Published : 18 Jul 2019 05:51 PM
Last Updated : 18 Jul 2019 05:51 PM

இயக்குநரின் குரல்: தலையைத் திருப்பவே முடியாது!

ஆர்.சி.ஜெயந்தன் 

எட்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் ‘சூப்பர் டூப்பர்’ படத்தின் மூலம் திரும்ப வந்திருக்கிறார் ‘ஆண்மை தவறேல்’ நாயகன் துருவா. அவருடன் இந்துஜா இணைந்து நடிக்க, படத்தை இயக்கியிருக்கிறார் ஏ.கே.என்கிற அருண் கார்த்திக். படத்தின் டிரைலருக்கு வரவேற்பு பெருகிவரும் நிலையில் இயக்குநரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…

‘சூப்பர் டூப்பர்’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

ஒரு படம் பற்றி ரசிகர்கள் பேசத் தொடங்குவது தலைப்பில் இருந்துதான். முதலில் ‘சூப்பர்’ என்றுதான் தலைப்பு வைத்தோம். படித்ததும் கேட்டதும் சக்தி கொடுக்கும் நேர்மறையான வார்த்தையாக இருந்தாலும் அதில் ஒரு சின்ன குறை இருக்கிறது என்று உணர்ந்து, அதனுடன் ‘டூப்பர்’ என்ற வார்த்தையும் இணைத்தோம். இரண்டு வார்த்தைகளுக்கும் கதையோடும் அதிக தொடர்பு இருக்கிறது. அதேநேரம் இதுதான் இந்தப் படத்தின் ஜானர் என்று குறிப்பிட்டு பிக்ஸ் பண்ண முடியாத பல்சுவை சுவாரசியம் கொண்ட படம் என்பதும் இந்தத் தலைப்பைச் சூட்டுவதற்குக் காரணம்.

‘ஆண்மை தவறேல்’ துருவா, இந்தப் படத்துக்குள் எப்படி வந்தார்?

‘ஆண்மை தவறேல்’ அவருக்கு நல்ல பெயர் பெற்றுக்கொடுத்தது. அந்தப் பெயரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் அடுத்த கதை கிடைக்கும்வரை நடிக்கப்போவதில்லை என்ற உறுதியுடன் அவர் கதை கேட்டுவருவதை நண்பர் மூலமாக அறிந்துகொண்டு அவரை அணுகிக் கதை சொன்னேன். ‘இதுவரை 20 கதைகள் கேட்டுவிட்டேன். எதுவுமே எனக்கான ‘கம்-பேக் ஸ்டோரி’யாகத் தோன்றவில்லை.

ஆனால், இந்தக் கதை எனக்கானது’ என்று நிமிர்ந்து உட்கார்ந்துவிட்டார். கதையில் சேர்க்கும்படி சில ஐடியாக்களைக் கொடுத்தார். அவர் கொடுத்த ஐடியாக்கள் அனைத்தும் கதையை மேலும் வலுப்படுத்துபவையாக இருந்தன. ‘சூப்பர் டூப்பர்’ ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படமாகப் புது வடிவத்துக்கு மாறியதற்குத் துருவா முக்கியக் காரணம்.

படத்தின் போஸ்டர்களைப் பார்த்தால் ‘மேயாத மான்’ இந்துஜாவுக்குத்தான் முக்கியக் கதாபாத்திரம் போல் தெரிகிறதே?

இல்லை. துருவா, இந்துஜா, யூடியூப் புகழ் ஷாரா ஆகிய மூன்று பேரும் முக்கியத் தூண்கள். இந்தப் படத்தின் நல்ல அம்சமே இது ஒருவரைப் பற்றிய படம் அல்ல. நாயகன், நாயகி இரண்டு பேருக்குமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை இந்தக் கதையில் கையாண்டிருக்கும் பிரச்சினை உருவாக்கிவிட்டது. நாயகன், நாயகி மட்டுமல்ல; படத்தில் பத்து நிமிடம் வந்து செல்லும் சின்னச் சின்னக் கதாபாத்திரங்களுக்கும் முழுமையைக் கொடுத்திருக்கிறோம்.

யாரையும் வீணடித்துவிட்டோம் என்று சொல்லவே முடியாது. துருவா 8 ஆண்டுகள் காத்திருந்த பிறகு படம் நடிக்கிறார். துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பலரும் நடிப்பு தாகம் கொண்டவர்கள் என்றாலும் புதுமுகங்கள். ஆனால், சினிமா சந்தைக்கு நன்கு பிரபலமான ஒரு முகம் தேவை. அதேநேரம் அவருக்குத் தமிழும் பேசத் தெரிய வேண்டும் என்று தேடியபோது எனது தெரிவாக அமைந்தவர் இந்துஜா. நடிப்பு, தமிழ் வசன உச்சரிப்பில் மட்டுமல்ல; திரைக்கதையில் நாம் எழுதும் உணர்ச்சிகளைச் சிறப்பாக வெளிப்படுத்தக்கூடியவர். அவர் ஹோம்லி, மாடர்ன் என இரண்டு வகைக் கதாபாத்திரங்களிலும் பொருந்தக்கூடியவர்.

இந்தக் கதையிலும் இரண்டு பரிமாணங்களை அநாயாசமாக வெளிப்படுத்தி நடிப்பில் காட்சிக்குக் காட்சிப் பின்னியிருக்கிறார். முதலில் கதையைக் கேட்டுவிட்டு ‘ரொம்பக் கஷ்டமாக இருக்கும் போலிருக்கிறதே’ என்று மறுத்தார். ‘விக்ரம் பிரபு, ஆர்யா, பிரபுதேவா என்று நடித்துவிட்டுப் புதுக் கதாநாயகனுடன் நடிக்கப்போகிறாயா?’ என்று இந்துஜாவைச் சுற்றியிருந்த சிலர் குழப்பிவிட்டார்கள். ஆனால், இந்துஜா ‘இதுபோல் ஒரு கதையும் கதாபாத்திரமும் மீண்டும் வருமா என்று தெரியாது’ கூறிவிட்டு வந்து நடித்தார்.

அவரது முடிவு அவருக்குப் பெரும் வலிமையாக மாறிவிட்டதை இப்போது உணர்ந்திருக்கிறார். இந்தப் படம் வெளியான பிறகு கதாநாயகியை மையப்படுத்தும் படங்கள் அவரைத் தேடி வரும். அதேபோல் நடிகர் ஷாராவும் இந்தப் படத்துக்குப் பின் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக ஆகிவிடுவார். அவருக்குள் இருக்கும் இயக்குநரும் வெளிப்படுவார் என்று எதிர்பார்க்கிறேன். இவர்களோடு மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யா நடித்திருக்கிறார்.

படத்தின் கதை என்ன?

ஒரு சுவாரசியமான கதையைப் படிக்கும்போது, கதையை முடிக்கும்வரை புத்தகத்தைக் கீழே வைக்க மாட்டோம் இல்லையா; அப்படித்தான் இந்தப் படத்தின் கதையும். தலையை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திருப்பவே முடியாதபடி பயணிக்கும்படியான ஒரு வலிமையான கதை. அதில் காதல், திரில்லர், சாகசம், சென்டிமென்ட், நகைச்சுவை என எல்லா வகையான உணர்ச்சிகளும் அதனதன் இடத்தில் இயல்பாக இடம்பிடித்துக்கொண்டிருக்கின்றன. கதாநாயகிக்கு ஒரு பிரச்சினை.

அதற்குள் இரண்டு இளைஞர்கள் வந்து மாட்டிக்கொள்கிறார்கள். அந்த இருவரில் ஒருவர் கதாநாயகன். பிரச்சினையின் ஆழம் தெரியாமல் நாயகியைக் காதலிக்கத் தொடங்கிவிடுகிறார். காதல் என்றான பிறகு நாயகனால் விலகி ஓட முடியாதல்லவா; இப்போது காதலியைக் காப்பாற்ற வேண்டுமானால் அந்தப் பிரச்சினையைத் தீர்த்தாக வேண்டும். தன் நண்பர்களின் உதவியுடன் கதாநாயகன் பிரச்சினையை எப்படிக் கையாண்டார் என்பதுதான் கதை.

உங்கள் பின்னணி, படக்குழுவைப் பற்றிக் கூறுங்கள்?

அடிப்படையில் நான் தீவிர சினிமா ரசிகன். கல்லூரியில் வகுப்பறையில் இருந்த நாட்களைவிடத் திரையரங்கில் இருந்த நாட்கள்தான் அதிகம். சினிமா பார்த்துத்தான் நான் சினிமா கற்றுக்கொண்டேன். முதலில் சில குறும்படங்கள் எடுத்தேன். அதன் தொடர்ச்சியாக நான் எடுத்த ‘லேகா’ என்ற ‘பைலட் பிலிம்’தான் எனக்கு சினிமா இயக்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தது.

அந்தப் படத்தில் பணியாற்றிய என் நண்பர்களே தற்போது ‘சூப்பர் டூப்ப’ரிலும் பணியாற்றியிருப்பது எங்கள் குழுவுக்குக் கிடைத்த முதல் வெற்றி. ‘சூப்பர் டூப்பர்’ இன்னும் பெரிய வாய்ப்புகளைக் கொண்டுவந்து சேர்க்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x