Published : 21 Jul 2019 10:38 AM
Last Updated : 21 Jul 2019 10:38 AM

முகங்கள்: பெண்கல்விக்கு வித்திட்ட புனிதர் மரியம்

என்.சுவாமிநாதன்

பக்தியிலும் சேவையிலும் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்ட கேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு அக்டோபர் 13-ல் புனிதர் பட்டம் வழங்குகிறது வாடிகன் கத்தோலிக்கத் திருச்சபை. ஆன்மிகத்திலும் பெண் கல்வியிலும் கடந்த நூற்றாண்டில் அசுரப் பாய்ச்சல் நிகழ்த்தியவர் திரேசியா.  

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் புத்தென்சிரா கிராமத்தில் 1876-ல் பிறந்தார் திரேசியா. புகழ்பெற்ற சிரமல் மங்கடியான் குடும்பத்தைச் சேர்ந்த இவர், சிறுவயதிலேயே கருணை உள்ளத்துடன் இருந்தார். தன்னிடம் இருப்பதைப் பகிர்ந்து உண்பதையும் வழக்கமாக வைத்திருந்தார். ஜெபமாலை படிக்கத் தெரியாத திரேசியா, ஓர் இரவில் படித்துக்கொண்டிருந்தது அவருடைய அம்மாவுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

கருவிலேயே திருவானவர்

தேவாலயத்துக்குத் தினமும் அம்மாவோடு செல்லும் திரேசியா ஒருநாள் பாவமன்னிப்பு எடுக்க வருவதாகச் சொன்னார். “12 வயது முடிந்தால்தான் பாவமன்னிப்பு எடுக்க பாதிரியார் ஒப்புக்கொள்வார். இப்போது உனக்கு ஆறு வயதுதான் முடிந்திருக்கிறது” என மறுத்தார் அவருடைய அம்மா. ஆனால், திரேசியாவோ கடவுளிடம் அன்பு செலுத்த வயது தடையல்ல எனச் சொல்லி ஆலயத்துக்குப் புறப்பட்டார். ஒன்பது வயதில் பாவ அறிக்கைத் தாக்கல் செய்யலாம்; 12 வயதில் புது நன்மை எடுக்கலாம் என்பதுதான் திருச்சபைச் சட்டம். ஆனால், திரேசியாவுக்கு அந்த அளவுக்கு வயதாகவில்லை என்று சொன்ன அருட்பணியாளரிடம் தன் புத்திக்கூர்மையை நிரூபித்துப் பாவ அறிக்கை தாக்கல் செய்தார். தொடர்ந்து நற்கருணையும் எடுத்துக்கொண்டார்.

பதின் பருவத்திலேயே திருமணம் செய்துவைத்துவிடும் காலம் அது. திரேசியாவின் அண்ணன் பொரிஞ்சுக்கும் அக்கா மேரிக்கும் திருமணம் முடிந்துவிட்டது. தொடர்ந்து 12 வயதான திரேசியாவையும் திருமணம் செய்துகொள்ளச் சொன்னது குடும்பம். ஆனால், யேசுவின் சிலுவையைச் சுமப்பதைத் தவிர தன் வாழ்வில் வேறு எதற்கும் இடமில்லை எனவும் கன்னியாஸ்திரி மடத்தில் சேர்ந்து ஆயுள் முழுக்க சேவை செய்வதே லட்சியம் எனவும் தீர்க்கமாகச் சொன்னார் திரேசியா.

துறவற சபையில் இடம்

தாயின் இறப்புக்குப் பின் குடிகாரத் தந்தை, குடிகாரச் சகோதரரோடு வசித்தார் திரேசியா. கன்னியாஸ்திரி படிப்பில் சேர 150 ரூபாய் கட்டணத்தைச் செலுத்த திரேசியாவுக்கு வழியில்லை. தன் அம்மாவின் சகோதரர் வீட்டுக்குப் போனார். ஆனால், அங்கும் திருமண அறிவுரை கிடைக்க, கடைசியில் உள்ளூர் பங்குத் தந்தையிடம் சென்றார். அவர் அனுமதித்தால் வீடு வீடாகப்போய் மடத்தில் சேர்வதற்கான கட்டணத்தைத் தர்மமாக வாங்கிவருவதாகக் கண்ணீர்மல்கக் கூறினார். ஆனால், அருட்பணியாளர் அதற்கு அனுமதிக்கவில்லை. “உனக்கான நேரம் வருகையில் யேசுவே கைப்பிடித்து அழைத்துச் செல்வார்” எனச் சொல்லி அனுப்பிவிட்டார்.

பகலில் சமூகசேவையிலும் இரவில் தியானத்திலும் ஈடுபட்டுவந்தார். 1902-ல் புத்தன்சிரா ஆலயத்தின் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றார் ஜோசப் விதயத்தில். அவரைத் தனது ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டார் திரேசியா. ஒரு நாள் பாதம், தலையில் இருந்து ரத்தம் வந்த நிலையில் மயங்கினாராம் திரேசியா. உள்ளூர் வைத்தியர் பரிசோதித்ததில் உடலில் எந்தக் காயமும் இல்லை. யேசு சிலுவையில் அறையப்பட்டபோது காயம் ஏற்பட்ட அதே ஐந்து இடங்களில் இருந்து திரேசியாவுக்கு ரத்தம் கசிந்திருப்பதால் இது தெய்வாதீனம் என வைத்தியர் சொன்னார். அதைச் சிலர் ஏற்றுக்கொண்டனர். இன்னும் சிலரோ திரேசியாவுக்குப் பேய் பிடித்திருக்கிறது எனச் சொன்னதாக திரேசியா தனது டைரியில் எழுதியிருக்கிறார்.

இதை உள்ளூர் பங்குத்தந்தை விதயத்தில் கவனத்துக்குக் கொண்டுசென்றார்கள். அவர்  இதை திருச்சூர் மறைமாவட்டத்தின் பிஷப் ஜான்மீனச்சேரியிடம் சொன்னார். இதனிடையே நோயாளிகளுக்காகவும் வயோதிகர்களுக்காவும் ஜெபம் செய்ய வீடுகளுக்கும் அழைக்கப்பட்டார் திரேசியா. பிஷப்பின் வழிகாட்டுதலோடு மூன்றாம் துறவறச் சபையிலும் சேர்க்கப்பட்டார்.

உதித்தது ஏகாந்தபவன்

1909-ல் கேரளத்தில் கொச்சின் சுற்றுவட்டாரத்தில் அம்மைநோய் கொடூரமாகத் தாக்கியது. மருத்துவ வசதி இல்லாமல் பலரும் இறந்தனர். புத்தன்சிரா கிராமத்தில் மட்டும் 60-க்கும் அதிகமான உயிர்களைக் குடித்தது அம்மை. துளியும் பயமின்றி இரவு, பகல் பாராமல் மீட்புக்காக உழைத்தார் மரியம் திரேசியா. பிரார்த்தனைகளும் செய்தார்.

புத்தன்சிரா பங்குமக்கள் அவருக்குச் சிறிய இடம் ஒதுக்கி வீடு கட்டிக் கொடுத்தனர். இந்தப் பணிகளைப் பங்குத்தந்தை விதயத்தில் முன்னின்று செய்தார். வீட்டுக்கு ‘ஏகாந்தபவன்’ எனப் பெயரிட்டனர். திரேசியாவின் மூன்று தோழிகளும் அவருடனே இருந்தனர். அங்கு பிரார்த்தனைகள் நடந்தன. திரேசியாவின் வாழ்வில் நடந்த அதிசயங்களையும் அவரது அர்ப்பணிப்பையும் உணர்ந்திருந்த பிஷப் ஏகாந்தபவனின் பெயரை,  ‘திருக்குடும்பச் சபை’ என மாற்றினார். 1914, மே 14-ல் திருக்குடும்ப சபை உதயமானது. அதில் பேசிய பிஷப், திரேசியாவுக்கு ‘மரியம் திரேசியா’ எனப் பெயர் சூட்டினார். அன்றே அவருக்கும் அவருடைய தோழிகளுக்கும் புனித ஆசி வழங்கி அருட்சகோதரிகளாகவும் அறிவித்தார்.

மரியம் திரேசியாவின் திருக்குடும்பச் சபையின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட செல்வந்தர்கள் தங்கள் நிலங்களை சபைக்குத் தானமாகக் கொடுத்தனர். அப்படிக் கிடைத்த இடங்களில் குழிக்காட்டுச்சேரியிலும் தும்பூரிலும் மடங்களை நிறுவினார். குழிக்காட்டுசேரி மடத்துக்கு கட்டிடம் கட்ட கொச்சின் ராஜாவிடம் உதவியைக் கேட்டுப் பெற்றார் திரேசியா. அந்த மடம் ஏழைகளுக்கு அன்னமிடும் தர்மசாலையாகவும் விளங்கியது. தன் வாழ்வின் பிற்பகுதியில் இந்த மடத்தில்தான் வாழ்ந்தார் திரேசியா. இது இப்போது புண்ணியத்தலமாக விளங்குகிறது.

இரண்டு பள்ளிக்கூடங்கள், இரண்டு விடுதிகள், மூன்று கான்வென்ட்கள், ஒன்று ஆதரவற்றோர் இல்லம் ஆகியவற்றை 12 ஆண்டுகளுக்குள் நிறுவினார் மரியம் திரேசியா. இதன்மூலம் திருச்சூர் சுற்றுவட்டாரப் பெண்களுக்குக் கல்வியறிவை ஏற்படுத்தினார்.

வரலாற்றைச் சொன்ன சுயசரிதை

1926, மே 10 அன்று தும்பூர்மடத்தை மந்திரிக்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலிபீடத்தின் அருகில் இருந்த கைப்பிடிசுவர் இடிந்துவிழுந்ததில் திரேசியாவின் காலில் அடிபட்டுப் படுத்த படுக்கையானார். சோதனை காலமெல்லாம் குருநாதராக வழிகாட்டிய பங்குத்தந்தை விதயத்தில், திரேசியாவை அவரது சுயசரிதையை எழுதத் தூண்டினார். அப்படி திரேசியா எழுதிய டைரிக் குறிப்புகளே அவரது தெய்விக வாழ்வை வெளியுலகுக்குக் காட்டின. அருட்தந்தை விதயத்தில்லும் திரேசியாவின் அனுபவங்களையும் ஆன்மிக உணர்வையும் தன் டைரியில் எழுதி வைத்தார்.

பழைய கால மலையாள எழுத்துருவில் எழுதப்பட்ட இந்த இரு டைரிகளையும் படித்து, திருச்சூர் புனிததாமஸ் கல்லூரியின் முதல்வராக இருந்த தாமஸ் மூத்தேடன் நூல் வடிவமாக்கினார். இந்த டைரிக் குறிப்புகளை லத்தீனில் மொழிபெயர்த்து இதை ஒரு சாட்சியாகப் பாவித்து ரோமில் சேர்த்தனர். புனிதர் பட்டம் வழங்க இரு அதிசயங்களை நிகழ்த்தியிருக்க வேண்டும் என்பது விதி. அப்படி இருவரின் நோய் தீர்த்து அதிசயம் நிகழ்த்தியிருக்கிறார் மரியம் திரேசியா.

1926, ஜூன் 8 அன்று 50 வயதில் மரியம் திரேசியா மறைந்தார். அதிலிருந்து 38 ஆண்டுகள் கழித்து அதேநாளில் மறைந்தார் அவரது ஆன்மிக குரு விதயத்தில். குழிக்காட்டுச்சேரியில் உள்ள தூய சவேரியார் தேவாலயத்தில் இவர்கள் இருவரது சமாதிகளும் உள்ளன. தங்கள் மண்ணைச் சேர்ந்த மரியம் திரேசியாவுக்குப் புனிதர் பட்டம் அறிவித்திருப்பதைக் கொண்டாடி மகிழ்கின்றனர் கேரள மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x