Published : 23 Jul 2019 12:04 PM
Last Updated : 23 Jul 2019 12:04 PM

கடந்த வாரம்: சேதி தெரியுமா?

தொகுப்பு: கனி 

விம்பிள்டன்: பட்டம் வென்ற ஜோகோவிச்

ஜூலை 14: லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றார். இது ஜோகோவிச் வெல்லும் ஐந்தாவது விம்பிள்டன் பட்டம். அத்துடன், இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்திருக்கிறது. 

அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து

ஜூலை 16: அஞ்சல் துறை பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வுகள் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடைபெற்றன. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் இந்தத் தேர்வு நடைபெற வேண்டும் என்றும், இரண்டு மொழிகளில் மட்டும் நடைபெற்ற தேர்வை ரத்துசெய்ய வேண்டுமென்றும் மாநிலங்கவையில் தமிழகத்தின் தி.மு.க, அ.தி.மு.க உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து, மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அஞ்சல் துறைத் தேர்வுகளை ரத்து செய்வதாக மாநிலங்கவையில் அறிவித்தார். தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் தேர்வுகள் புதிதாக நடைபெறும் என்று அவர் அறிவித்தார். 

சத்தீஸ்கர், ஆந்திராவுக்குப் புதிய ஆளுநர்கள்

ஜூலை 16: மாநிலங்களவை உறுப்பினர் அனுசுயீயா உயிகே, மூத்த பா.ஜ.க. தலைவர் பிஷ்வ பூஷண் ஹரிசந்தன் ஆகியோர் முறையே சத்தீஸ்கர், ஆந்திர பிரதேச மாநிலங்களின் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்துடன், இமாச்சல பிரதேசத்தின் ஆளுநராக ஜூலை 15 அன்று மூத்த பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான கல்ராஜ் மிஷ்ரா நியமிக்கப் பட்டுள்ளார். இமாச்சல பிரதேசத்தின் ஆளுநராக இருந்த ஆச்சார்ய தேவ்விரத், குஜராத் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

மரண தண்டனை: மறுபரிசீலனை செய்ய உத்தரவு

ஜூலை 17: இந்தியாவுக்காக உளவுப் பார்த்த குற்றச்சாட்டின் காரணமாகப் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவரின் மரண தண்டனையை எதிர்த்து இந்தியா தொடர்ந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், மரண தண்டனையை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. 

தென்காசி, செங்கல்பட்டு: புதிய மாவட்டங்கள் 

ஜூலை 18: தென்காசி, செங்கல்பட்டு ஆகியவை புதிய மாவட்டங்களாகின்றன என்ற அறிவிப்பை முதல்வர் எடப்படி கே.பழனிச்சாமி, வெளியிட்டார். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசியும், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டும் பிரிக்கப்பட்டு இரண்டு புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலம், தமிழ்நாட்டு மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருக்கிறது. 

தமிழில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்

ஜூலை 18: உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், தமிழ், கன்னடம், தெலுங்கு, அசாமி, இந்தி, மராத்தி, ஒடியா ஆகிய ஏழு மொழிகளில் வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகள் தமிழ் மொழியில் உச்ச நீதிமன்ற இணையதளத்தின் ‘பிராந்திய மொழித் தீர்ப்புகள்’ என்ற பிரிவில் வெளியிடப்பட்டுள்ளன. கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தீர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைப் பிராந்திய மொழிகளில், www.sci.gov.in/vernacular_judgment என்ற சுட்டியில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விவேக் குமார்: பிரதமரின் புதிய தனிச்செயலர்

ஜூலை 19: பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக விவேக் குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். பிரதமர் அலுவலகத்தில் இயக்குநராகப் பணியாற்றிவந்த விவேக் குமார், தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராகப் பணியாற்றுவார் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஷீலா தீட்சித் மறைவு

ஜூலை 20: முன்னாள் டெல்லி முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஷீலா தீட்சித், உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 81. அவர் 1998 முதல் 2013 வரை, மூன்று முறை தொடர்ச்சியாக டெல்லியின் முதல்வராக ஆட்சியில் இருந்தவர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x