Published : 23 Jul 2019 09:50 AM
Last Updated : 23 Jul 2019 09:50 AM

இளமை புதுமை: இணைய உலகில் சுற்றும் வாலிபர்கள்!

ம.சுசித்ரா 

விரல் நுனியில் அத்தனையையும் வைரல் ஆக்கும் சூத்திரத்தை அறிந்து வைத்திருக்கும் இளைஞர்கள் இன்று இணையத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள். அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் எனத் தேச எல்லைகளைக் கடந்தும் ஈர்க்கும் வித்தையைச் சிலர் அறிந்துவைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட வர்கள்தாம், தினந்தோறும் 1 நிமிட ஃபேஸ்புக் வீடியோ பதிவு வெளியிடும் உலகம் சுற்றும் பாலஸ்தீன் - இஸ்ரேலிய வாலிபர் நாஸர் யாசீன், ஆன்லைனில் ஊக்குவிப்பு உரைகளை வழங்கிவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லண்டன் இளைஞர் ஜெய் ஷெட்டி, அனைவரையும் சிரிக்கவைக்கும் அமெரிக்க 'யூடியூப் ஸ்டார்’ மார்கைன். இவர்களுடைய வீடியோக்கள் நம்மூர் இளவட்டங்களால் தினந்தோறும் ஃபேஸ்புக்கில் அதிகம் பகிரப்படுகின்றன. அப்படி என்ன மாயை இவர்களிடம் இருக்கிறது?

தினம் ஒரு நிமிடம்

தினந்தோறும் இதைக் கட்டாயம் செய்தாக வேண்டும் என்று அவரவருக்குப் பல்வேறு விஷயங்கள் இருக்கும். நாசர் யாசினுக்கோ ஒரு நிமிட ஃபேஸ்புக் வீடியோவான ‘நாஸ் டெயிலி’யைப் பதிவிடுவதும் ஒன்று. ஒரு நிமிட வீடியோவுக்காகப் பல்லாயிரம் கி.மீ. பயணம் செய்கிறார்.

அதுவும் ருவாண்டா, தான்சானியா போன்ற பின்தங்கிய பிரதேசங்களைத் தேடிப் பயணிக்கிறார். சுற்றுலாப் பயணிகளின் வீடியோ போலல்லாமல் அவர் பயணிக்கும் பிரதேசத்தின், மக்களின் கதையைக் காட்சிப்படுத்துகிறார்.
1000 நாட்களுக்கு இதையே முழுநேர வேலையாகச் செய்ய வேண்டும் என்பதற்காக நியூயார்கில் செய்துவந்த ஹைடெக் வேலையை 2016-ல் ராஜினாமா செய்துவிட்டார் இவர்.

ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் சம்பளத்துடன் வேலை கிடைத்தாலும் அன்றாடப் பணியால் சலிப்படைந்து, தனக்குப் பிடித்த இந்த விஷயத்தைச் செய்துவருகிறார். நாடு, மொழி, மதம், இனம் கடந்து மனித உணர்வுகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையை அவருடைய வீடியோ பதிவு சொல்கிறது.

அதனால் அவரை இணையத்தில் 70 லட்சம் பேர் பின்தொடருகிறார்கள். அவருடைய வீடியோக்கள் பதிவேற்றம் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர்வரை சம்பாதிக்கிறார். எதுவானாலும் அவர் பணத்தைத் தேடிப் பயணிக்கவில்லை. அவர் செல்லும் பாதையில் பணம் அவரைப் பின்தொடருகிறது.

நாசர் யாசினின் வீடியோ காண: https://bit.ly/2XWHMWi

பட்டினத் துறவி

கார்ப்பரேட் உலகவாசிகளுக்கு அவசியமான வாழ்க்கைத் தத்துவத்தைப் பொழிவதில் வித்தகர் ‘பட்டினத் துறவி’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஜெய் ஷெட்டி. சிறந்த கதை சொல்லி. 2016-ல் யூடியூப் சேனல் தொடங்கினார். இப்போது 10 லட்சம் பேர் அவரைப் பின்தொடர்கிறார்கள். லண்டனில் பள்ளியில் படித்த காலம்வரை கூடா நட்பு, தீய பழக்கவழக்கங்களால்  உழன்றுகொண்டிருந்த அவர், ஒரு பவுத்தத் துறவியைச் சந்தித்திருக்கிறார். அவருடைய பேச்சில் ஈர்க்கப்பட்டு, உலகைப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

பிறகு 22 வயதில் இந்தியா வந்து மூன்று ஆண்டுகள் துறவி வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். அப்போது அவர் பெற்ற தத்துவார்த்தப் புரிதலை லண்டன் சென்றதும் சமூக ஊடகத்தின் வாயிலாகப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். தற்போது ஃபேஸ்புக், ஸ்னாப்சேர், நேஷனல் ஜியாகிரஃபிக் உள்ளிட்டவற்றோடு இணைந்து வீடியோக்களை உருவாக்கி வருகிறார். இதுபோக மாணவர்கள் மத்தியில் சொற்பொழிவும் நிகழ்த்திவருகிறார்.

ஜெய் ஷெட்டியின் வீடியோ: https://bit.ly/2hrcrDg

புன்னகை இளவரசன்

மார்க்கியன் என்றாலே துள்ளல், துறுதுறுப்புதான். ‘இந்தியக் காதலி இருந்தால் எப்படி இருக்கும்?’ என்பதில் தொடங்கி பல தேசங்களைச் சேர்ந்த பெண்கள் காதலியானால் அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை 3 நிமிடங்களில் ரசிக்கும்படியாகக் காட்சிப்படுத்தி ‘ஹிட்’ ஆனவர் இவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், 15 வயதில் யூடியூபில் வீடியோக்களைப் பதிவேற்றத் தொடங்கினார். இப்போது 19 வயதில் அவர் அமெரிக்காவில் மட்டுமல்ல தமிழகத்தின் இளம் பெண் வலைவாசிகளுக்கும் ஸ்டார் ஆகிவிட்டார்.

கூச்ச சுபாவம் உள்ள இவர், எப்படி எல்லோரிடமும் சகஜமாகப் பழகக் கற்றுக்கொண்டார், தன்னுடைய மனத்தடைகளை எப்படித் தானே வென்றார் என்பதை விவரிக்கும் அவருடைய ‘புராஜெக்ட் எக்ஸ்ட்ரோவெர்ட்’-ல் உள்ள 20 வீடியோக்கள் பிரபலம்.

(சமூக ஊடகங்களின்  வாயிலாக ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொல்லாமல் சொல்கிறார்கள் இந்த  அண்டை நாட்டுக் கணியன் பூங்குன்றனார்கள்.)

மார்க்கியன் வீடியோவுக்கு: https://bit.ly/2XzKHEM
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x