Published : 21 Jul 2019 10:48 AM
Last Updated : 21 Jul 2019 10:48 AM

நட்சத்திர நிழல்கள் 15: சீதா பயணப்பட்டது புதிய பாதையா?

செல்லப்பா

சிலரது வாழ்வில் எல்லாமே தலைகீழாகவே நடைபெறும். அதற்கான காரண காரியங்களை அலசி ஆராய்ந்தாலும் அந்த வாழ்வைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. அது அப்படித்தான் என்று ஏற்றுக்கொண்டு சென்றுவிட வேண்டியதுதான். அப்படியான வாழ்வே சீதாவுக்கு அமைந்தது.

ஓர் ஆணைப் பழிவாங்க வேண்டுமென்றால் அவனுடைய எதிரிகளின் மூளையில் சட்டென்று உதிக்கும் உபாயம் பாலியல் வழக்குத்தான். எந்தவிதக் கேள்வியுமின்றி அவனைத் தரங்கெட்டவன் எனச் சமூகம் தீர்மானித்துவிடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஏவப்படும் அஸ்திரம் இது. அதைப் போல் ஒரு பெண்ணைப் பழிவாங்கக் காலங்காலமாகப் பயன்படுத்தப்படும் உத்தி பாலியல் வல்லுறவு. ஆண், பெண் உறவு குறித்த பக்குவமும் புரிதலும் கொண்ட சமுதாயம் இந்த இரண்டையுமே அபத்தங்களாகக் கருதி கடந்துபோய்விடுகிறது. என்றபோதும், இந்த அபத்தம் இன்றுவரை சமூகத்தில் தொடர்கிறது என்பதே யதார்த்தம். 

எது புதிய பாதை?

சீதா தனது வாழ்விலும் இப்படியோர் அபத்தத்தை எதிர்கொண்டாள். முகூர்த்தத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்த வேளையில், அவள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டாள். அவளை வல்லுறவு கொண்டவனின் நோக்கம் அவள் உடம்பல்ல; அவளைப் பழிவாங்குவதற்காகவும் அவன் அந்த இழிசெயலைச் செய்யவில்லை. அவன் ஓர் அடியாள். பணம் பெற்று அவளைச் சீரழித்துச் செல்லும் அறிவிலி. சீதாவைப் பழிவாங்கும்பொருட்டு சீதாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணால் ஏவிவிடப்பட்டவன்.
புதிய பாதை (1989) படத்துக்காக நடிகை சீதா ஏற்றிருந்த, இயக்குநர் R.பார்த்திபன் சிருஷ்டித்திருந்த இந்த சீதாவை மணம் முடிக்க இருந்தவர் ஒரு மருத்துவர். அவர் இந்தச் சம்பவத்தை ஒரு விபத்தாக எண்ணி சீதாவை மணம்முடிக்கத் தயாராகிறார். ஆனால், சீதாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் கெட்டுப்போனவள் என நம்புகிறாள்; அந்தக் குற்றவுணர்வுடன் மருத்துவருடைய மனைவியாகத் தன்னால் காலங்கழிக்க இயலாது என்கிறாள். இது மரபுவழியே வந்த மூடத்தனம் என்பது எல்லோருக்கும் எளிதாகப் புரியும். ஆனால், சீதாவுக்குப் புரியவில்லை.

நடந்த விபத்துக்கு அவள் எந்தவகையிலும் பொறுப்பாளி அல்ல; ஆனால், அவள் தண்டனையை அனுபவிக்கத் தயாராகிவிட்டாள். வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண் வழக்கமாக என்ன செய்வாள்? பயந்த பெண் தன்னை எமனிடம் ஒப்புவிப்பாள். துணிந்த பெண் படுபாதகச் செயல்புரிந்தவனைத் தண்டிக்க முற்படுவாள்; நடந்த சம்பவத்துக்கு நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்வாள். ஆனால், இதற்கு மாறாக சீதா ஒரு முடிவெடுக்கிறாள். ‘தலை அரிக்கிறது என்பதற்காகக் கொள்ளிக்கட்டையால் சொறிந்துகொள்வது’ போன்ற காரியத்தைச் செய்கிறாள் சீதா. தன்னைச் சீரழித்தவனையே கரம்பற்ற வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டாள்.
இதென்ன பைத்தியக்காரத்தனம் எனப் பதறுகிறீர்களா? பதறாதீர்கள் தன் வாழ்வைத் தீர்மானிக்கும் உரிமை சீதாவுக்கு இல்லையா என்ன? அதெல்லாம் சரிதான். ஆனாலும், இவ்வளவு அப்பாவித்தனமாகவா ஒரு பெண் முடிவெடுப்பாள். 
இது அவளுக்கு நடந்த கொடுமையைவிடப் படுபாதகமாக இருக்கிறதே என்று இன்று நீங்கள் துடிக்கலாம். ஆனால், முப்பது வருடங்களுக்கு முன்பு சீதா எடுத்த முடிவுக்குப் பாராட்டும் விருதுகளும் கிடைத்தன. அவள் சென்ற பாதை புதிய பாதை என நம்பித்தான் அவள் பயணத்தைத் தொடங்கினாள். ஆனால், அது புதிய பாதையா?

புதிரான காதல்

 சீதா செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவள். செல்வச் செழிப்புக்குக் குறையில்லை. ஆனால், அவளுக்குத் தேவையான அன்பைப் பொழியத்தான் ஆள் இல்லை. இல்லையென்றால், அவள் ஏன் ஓர் அடியாளை, அதுவும் தன்னை வல்லுறவு கொண்டவனை விரும்பி மணமுடிக்கத் துணிகிறாள். சீதாவின் வாழ்க்கை இப்படியெல்லாம் ஆகும் என சீதாவே நினைத்திருக்க மாட்டாள். எந்தக் காரணமும் இல்லாமல் அப்படியே கண்மூடித்தனமாகவா சீதா அவனைக் கரம்பற்றத் துணிந்தாள் என எல்லோருக்கும் சந்தேகம் எழுவது இயல்புதான். அவளுக்கு அவனைப் பிடித்துப்போக ஆதாரமான காரணம் ஒன்று இருந்தது. அவனும் அவளைப் போல ஆதரவற்றவன். ஆதரவற்றவனை ஆதரவற்றவள் நாடுவது இயற்கையானதுதானே?

 அவனுடைய தாய் அவனைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். எனவே, அவன் தெருவிலேயே அலைந்து திரிந்து வாழ்வை நகர்த்தியவன். அவன் குடியிருந்த வீட்டை மூடிவைக்க கதவுகூடக் கிடையாது. வாசிக்கத்தான் ஆளில்லையே தவிர, மற்றபடி அவன் ஒரு திறந்த புத்தகம். குடி, கூத்து, கேலி, கிண்டல் என நாள்களைக் கடத்துவதாலேயே சமூகப் புறக்கணிப்புக்கு ஆளானவன். சமூகம் அவனை அக்கறையோடு அணுகவில்லை; அவனும் சமூகத்தை அக்கறையுடன் அணுகவில்லை. யாரும் அவனிடம் அன்பாக நடந்துகொண்டதில்லை. அவனும் யாரிடமும் அன்பாக நடந்துகொண்டதில்லை. 

 அவனைப் பொறுத்தவரை எல்லாமே பணம்தான். பணத்துக்காக எந்த வேலையையும் செய்வான். இல்லாவிட்டால் வெறும் ஐந்நூறு ரூபாய் பணத்துக்காக ஒரு பெண்ணின் வாழ்வைச் சீரழிக்கத் துணிந்திருப்பானா? அவனிடம் எந்த நல்ல குணமும் இல்லையா எனக் கேட்டால், தன்னைப் போல் இன்னொரு ஆதரவற்றவன் இந்தச் சமூகத்தில் உருவாகக் கூடாது என்பது மட்டுமே அவனிடம் காணப்படும் நல்ல குணம். அவனது நடத்தை, பேச்சு என எல்லாவற்றிலுமே தான்தோன்றித்தனமும் தடித்தனமுமே தென்படும். எந்தப் பெண்ணையும் முகம்சுளிக்கச் செய்யும் நடத்தை கொண்ட ஒரு துஷ்டனை, ஏன் சீதா போன்ற பெண் தனக்கான துணை என்று கருதுகிறாள்? அவன் கரடுமுரடானவனாக இருந்தாலும், அவனிடமும் மென்மையான மனம் ஒன்று இருப்பதாக சீதா நம்புகிறாள். தாயற்ற சீதாவுக்குத் தந்தை இருந்தும் பயனில்லை; அவனுக்கோ தாய் தந்தை இருவரும் யார் என்றே தெரியாது. அவனும் ஆதரவற்றவன் அவளும் ஆதரவற்றவள். இந்தப் புள்ளியில் அவர்கள் இருவரும் வந்து இணைகிறார்கள்.

துன்பம் தரும் ராமன்

சீதா தன்னை வல்லுறவு கொண்டவனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். அவனை மணந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துக் காய்களை நகர்த்துகிறாள். முரடனான அவனுக்கு அவ்வளவு மூளை இல்லை. எனவே, தான் அவளை வல்லுறவு செய்ததை ஊரறியச் சொல்லவைக்கிறாள் சீதா. ‘என்னைக் கெடுத்த உன்னைப் புருஷன் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?’ எனக் கேட்கிறாள். ஒரு பெண்ணை வல்லுறவுசெய்த ஆண் அயோக்கியனாக வேண்டுமானால் இருக்கலாம், எப்படிப் புருஷனாக ஆக முடியும்? தொட்டுத் தாலி கட்டிவிட்டால் புருஷன் என்பார்கள். ஆனால், தன்னைத் தொட்ட காரணத்துக்காகவே அவனைப் புருஷன் என்று கொண்டுவிட்டாள் சீதா. நியாயமாகப் பார்த்தால் அவன் ஒரு கிரிமினல் குற்றவாளி.

ஒருவழியாக சீதா அவனை மணமுடித்துக்கொள்கிறாள். அதன் பின்னர்தான் அவனுக்குப் பெயரும் வைக்கிறாள். அதுவரை அவனை யாரும் பெயர் சொல்லி அழைத்ததே இல்லை. அவனுக்கு அவள் வைத்த பெயர் சீதாராமன். திருமணத்துக்குப் பின்பு சீதாராமன் திருந்திவிடுகிறான்; உழைத்துப் பிழைக்கிறான். ஆனாலும், பழைய வாழ்வின் சாபம் அவனைத் துரத்துகிறது. அவனது பழைய வாழ்க்கையால் உண்டான பழி உணர்வுக்குப் பலியாகிறாள் ஒரு குழந்தைக்குத் தாயான சீதா. எல்லாக் காலத்திலும் சீதைகளின் துயரத்துக்கு ராமன்களே காரணமாக இருப்பார்கள்போல என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறது சீதாவின் வாழ்க்கை.

(நிழல்கள் வளரும்)

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: 
chellappa.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x