Published : 22 Jul 2019 11:14 AM
Last Updated : 22 Jul 2019 11:14 AM

சேமிப்பு, காப்பீடு, முதலீடு! இலக்கை திட்டமிட்டு தீர்மானியுங்கள்

வேலைக்குச் சேர்ந்து முதல் மாத சம்பளம் வங்கிக் கணக்கில் வந்து விழுந்த உடனேயே மகிழ்ச்சி பெருகும் என்பதில் சந்தேகமில்லை. புதிதாக சந்தைக்கு வந்திருக்கும் ஸ்மார்ட்போனை வாங்க ஆவல் பெருகும். புத்தாடை வாங்கவும், விடு முறைக்கு எங்கு செல்லலாம் என திட்டமிடவும் உந்துதல் ஏற்படும். ஷாப்பிங் செய்துவிட்டு மாதக்
கடைசியில் சேமிக்கலாம் என்று நினைத்தீர்களானால் அங்குதான் தவறு ஆரம்பாகிறது. உங்கள்
முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும் என்ற முன்னோரின் வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள். ஆனால், எதில் சேமிப்பது? என்பதைப் பற்றி நன்கு தெரிந்து சேமிப்பதே அறிவார்ந்த செயலாக இருக்கும்.

மாதாந்திர சேமிப்பு

மாதந்தோறும் கட்டாயமாக ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்புக்கு ஒதுக்க வேண்டும் என்று தீர்மானியுங்கள். உங்கள் வருமானத்தில் 10 சதவீதம் அல்லது 15 சதவீதம் வரை தொடக்கத்தில் சேமியுங்கள். சம்பளம் அதிகரிக்கும்போது சேமிப்பு அளவை 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை அதிகரியுங்கள். உங்கள் நிறுவனத்தில் தொழிலாளர் வருங்காலவைப்பு நிதி (பிஎஃப்) கணக்கு தொடங்கப்பட்டிருந்தால், நீங்கள் கட்டாயமாக சேமிக்க வேண்டிய தொகையை கூடுதலாக உங்கள் பங்காக பிஎஃப்- நிதியில் செலுத்தலாம்.

இதன் மூலம் சம்பளம் உங்கள் வங்கிக் கணக்குக்கு வரும் முன்பே சேமிப்பு தொகை பிடித்தம் செய்யப்பட்டு விடும். மேலும் உங்களது பிஎஃப் பங்களிப்புக்கு வருமான வரி பிரிவு 80-சி பிரிவின்கீழ் வரி விலக்கும் பெறலாம். அதே சமயம் நீண்ட கால முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்வதும் அவசியம். இதற்கு பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளை தேர்வு செய்யலாம்.

மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம்.  எஸ்ஐபி எனப்படும் மாதாந்திர சேமிப்பு நீண்ட காலத்தில் மிகச் சிறந்த பயனை அளிக்கும். மல்டி கேப் ஃபண்ட் அல்லது வரி சேமிப்பு ஃபண்டில் முதலீடு செய்யலாம். 80 சி பிரிவில் வரி விலக்கு கிடைக்கும் நிதி திட்டங்களை தேர்வு செய்யலாம். ஒருவேளை உங்களுக்கு நிதித் திட்டங்களை தேர்வு செய்யத் தெரியாவிடில் ஒரு குறிப்பிட்ட நிதியை தேர்வு செய்து சரி பாதி தொகையை நிஃப்டி 50 மற்றும் நிஃப்டி நெக்ஸ் 50 இன்டெக்ஸ் நிதித் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

ஒருவேளை நீங்கள் பணி புரியும் நிறுவனத்தில் இபிஎஃப் வசதி இல்லாவிட்டால், பொது சேம நல நிதி கணக்கை வங்கியில் தொடங்கி ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை சேமித்து அதற்கு 80 சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம். அதேபோல நீங்கள் தேர்வு செய்யும் எஸ்ஐபி திட்டங்கள் அனைத்தும் மாதத்தின் முதல் வாரத்தில் பிடித்தம் செய்யக் கூடியவையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். எப்போதுமே நான்கைந்து முத
லீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். இதன் மூலம் பங்குச் சந்தையில் இறக்கம் ஏற்பட்டாலும் உங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படாது.

கடனை அடையுங்கள்

முதலில் கடனை அடைத்துவிடுங்கள். கல்விக் கடனாக இருந்தாலும் சரி, பிற சுலப தவணை கடன்
களானாலும் சரி அதை முதலில் அடைத்து விடுங்கள். இத்தகைய நிலுவைகள் உங்கள் சேமிப்பை வெகுவாக பாதிக்கும். நீண்டகாலத்துக்கு கடன் செலுத்த வேண்டியிருந்தால், சில எளிய சேமிப்பு முறைகளை தேர்வு செய்யுங்கள். குறிப்பாக வங்கிகளில் தொடர் சேமிப்பு (ஆர்டி) போன்றவற்றை தேர்வு செய்யலாம். வருடாந்திர போனஸையும் இவ்விதம் சேமிக்கலாம். கடன் நிலுவை சுமை நீங்கிய பிறகு பிபிஎஃப் அல்லது பரஸ்பர நிதியின் எஸ்ஐபி-யில் முதலீடு செய்ய தொடங்கலாம்.

தவறான காப்பீடு வேண்டாம்

எதிர்காலத்துக்கு சேமிப்பது என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது காப்பீட்டு திட்டங்கள் தான். தவறான காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்தீர்களானால், அது உங்களது சேமிப்பை பாதுகாப்பதற்கு பதிலாக அதை அர்த்தமற்றதாக்கி
விடும். பெரும்பாலான இளம் தலைமுறையினர் 10 ஆண்டு அல்லது 15 ஆண்டுக்கால என்டோமென்ட் காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்து காசோலையும் அளித்து விடுகின்றனர். இது மிகவும் தவறானதாகும். இது உங்கள் உழைக்கும் காலத்தையும் பணத்தையும் விழுங்கிவிடும். முதிர்வின்போது இதில் கிடைக்கும் தொகை எதற்கும் பயன்படாத அளவுக்கு குறைவானதாக இருக்கும். எனவே முதலீடுகளையும், காப்பீட்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. 

காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்யும் முன்பு, உங்கள் வாழ்க்கையின் இலக்கை தீர்மானியுங்கள். நீங்கள் குடும்பஸ்தராக இருந்தால் 20 ஆண்டுகால என்டோமென்ட் திட்டம் எந்த வகையிலும் உங்களை சார்ந்திருப்போருக்கு பயன்தருவதாக இருக்காது. நீங்கள் தனி நபராக இருப்பின் ஆயுள் காப்பீட்டு திட்டத்தால் பயன் இல்லை. அதற்குப் பதில் மருத்துவக் காப்பீடு, விபத்து காப்பீடு உள்ளிட்ட காப்பீட்டுத் திட்டங்களை தேர்வு செய்யலாம். இது உங்களுக்கு எப்போதாவது கை கொடுக்கும்.

வீடு வாங்க வேண்டாம்

வேலைக்குச் சேர்ந்ததுமே வீடு வாங்க வேண்டும் என்று அவசரப்படாதீர்கள். மிகச் சிறிய வயதில் கடனில் வீடு வாங்குவது மூன்று வழிகளில் உங்கள் நிதி நிலையைப் பாதிக்கும். மாதா மாதம் செலுத்த வேண்டிய சுலப தவணை (இஎம்ஐ) ஒரு கட்டத்தில் சுமையாகும். சுதந்திரமாக செயல்பட வேண்டிய உங்களது வாழ்க்கை தேவையை இது வெகுவாக கட்டிப்போடும். ஒரு குறிப்பிட்ட நகரில் வீடு வாங்குவதால், எதிர்காலத்தில் வேறு இடங்களுக்கு இடம்பெயர்வதை முடக்கிவிடும்.

இதனால் நல்ல வேலை வாய்ப்புகளுக்காக இடம் பெயராமல் இஎம்ஐ கட்டுவதற்காகவே விருப்பமில்லாத சூழலில் வேலையைத் தொடர வேண்டியிருக்கும். மேலும் வாடகைக்கு விட்டு இடம்பெயர்ந்தால், நீங்கள் செலுத்த வேண்டிய இஎம்ஐ தொகைக்கும் வரும் வாடகைக்கும் மிகப் பெரிய இடைவெளி இருக்கும். நீங்கள் வசிக்காத வீட்டுக்கு இஎம்ஐ கட்டிக்கொண்டு, வேறு நகரில் வாடகைக்கு வசிப்பது இரட்டிப்பு சுமையாகிவிடும். சொத்து உருவாக்கத்துக்கு பதிலாக வெறும் இஎம்ஐ செலுத்துவதிலேயே உங்கள் திறமை முடங்கிப் போகும். 

இலக்குகளை தீர்மானியுங்கள்

இலக்குகளை ஸ்மார்ட்டாக திட்டமிட்டு இளமைக் காலத்தில் வாழ்க்கையை அனுபவியுங்கள். இலக்குகளை குறித்த கால இடைவெளியில் பரிசீலனை செய்து அதை அடைவதற்கான முயற்சியில் எந்த அளவு பயணித்துள்ளீர்கள் என்பதை ஆராயுங்கள். அதற்கு ஏற்ற வகையில் முதலீடுகளைத் தேர்வு செய்யுங்கள். நான்கு ஆண்டுகள் வரையிலான இலக்குகளுக்கு வங்கிகளின் தொடர் சேமிப்பு, கடன் நிதி போன்றவற்றை தேர்வு செய்யலாம்.

5 முதல் 7 ஆண்டு வரையான இலக்குகளாயிருப்பின் ஹைபிரிட் பரஸ்பர நிதியில் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யுங்கள். 7 ஆண்டுகளுக்கு மேலான இலக்காயிருப்பின் ஈக்விட்டி திட்டங்களைத் தேர்வு செய்யுங்கள். இலக்குகளைத் திட்டமிட்டு அதற்குரிய முதலீடுகளை மேற்கொண்டால் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் ஒருபோதும் உங்களை பாதிக்காது. நீங்கள் உங்கள் லட்சியக் கனவை அடையப் போகும் பயணத்தை தொடரலாம்.

ஆரத்தி கிருஷ்ணன்
aarati.k@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x