Published : 21 Jul 2019 10:51 AM
Last Updated : 21 Jul 2019 10:51 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 15: காது வளர்க்கும் திருவிழா

பாரததேவி

ஐந்து மாதம் ஆனதுமே பெண் பிள்ளைகளுக்குக் காது வளர்க்க ஆரம்பித்துவிடுவார்கள். அன்று பார்த்தால் ஊர், கல்யாணம் பட்ட பாடாயிருக்கும். வேலைக்கு வாரியா என்று பெண் பிள்ளை வைத்திருப்பவர்களைப் பார்த்துக் கூப்பிட முடியாது. உடனே, “யாத்தாடி ஒண்ணும் தெரியாதவ கணக்கா என்னை வந்து வேலைக்குக் கூப்பிடுதே” என்று இவள் சொல்லவும் வேலைக்குக் கூப்பிட்டவளுக்குக் கடுப்பாக இருக்கும்.

“அப்படியென்ன அர்ச்சுவம் (அதிசயம்)  நடக்கு ஊருக்குள்ள? ஊருக்குள்ள அர்ச்சுவம் நடந்தா எனக்குத் தெரியாமையாப் போகும்?”
“என் வீட்டுக்குள்ளதேன். எம் மவளுக்கு இன்னைக்குக் காது வளக்கப் போறேன். பெறவு எங்கிட்டு வேலைக்கு வாரது” என்று காது வளக்கப் போவதைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டு அலைவார்கள்.

நெல்லுச்சோறும் கறிக்குழம்பும்

இந்தக் காது வளர்ப்பு வேலையைக் குறவர்கள்தாம் வந்து செய்வார்கள். இந்த வேலைக்காக வீட்டுக்கு வரும் அவர்களுக்குக் கோழி அடித்து நெல்லுச் சோறாக்கிப் போட வேண்டும். அதோடு வெற்றிலைப் பாக்கு, புகையிலை, பொடி என்று எல்லாம் வாங்கித்தர வேண்டும். காது வளர்க்கிறவர் விடியற்காலையிலேயே வந்துவிடுவார். அதற்குள் இவர்கள் கூரையிலிருக்கும் கோழியைக் கப்பென்று பிடித்து, கோழிக்குழம்பு வைத்துச் சோறாக்கிவிடுவார்கள். நெல்லுச்சோறு, கறிக்குழம்பு  என்றதும் பிள்ளைகள் விளையாடப் போக மாட்டார்கள். வாயூறியவாறே வீட்டைச் சுத்தி சுத்தி வருவார்கள். இரண்டு படி அரிசி காய்வதோடு இரண்டு கோழிகளையும் அடிக்க வேண்டும். பிரசவம், விருந்தாளி என்று இப்படி விசேஷங் களுக்கென்றே அப்போது கிராமங்களில் எல்லோரும் கோழி வளர்த்தார்கள்.
காதைச் சிறிய ஊசியால் குத்தி அந்த ஓட்டையில் சிறிய பஞ்சுத் துணுக்கைத் திணித்துவிட்டுப் போய்விடுவார்கள். காது வளர்க்க வருகிறவர் ஒரு நாளைக்கு மூன்று பெண் குழந்தை களுக்குத்தான் காது குத்துவார். மூன்று வீட்டிலும் அவருக்குக் கறியும் சோறும் போடுவதோடு மோர், கருப்பட்டி காப்பி, வீட்டில் அவித்த சீனிக்கிழங்கு, வறுத்த நிலக்கடலை என்று திண்பண்டமும் உண்டு. அவர்கள் காது குத்தும் வீட்டில் கறியும் சோறும் சாப்பிட்டுவிட்டு ஊரில் இருக்கும் ஆலமரத்து மேடையில் ஆடு புலி ஆட்டமும் தாயமும் விளையாடிக்கொண்டிருப்பார்கள். இப்படியே நாலைந்து நாளைக்கு அங்கிருக்கும் பெண் குழந்தைகளுக்கெல்லாம் காதைக் குத்தி, பஞ்சை துணுக்குத் துணுக்காகத் திணித்துவிட்டு நல்லா சாப்பிட்டு ஆளே ஒரு தெளிவு கண்டு ஊருக்குப் போவார்.

நகையோடு பெருமையும்

பிள்ளைகளைக் குளிப்பாட்டும் போது காது ஓட்டைக்குள் இருக்கும் பஞ்சு நனைந்து நனைந்து பெரியதாகிக்கொண்டே வரும். பிறகு மூன்றாம் மாதம் ஆனதும் குறவர் மீண்டும் வருவார். அந்தப் பழைய பஞ்சை எடுத்துவிட்டுப் பார்க்கும்போது ஓட்டை இன்னும் கொஞ்சம் பெரியதாக இருக்கும். அப்போதும் அவருக்கு விருந்துதான். ராஜ சாப்பாடுதான். இந்த ஒருவாரமும் அவர் ஏதோ அந்த ஊரிலேயே பிறந்தவர்போல் எல்லோரிடம் ஒண்ணுமன்னாகப்  பழகிக்கொண்டிருப்பார்.
காது துளையில் இருக்கும் பஞ்சை எடுத்துவிட்டுப் புதிதாக, சற்றுப் பெரிய உருண்டையான பஞ்சைத் திணித்துவி ட்டுப்போவார். அவர் வரும்போதெல்லாம் அவருக்குச் சோறும் கறிக்கொழம்பும் வைத்தே ஆக வேண்டும். இப்படியே ஆறு மாதம் கழித்து ஒரு சிறு ஈய வளையத்தை அந்தத் துளையிட்ட காதில் மாட்டிவிட்டுப்போவார். இதற்குக் கறிச்சோறு போடுவதோடு பயறென்றால் ஒரு படியும்  தானியமென்றால் ஒரு மரக்காலும் கொடுக்க வேண்டும்.

இப்படியே இரண்டு வருசத்தில் காது துளை பெரிதாகிவிடும். இதன் பிறகு வீட்டுக்காரர்களே ஆசாரியிடம் சொல்லி செம்பினால் இரண்டு வளையங்களைச் செய்து காதில் மாட்டிவிடுவார்கள். அப்போதுதான் காது இழுத்து வளருமாம். நீளமாய்க் காது வளர்த்த பெண்களுக்கு அப்போது நிறைய மதிப்பிருந்தது. ஏனென்றால் தண்டட்டி, பாம்படம், முடிச்சி என்று காது கனக்க நகை போடலாம். தங்கமும் கூட இருக்கும்; பொம்பளையும்  அழகாய் இருப்பாள் என்று சொல்லுவார்கள்.

கைம்பெண் கொடுமை

சிறியதாக, தண்டுக் காதாக வளராமல் சிலருக்கு இருக்கும். அவர்களுக்கு அவ்வளவாக மதிப்பில்லை. சில பெண்கள் பொறாமை கொண்டு, “ஆமா. அவதேன் தண்டட்டி, பாம்படம், முடிச்சின்று மூணு நகை போடுவாளாக்கும். நானும்தேன் போடுவேன்” என்று போட்டு காதறுந்து தைத்து ஒரு நகையைக்கூடப் போட முடியாமலும் இருந்தார்கள். கொஞ்சம் வளர்ந்துவிட்டாலும் இந்த மாதிரி காது வளர்க்க முடியாது.  காது வளர்க்காதவர்களுக்கு மதிப்பில்லை. ‘புருவக்காதி’ என்று கேலி பண்ணுவார்கள். 
அண்டியும் சவலையுமாக வீட்டுக்குள் இருக்கும் பன்னிரண்டு பதிமூன்று வயதான மூத்த பெண் பிள்ளையோ ஆண் பிள்ளையோ காட்டு வேலைக்குத் தேறாத பிள்ளைகள் ஊருக்குள் குருதாலி, வரகு, சாமை என்று குத்த கூப்பிடுகிறவர்களுக்கு குத்திக்கொடுப்பார்கள். அவர்கள் குத்திய அரிசியில் ஒரு கை அரிசியும் அதில் இரண்டாவது முறையாக வரும் தவிட்டையும் கொடுப்பார்கள்.

அப்போதெல்லாம் காட்டுக்கு வேலைக்குப் போனால் காலை எட்டு மணிக்குப் போக வேண்டும். நன்றாக மசங்கிய பின்தான் வீட்டுக்கு விடுவார்கள். இந்தப் பிள்ளைகளின் தாய் வரும்போதே தலையில் விறகுக் கட்டோடும் பிஞ்சைக்காரி சும்மா கொடுத்த காய்களுடனும் வருவாள். அதோடு மத்தியான வேளையில் கோவைப்பழம், மஞ்சனத்திப்பழம், ஆலம்பழம் என்று காட்டில் கிடைக்கும் பழங்களையும் பிடுங்கிவருவாள்.

அம்மா எதையாவது கொண்டு வருவாளென்று பிள்ளைகளும் காத்திருப் பார்கள். சிலநேரம் செடிகளுக்குள் முட்டையிட்டுப் பதுங்கியிருக்கும் காடை, கௌதாரிகளும் கிடைப்பதுண்டு. அப்போதெல்லாம் இந்தப் பிள்ளைகளுக்குக் கும்மரிச்சம் தாங்க முடியாது. இவர்கள் சத்தத்தைக் கேட்டே பக்கத்து வீட்டுக்காரர்கள், “என்னத்தா உன் வீட்டுல வெஞ்ஞனம், என்ன சோறு? புள்ளைக இம்புட்டு ‘ஆதாளி’ போட்டுக்கிட்டு அலையுதுக?” என்று கேட்டவாறே வந்துவிடுவார்கள்.
கணவன் இறந்துபோனால் வெள்ளைச் சீலைதான். அதுவும் 16 முடிச்சேலைதான் கட்ட வேண்டும். காது, கழுத்து, கை என்று எந்த நகையும் போடக் கூடாது. கூடிய கூட்டத்தில் நிற்கக் கூடாது. துக்க வீடு தவிர எந்த விசேசத்துக்கும் வரக் கூடாது. சிறு குழந்தைகளை ஆசைப்பட்டுத் தூக்கக் கூடாது. நிறைவெள்ளாமைக்குள் இறங்கக் கூடாது. வாலிபர்கள் அந்தப் பெண்ணின் வீட்டுக்குப் போகக் கூடாது. களத்தில் தானியம், தவசம் குவிந்திருந்தால் அவளது கால்தடம் பதியக் கூடாது. கொத்து, கூலிக்குப் போனால் ஒதுங்கி நின்று கூலியை வாங்கிக்கொண்டு போக வேண்டும். கல்யாண வீடென்றால் அவளைப் பந்திக்கு அழைக்க மாட்டார்கள். வீட்டுக்குச் சட்டி நிறையச் சோறும் வெஞ்ஞனமும் கொடுத்துவிடுவார்கள்.
(நிலா உதிக்கும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x