Published : 21 Jul 2019 10:57 AM
Last Updated : 21 Jul 2019 10:57 AM

வாழ்ந்து காட்டுவோம் 15: துயரிலிருந்து மீட்கும் கரம்

ருக்மணி

பெண்களால் எல்லா நேரத்திலும் பிரச்சினைகளில் இருந்து எளிதாக மீண்டுவந்துவிட முடிவதில்லை. அதுபோன்ற நேரத்தில் அவர்களுக்குக் காக்கும் கரங்கள் அவசியமாகின்றன. இந்தியாவிலுள்ள பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்காக 
1990-ல் நிறைவேற்றப்பட்ட ‘தேசிய மகளிர் ஆணையச் சட்ட’த்தின்கீழ் தேசிய மகளிர் ஆணையம் 1992 ஜனவரி 31 அன்று அமைக்கப்பட்டது.

பெண்களின் நலன் தொடர்பாகத் தற்போதுள்ள சட்டங்கள் அனைத்தையும் ஆய்வுசெய்யும் இந்த ஆணையம், அந்தச் சட்டங்களில் எங்கெல்லாம் குறைகளும் பலவீனங்களும் இருக்கின்றனவோ அவற்றைச் சுட்டிக்காட்டி, தேவையான திருத்தங்களைச் செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கிறது. இவை தவிர எத்தகைய புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளையும் தேசிய மகளிர் ஆணையம் வழங்குகிறது.

பெண்கள் நலனைப் பாதுகாக்க கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்கள் அனைத்தும் முறையாகச் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதையும் இந்த ஆணையம் கண்காணிக்கிறது. பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சாசன, சட்டப் பாதுகாப்புகளை ஆய்வுசெய்வது, சட்டத் தீர்வுகளைப் பரிந்துரைப்பது, குறைகளைத் தீர்க்க உதவுவது, பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்துக் கொள்கை விஷயங்களிலும் அரசுக்கு அறிவுரை வழங்குவது ஆகியவை தேசிய மகளிர் ஆணையத்தின் முதன்மைப் பணிகள்.
தேசிய மகளிர் ஆணையச் சட்டத்தின்படி ஆணையத்தில் ஒரு தலைவர், ஒரு உறுப்பினர் செயலர், ஐந்து அலுவலர் சாராத உறுப்பினர்கள் ஆகியோர் இருப்பார்கள்.

இந்த ஆணையத்தின் செயல்பாடுகள் மொத்தம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

(1) புகார்கள்- விசாரணைப் பிரிவு

(2) சட்டப் பிரிவு

(3) வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரிவு

(4) ஆய்வுப் பிரிவு

புகார்கள் மற்றும் விசாரணைப் பிரிவுதான் மகளிர் ஆணையத்தின் முதன்மைப் பிரிவு. வாய்வழிப் புகார்கள், எழுத்து மூலமான புகார்கள், செய்தித்தாள்களில் வந்த செய்திகள் ஆகியவற்றை இந்த ஆணையம் ஆய்வுசெய்யும்.

துன்பத்தை நீக்கும் பரிந்துரை

1990-ம் ஆண்டின் தேசிய மகளிர் ஆணையச் சட்டத்தின் 10(1)(7)(94) ஆகிய பிரிவுகளின்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மகளிர் ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும்.
கடுமையான குற்றங்கள் என்றால், அவற்றைப் பற்றி விசாரிக்க விசாரணை ஆணையத்தை மகளிர் ஆணையம் அமைக்கும். இந்த ஆணையம் குற்றம் நடந்த இடத்துக்கே சென்று விசாரணை நடத்தும். இதில் சம்பந்தப்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தி சாட்சியங்களைச் சேகரித்து, அவற்றின் அடிப்படையில் பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையைத் தேசிய மகளிர் ஆணையத்திடம் விசாரணை ஆணையம் தாக்கல் செய்யும்.

வன்முறைகளாலும் ஒடுக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணமும் நீதியும் கிடைக்க இந்த விசாரணைகள் உதவும்.

விசாரணை அறிக்கையை மாநில அரசுகள்/அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்று விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவதை மகளிர் ஆணையம் கண்காணிக்கும்.

இவையெல்லாம் குற்றமே

மகளிர் ஆணையத் தலைவரும் உறுப்பினர்களும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிப்பார்கள். சிறைகளில் வாடும் பெண் கைதிகள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் ஆகியோரின் துன்பங்களை நேரடியாக அறிந்து அந்தக் குறைகளைக் களையும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பரிந்துரைப்பார்கள்.

குடும்ப வன்முறை, வரதட்சிணைக் கொடுமை, கொலை, சித்திரவதை செய்தல், கடத்தல், வெளிநாடுவாழ் இந்தியர்கள்/வெளிநாடுவாழ் இந்தியர்களின் திருமணம் தொடர்பான மோசடிகள், பெண்களைக் கைவிட்டு கணவன்கள் ஓடுதல், முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாம் மணம் செய்தல், பாலியல் வல்லுறவு, காவல்துறை அலட்சியம்/தொல்லைதருதல், கணவனால் கொடுமைக்குள்ளாக்கப்படுதல், பெண்களின் உரிமைகளைப் பறித்தல், பாலினப் பாகுபாடு, பாலினத் தொல்லை உள்ளிட்டவை தொடர்பான புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்தால் பெறப்படுகின்றன.

பணியிடங்களில் பெண்களுக்குப் பாலியல் தொல்லைகள் அளிக்கப்படுவது தொடர்பான புகார்கள் வந்தால், அது பற்றி விசாரிப்பதற்காக, உள்ளகப் புகார்க் குழு (ஐ.சி.சி) அமைக்கும்படி சம்பந்தப்பட்ட நிறுவனத்தைத் தேசிய மகளிர் ஆணையம் கேட்டுக்கொள்ளும்.

இணைந்த கரங்கள்

பெண்களுக்கு அதிகாரமளித்தல் மட்டுமின்றி அவர்களின் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வளர்ச்சி,
முன்னேற்றத்திலும் தேசிய மகளிர் ஆணையம் கவனம் செலுத்துகிறது. தேசிய மகளிர் ஆணையம், காவல் துறை, ஊடகங்கள் ஆகிய மூன்றும் இணைந்தே செயல்பட்டுவருகின்றன.

தேசிய மகளிர் ஆணையம் அவ்வப்போது கீழ்க்காணும் தலைப்புகளில் கருத்தரங்குகள், மாநாடுகள், ஆலோசனைகள் போன்றவற்றை நடத்துகிறது.

# குழந்தைப்பேற்றுக்கு வாய்ப்பில்லாத பெண்களுக்காகக் கருவைச் சுமக்க முன்வரும் பெண்களின் கருப்பையை வாடகைக்கு விடுதல் - குழந்தைப்பேறு தொழில்நுட்பங்கள்.

# ஊடகங்களில் பெண்களை அநாகரிகமாகச் சித்தரித்தலைத் தடைசெய்தல்.

# பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு அளித்தல்.

# தொழிற்சாலைகளில் இரவு நேரத்தில் பெண்கள் வேலைசெய்தல்.

# திருமணம் சம்பந்தப்பட்ட சட்டங்கள், வரதட்சிணைத் தடுப்புச் சட்டம்.

# பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பெண்களுக்கு அதிகாரமளித்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள்,

# கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஆய்வு செய்வதைத் தடைசெய்யும் சட்டம்.

# பாலியல் தொல்லைகளுக்கு எதிராகப் பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்தல்.

# பெண்கள் கடத்தப்படுவதைத் தடுத்தல். அவர்கள் ஒடுக்கப்பட்டு முடிவெடுக்கும் உரிமை மறுக்கப்படுதல் போன்றவை தொடர்பானவை. அரசியலில் பெண்களின் பங்கேற்பு.

கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைச் சோதனை மூலம் கண்டறியப்படுவதால், குறைந்துவரும் பாலின விகிதம், தாய்மார்களுக்கான சுகாதார  சேவைகள், வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் ஆயுதப் போராட்டங்களால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், பெண்களின் உரிமைகள், பஞ்சாயத்துராஜ் அமைப்புகளில் பெண்ணின் பங்கு, குழந்தைத் திருமணம் போன்றவை குறித்துப் பொது விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

சட்டத்தில் திருத்தம்

தேசிய மகளிர் ஆணையம் கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு சட்டங்களை மறு ஆய்வு செய்துள்ளது. புதிய சட்டங்களை நிறைவேற்ற யோசனை கூறியுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

# குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துதல்.

# பெண்கள் அநாகரிகமாகச் சித்தரிக்கப்படுவதைத் தடுத்தல் சட்டம்.

# பணியிடங்களில் பெண்களுக்குப் பாலியல் தொல்லைகளைத் தடுத்தல் சட்டம்.

# பாலியல் தாக்குதல் தடுத்தல் சட்டம்.

# வீட்டு வேலையாட்கள் நலன் - சமூகப் பாதுகாப்புச் சட்டம்

# விவாகரத்துக்குப் பிறகு ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பாகக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125-ம் பிரிவில் #திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

#திருமணம் செய்வதற்கான வயது குறித்த சட்டம்.

மனிதக் கடத்தலைத் தடுப்பதற்காக ஐ.நா.வின் கட்டுப்பாட்டில் செயல்படும் (UNIFEM) என்ற அமைப்புடன் 2010, ஜனவரி மாதத்தில் தேசிய மகளிர் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.

சிறையிலிருந்து விடுதலை

#கவுரவம், பாரம்பரியம் போன்றவற்றின் பெயரில் நடக்கும் ஆணவக் குற்றங்களைத் தடுத்தல் சட்டம்.

#அமில வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு வழங்குதல் திட்டம்.

#பாலியல் வல்லுறவு குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம், மறுவாழ்வுத் திட்டம்.

பெண்கள் தாங்கள் எதிர்கொள்கிற வன்முறைகள் குறித்துச் சொல்லவும் நீதிபெறுவதற்குமான கதவுகளை மகளிர் ஆணையம் திறந்து வைத்திருக்கிறது. உள்ளூரில் செயல்படும் மகளிர் அமைப்புகளும் மாதர் சங்கங்களும் அதற்கான வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். சிறைக்குள் அடைபட்டுக்கொண்டிருக்காமல் அவர்களை நாடினாலே போதும்; வானம் வசப்படும்.

(உரிமைகள் அறிவோம்)

கட்டுரையாளர், 
மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்.
தொடர்புக்கு: somurukmani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x