Published : 20 Jul 2019 09:25 AM
Last Updated : 20 Jul 2019 09:25 AM

சிகிச்சை டைரி 14: விளக்குத்தூண் வைத்தியர்

ஜூரி 

அலோபதிக்கு இணையாக சித்த வைத்தியம், ஆயுர்வேதம், ஹோமியோ பதிகளில் நோய்கள் குணமாவதை நேரிலேயே அறிந்திருக்கிறேன். எந்தவகை மருத்துவமுறையையும் மட்டமாக நினைக்காமல், அந்தந்த நோய்க்கு உரிய சிகிச்சை முறையையும் மருத்துவர்களையும் தேர்வுசெய்வதில்தான் நோய்க்கான மருந்தே இருக்கிறது.
மதுரை பத்திரிகை அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்தபோது மூத்த பத்திரிகையாளர் ஒருவர் அமீபியாசிஸ் நோய்க்காக சித்த மருந்துகளைச் சாப்பிட்டார், பத்தியம் இருந்தார். தயிர் சாதம் மட்டும் அதிகம் சாப்பிட்டு வயிற்று வலியிலிருந்து மீண்டார்.

உணவு இடைவேளை நேரத்தில் எங்களிடம் அவர் இதைக் கூறியபோது அருகிலிருந்து கேட்ட ‘தொழிலாளர் கல்வி ஆசிரியர்’, அந்த மருத்துவரின் பெயர், முகவரி ஆகியவற்றையும் கேட்டு குறித்துக்கொண்டார். அந்த சித்த மருத்துவர் மதுரை விளக்குத்தூண் பகுதியில் பூண்டு மண்டிகளுக்கு நடுவில் ஓர் அறையில் தங்கி நோயாளிகளைப் பார்த்து வந்தார். பகலில் ஆசிரியர் வேலைக்குச் செல்வார். மாலையிலிருந்துதான் வைத்தியம்.

இவரா காப்பாற்றுவார்?

தொழிலாளர் கல்வி ஆசிரியரின் பக்கத்து வீட்டுக்காரர் கடையில் வேலைபார்ப்பவர். மகளுக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டு தலைப்பிரசவத்துக்கு வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார். வலி எடுத்ததும் பக்கத்தில் உள்ள பிரபல தனியார் மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்தார். குழந்தை பிறந்ததும் டாக்டர் அந்தத் தந்தையிடம், ‘உங்கள் பேரக் குழந்தை பிறந்தது முதலே வயிற்றுப் போக்கால் அவதிப்படுகிறது. உடனடியாக விலையுயர்ந்த ஊசி மருந்தை சிங்கப்பூரிலிருந்து வரவழையுங்கள் அல்லது வேலூர் சி.எம்.சிக்குத் தாயையும் சேயையும் எடுத்துச் சென்று சேருங்கள்’ என்று சொல்லிவிட்டார்.

அதுவரையில் செய்த செலவே அவருடைய வருவாய்க்கு அதிகம் என்பதால், மீனாட்சியம்மனே பார்த்துக் கொள்ளட்டும் என்று சொல்லி மகளையும் பேரக்குழந்தையையும் வீட்டுக்குக் கூட்டிவந்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட தொழிலாளர் கல்வி ஆசிரியர், விளக்குத்தூண் வைத்தியரைப் பற்றிச் சொல்லி, அவரிடம் காட்டுங்களேன் என்றார். பெரியவருக்குக் கோபம் வந்துவிட்டது. ‘குழந்தை மருத்துவத்திலேயே சிறப்புப் படிப்பைப் படித்தவர், இனிக் காப்பாற்ற முடியாது என்கிறார், பூண்டு கடைப்பக்கம் வைத்தியம் பார்க்கிறவரா காப்பாற்றுவார்’ என்று கோபமாகக் கேட்டார்.

அவரிடம் போவோம். அவரும் முடியாதென்றால் வந்துவிடுவோம் என்றார் தொ.க. ஆசிரியர். அந்த வீட்டு அம்மாளும் சேர்ந்துகொள்ள பெரியவர் அரை மனதாகச் சம்மதித்தார். ‘சரிம்மா நீ அண்ணனோட போயி, அவரைப் பாரும்மா’ என்று நம்பிக்கையில்லாமல் அனுப்பி வைத்தார். அந்த வைத்தியர், ‘பச்சை உடம்புக்காரியை ஏன் கூட்டியாந்திங்க? சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே’ என்று கூறிவிட்டு, ஒரு மருந்தைக் குழைத்துக் கொடுத்து இளம் தாயைச் சாப்பிடச் சொன்னார். சிறிது நேரம் கழித்துக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கச் சொன்னார்.

‘குடிக்க மாட்டேங்குது’ என்று அந்தப் பெண் கூறினார். ‘இப்பத்தானே பொறந்தது, அதுக்குள்ள பேச ஆரம்பிச்சுட்டுதா?’ என்று கேலியாகக் கேட்டுவிட்டு, ‘கொடும்மா குடிக்கும்’ என்றார். அப்படியே சிறிது நேரம் கழித்துக் குழந்தைக்குத் தாய்ப்பாலைச் சிரமப்பட்டு புகட்டினார் அந்தத் தாய். கால் மணிக்குப் பிறகு முதல்முறையாக அந்த சிசுவின் அழுகுரலைக் கேட்டு அனைவரும் சிரித்தார்கள். அந்தப் பெண்ணுக்கும் அவளுடைய தாய்க்கும் நன்றி என்பது வாய் வார்த்தையாக இல்லா மல், கண்ணீராகப் பெருகியது.

வைத்தியத்தை விட்டுடறேன்

வைத்தியர் அவர்களைப் பார்த்து, ‘இன்னும் ஓரிரு முறை வயித்தாலே போகும், பயம் வேண்டாம், ஒரேயடியா நிக்காது, நிக்கவும் கூடாது, குழந்தை பிழைச்சிக்கும். பெரிய பிரச்சினை ஏதும் இல்லை’ என்றார். குழந்தைக்குப் பெயர் சூட்டும் நாள் அன்றைக்கு நீங்க வரணும் என்று அழைப்பு விடுத்தனர். அடுத்த நாளிலிருந்து குழந்தை அழுவது பால் குடிப்பது என்று மற்ற சிசுக்களைப் போல ஆனது.

பிறகு குழந்தைக்குப் பெயர் சூட்டும் நாளில் அந்த வைத்தியருக்கு வீட்டில் ஏக மரியாதை. அப்போது வீட்டுப் பெரியவர் தன் வீட்டிலிருந்தவர்களையெல்லாம் அறிமுகம் செய்துவைத்ததுடன் எல்லோரிடமும், ‘இந்த வைத்தியர் ஐயாதான் குழந்தைக்கு உசிரு கொடுத்தவரு’ என்று நெக்குருகினார். ‘உங்களுக்கு இந்த ஒரு பெண் தானா?’ என்று கேட்டபோது ‘இன்னொருத்தி உள்ள இருக்கா, அவளுக்குத் தலையிலே முடியெல்லாம் கொட்டி சொட்டை மாதிரி ஆயிடுச்சு, காலேஜுக்குப் போறதைக்கூட நிறுத்திட்டா’ என்றார் பெரியவர்.

‘முதல்ல வரச் சொல்லுங்க, நான் அதுக்கும் மருந்து தாரேன்’ என்றார். அந்தப் பெண் வெளியே வந்து, ‘ஐயா நீங்க தாற மருந்தில உள்ளதும் கொட்டினா?’ என்று கேட்டார். ‘அத்தோட நான் வைத்தியத்தையே விட்டுடறேன் தாயி’ என்றார் வைத்தியர். பிறகு மலை வேம்பில் தயார் செய்த மருந்தைக் கொடுத்து அந்தப் பெண் தலையிலிருந்த புழு வெட்டைக் குணப்படுத்தியதுடன், முன்பைவிட நீண்ட கருங்கூந்தலும் வளரச் செய்தார்.

திகைக்க வைத்த காரணங்கள்

நீண்ட காலத்துக்குப் பிறகு கழுத்தில் வலி அதிகமானது. தலையை நேராகத் தூக்கி வைத்துக்கொள்ள முடியாதபடி கழுத்தைச் சுற்றி வலியிருந்தது. ‘ஸ்பான்டிலிடிஸ்’ என்றார்கள். அலோபதியில் மின்சார அதிர்வு சிகிச்சை தந்தார்கள்.

அந்த நேரத்துக்கு மட்டும் வலி குறைந்ததைப் போல பிரமை ஏற்படும். பிறகு பழைய நிலைக்குத் திரும்பிவிடும். இது முற்றி, இடது கையில் குறிப்பிட்ட சில விநாடிகளுக்கொரு முறை நரம்பு வழியாக அமிலத்தைச் சொட்டு சொட்டாக வழியவிடுவதைப் போல எரிச்சலுடன் வலி ஏற்பட்டது.

நேரமாக நேரமாக மனம் வேறெதையும் நினைக்க மறுத்தது. தோள்பட்டையிலிருந்து கையை அகற்றிவிட்டால்தான் வலி குறையும் என்று அரற்ற ஆரம்பித்துவிட்டேன். அப்போதுதான் வீட்டுக்கு அருகில் வசித்த சார்லஸ் வில்சன் என்ற ஹோமியோபதி மருத்துவரைச் சந்தித்தேன்.

இரண்டே நாளில் அந்த வலியைக் குறைத்தார், பிறகு அதை அறவே நீக்கினார். சட்டையின் மேல்பட்டனைத் திறந்து வைப்பது வழக்கமா, தனிமையில் இருக்கும்போது எதையாவது நினைத்து அழுவீர்களா என்று கேட்டார்.

எனக்கு வந்த வலிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று திகைத்தேன். ஆனால், அந்த இரண்டும் உண்மை என்று ஒப்புக்கொண்டேன். பிறகு சிகிச்சை தொடங்கியது.
நோயைக் கணிப்பதிலும் நாடி பார்ப்பதிலும் நிபுணர்.

சித்த மருத்துவமும் படித்துப் பட்டம் பெற்றவர். அவரிடம் வருகிறவர்களைக் குணப்படுத்தாமல் இருக்க மாட்டார். எத்தனை ஆண்டுகள் பட்ட அவதியாக இருந்தாலும் குணமாகிவிடும். பத்தாண்டுகளுக்கு முன்னால் இயற்கை எய்திவிட்டார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x