக்காக இப்பணியைப் பேராசிரியைகளோடு கைகோத்து முன்னெடுத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகக் கல்வித் துறையும் எங்களுக்கு நேர்மறையான ஒத்துழைப்பு நல்கிவருவதால் மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் உன்னதத்தை இளம் தலைமுறையினர் உணரத் தொடங்குவார்கள்” என்கிறார்.