Published : 18 Jul 2019 05:32 PM
Last Updated : 18 Jul 2019 05:32 PM

தரைக்கு வந்த தாரகை 22: கல்யாணமும் கண்ணீரும்!

தஞ்சாவூர்க் கவிராயர் 

பானுமதி அம்மையாரின் குரலில் ஒரு மாற்றம் தெரிந்தது. ஏதோ ஒரு தடுமாற்றம், தயக்கம், பழைய கண்ணீர் இல்லை. குரல் மங்கிப் போய்விட்டது. பேச்சில் ஒரு குழப்பம்.
எனக்குப் புரிந்தது என் முன்னாலிருப்பது பானுமதி அம்மையாரே அல்ல. திருமணத்துக்காகக் காத்திருக்கும் ஒரு அறியாத பெண். பல வருடங்கள் பின்னோக்கிச் சென்றுவிட்டார் பானுமதி. அந்த வாழ்க்கையை என் முன்னால் மறுபடி வாழ்ந்துகொண்டிருந்தார் அவர்.

“சீதம்மா சொன்னார் என்பதற்காகச் சிரித்து வைத்தேன். எனக்குத் தலைவலி மண்டையைப் பிளந்தது” என்று மெதுவாகச் சொன்னார். அவர் பார்வை காலத்தைத் தாண்டி லயித்தது. பானுமதி தொடர்ந்தார்.
“ ‘அப்போது பார்த்து கமலா அம்மா வந்து சேர்ந்தார். “வெள்ளிக்கிழமை முகூர்த்தம் வைக்க முடியாது இன்னும் மூணு நாளைக்கு அப்புறம்தான்' என்ற சீதம்மா, ‘போ போய்க் குளிச்சுட்டுப் புடவை மாற்றிக்கொண்டு வா' என்று என் நிலைமையை கமலா அம்மாவுக்குப் புரியவைத்தார். எனக்குச் சொல்ல முடியாத வெட்கம் உண்டாயிற்று. ‘சீ...சீ என்னால் இவங்களுக்கு எவ்வளவு தொல்லை!' நான் வேகமாக உள்ளே போனேன்.

‘அதனால் என்ன? ஞாயிற்றுக்கிழமை கல்யாணத்தைத் தடபுடலாக நடத்திவிடுவோம்' என்று உற்சாகமாகச் சொன்னார் கமலா. இவர் என்ன மனுஷியா? இல்லை வானுலக தேவதையா? என்று அவரைப் பார்த்து வியந்தேன். என்னை அருகில் உட்காரவைத்து தலையைத் தடவிக் கொடுத்தார். அவரது வாய், கல்யாண ஏற்பாடுகள் என்னென்ன செய்ய வேண்டும் என்று எல்லோரிடமும் பட்டியல் போட்டுச் சொல்லிக் கொண்டிருந்தது. ‘எல்லோரும் வந்தாச்சா?' என்று ஒரு நண்பர் கேட்டார்.

‘ஒருத்தர் மட்டும் வரவில்லை. அவரை நான் போலீஸ் கமிஷனர் ஆபீசுக்கு அனுப்பியிருக்கிறேன். பெண்ணின் கல்யாணத்துக்கு போலீஸ் பந்தோபஸ்து கேட்டிருக்கிறேன்...நானே போலீஸ் கமிஷனர் மிஸ்டர் பெட்ரோவைப் போய்ப் பார்க்கணும்'
‘என்ன அக்கா? போலீஸ் அது இதுன்னு மிரட்டறே...இது என்ன மிலிட்டரி கல்யாணமா?' என்று சீதம்மா கேட்டார்.
‘அப்படியில்லை, பெண்ணின் தகப்பனார் கூட்டத்தோடு வந்து ‘என் பெண் மைனர்' என்று சொல்லி கல்யாணத்தை நிறுத்தப் பார்த்தால் என்ன பண்றது? இதெல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை ஏற்பாடு. அவ்வளவுதான்'என்று சொல்லிவிட்டுப் போனார் கமலம்மா.

அழதே..அம்மாயி..

சற்றைக்கெல்லாம் ராமகிருஷ்ணாவும் அவருடைய நண்பர்களும் வந்தார்கள். என் கண்கள் கலங்கியிருந்ததைப் பார்த்து ராமகிருஷ்ணா ‘அழாதே அம்மாயி!. வீட்டுக்குப் போகணும்போல இருந்தா இப்பவே கூட நீ போகலாம்' என்றார்.
‘நீ சும்மா இரு ராம். குழந்தையை ரொம்பக் குழப்பாதே!' என்றார் சீதம்மா.
ஜார்ஜ் டவுனில் இருந்த வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் திருமணத்தை விமரிசையாக நடத்த ஏற்பாடுகள் நடந்தபடி இருந்தன. கல்யாணத்துக்குப் பெண் வீட்டாரையும் பிள்ளை வீட்டாரையும் அழைப்பதைப் பற்றிப் பேச்சு வந்தது. ராமகிருஷ்ணா உறுதியாகச் சொல்லிவிட்டார். 

‘இரு வீட்டாரும் இல்லாமலேதான் இந்தக் கல்யாணத்தை நடத்த வேண்டும்' கல்யாணம் விமரிசையாக நடக்கப் போவதைத் தெரிந்துகொண்ட ராமகிருஷ்ணா, ‘இதெல்லாம் வேண்டாம் அம்மா. ‘செஞ்சுலக்ஷ்மி' பட வேலை நடந்துகிட்டிருக்கு. (கமலா கோட்னிஸ் கதாநாயகி, சி.ஹெச். நாராயணராவ்தான் கதாநாயகன்) தயாரிப்பாளர் செளந்தரராஜன் (தமிழ்நாடு டாக்கீஸ்). இரண்டாயிரம் ரூபாய் தருவதாகச் சொல்லியிருக்கிறார். அதை வாங்கித் தருகிறேன்' என்றார்.

கமலம்மா சிரித்தபடி ‘நீ வாங்கிட்டு வரும் பணத்தை உன் மனைவியிடம் கொடு. இந்தப் பேச்சை விட்டுவிடு' என்றார்.
கல்யாண நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. கவலையால் சாப்பாடு இறங்க மறுத்தது. சீதம்மா ஏதாவது சொல்லி என்னை உற்சாகப்படுத்த முயன்றபடி இருந்தார். ‘அசோகவனத்தில் சீதை இருந்ததுபோல் இருக்காதே அம்மா. முகத்தை சந்தோஷமாக வைத்துக்கொள். இதோ பார் எங்கள் வீட்டு அவுட்ஹவுசில் நீங்கள் குடும்பம் நடத்தலாம். வாடகை ரூ. 15 தான்' என்றார். 

மறுநாள் மணப்பெண் அலங்காரம் தொடங்கிவிட்டது. பிரபலப் பின்னணி பாடகி ஆர்.பாலசரஸ்வதிதேவி வந்து சேர்ந்தார். மிகவும் ராசியான அவர்கள் வீட்டு மனைப் பலகையையும் கொண்டுவந்தார்.கமலம்மாவின் நெருங்கிய நண்பர் பூரம் பிரகாசராவ் இரண்டு கார்களை அனுப்பியிருந்தார்.

திகைப்புடன் தாலி கட்டிய மணமகன்

கோயிலுக்குப் புறப்பட்டோம். அங்கே போலீஸ்காரர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். எடிட்டர் ராஜன் எங்களை ஒளிப்படம் எடுத்தபடி இருந்தார். ராமகிருஷ்ணாவின் நண்பர்கள் எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடாதபடி கண்காணித்தார்கள். நான் மனைப்பலகையில் உட்கார்ந்தேன். புனித மந்திரங்களின் உச்சாடனம் ஒலிக்கக் தொடங்கியது. ஹோமப்புகை எங்கும் பரவியது. என் கண்களில் கண்ணீர் பெருகியது.
சாஸ்திரிகள், என் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து என்னைக் கன்யாதானம் செய்துகொடுக்க ஒரு தம்பதியை ஏற்பாடு செய்திருந்தார். அவர்களைப் பார்த்ததும் ஒருவேளை போன ஜென்மத்தில் இவர்கள் என்னுடைய பெற்றோரோ என்னவோ என்று நினைத்துக்கொண்டேன்.

நாகஸ்வரம் மேளம் மட்டுமின்றி டிரம்ஸ், கிளாரினட் இசையும் சேர்ந்துகொண்டன. எங்கே பார்த்தாலும் மகிழ்ச்சியின் கோலாகலம்.. கை குலுக்கல்கள். என் கழுத்தில் மங்கலநாண் அணிவிக்கும்போது ராமகிருஷ்ணாவைப் பார்த்தேன். அவர் கண்களில் ஏதோ ஒரு திகைப்பு இழையோடியது. என் மனக்கஷ்டத்தையும் அதேநேரம் மனோதிடத்தையும் பார்த்ததால் ஏற்பட்டிருக்கலாம். எல்லோரும் எங்கள்மீது அட்சதை தூவி ஆசீர்வதித்தார்கள். என் மாமியார் கொடுத்தனுப்பிய நாகவள்ளிப் புடவையைக் கோயிலுக்குப் பின்னால்போய் மாற்றிக்கொண்டு வந்தேன்.

(அப்போதெல்லாம் கோவில் திருமண மண்டபத்தில் அறை வசதி எல்லாம் கிடையாது). அந்தப் புடவை எனக்கு வெகு அழகாகவும் பாந்தமாகவும் இருப்பதாகச் சொன்னார்கள். திருமண விருந்து 200 பேருக்கு மாடர்ன் கபேயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்துக்குப் பிறகு ஒரு இசைக் கச்சேரி. அதில் பாலசரஸ்வதியுடன் சேர்ந்து என்னையும் பாட வற்புறுத்தினார்கள். அதன்பிறகு கமலம்மா பிடிவாதமாக எங்களை மாலையும் கழுத்துமாக எங்கள் வீட்டுக்குக் கூட்டிச்சென்றார்.

அப்பா எனும் குழந்தையின் முன்னால்

கார் பீச் ரோடு வழியாக ஆழ்வார்பேட்டை நோக்கிப் போயிற்று. தூரத்தில் கடல் தெரிந்தது. என் மனசுக்குள்ளும் அலைகளின் ஆர்ப்பரிப்பு. வீடு போய்ச் சேர்ந்தோம். அப்பா உடம்பு சரியில்லாமல் கட்டிலில் படுத்திருந்தார். அம்மா பக்கத்தில் உட்கார்ந்து அவர் காலைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார்.
அப்பாவைப் பார்த்ததும் எனக்கு அழுகை பீறிட்டது. நானும் என் கணவரும் அவர் காலைத் தொட்டு வணங்கினோம். அப்பா என்னைப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு ‘அம்மா உனக்கு கன்யாதானம் பண்ணித்தரும் பாக்யத்தை எனக்கு இல்லாமல் பண்ணிவிட்டாயே’ என்று அழத் தொடங்கிவிட்டார்.

‘வெங்கட சுப்பையா எல்லாம் உன் பிடிவாதத்தால் வந்ததுதான். நாங்கள் எல்லாம்தான் காரணம் என்று சொல்லலாம். ஆனால், இதை நாங்கள் செய்யவில்லை. எங்கள் மூலம் கடவுள் நடத்தி வைத்திருக்கிறார். நீ இல்லை என்ற குறையைத் தவிர உன் பெண்ணின் கல்யாணம் சாஸ்திர சம்பிரதாயம் ஒன்று விடாமல் நடந்தது. பெருமாள் கோயிலில் வைத்துதான் ராமு தாலிகட்டினான். ராமுவைத்தான் உனக்குத் தெரியுமே.

அவன் ஒரு ஜெம். உன் மகளும் அதிர்ஷ்டம் செய்தவள்தான். நாங்களும் உங்கள் நண்பர்கள்தானே. இரண்டு பேரையும் மனப்பூர்வமாக ஆசீர்வாதம் செய்து அனுப்பிவை’ என்று அப்பாவைத் தேற்றினார்கள் எனக்குத் திருமணம் செய்து அவரது நண்பர்கள். ஒரு குழந்தையைப் போல் மாறிவிட்டிருந்த அப்பா, என் தலைமீது கை வைத்து ஆசீர்வதித்தார். அம்மா குங்குமமும் மஞ்சளும் தந்துவிட்டு உள்ளே போய்விட்டாள். பிறகு என் நகைகள் எல்லாவற்றையும் ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்து ராமகிருஷ்ணாவிடம் நீட்டினாள்.

‘வேண்டாம் அம்மா இதையெல்லாம் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். இப்போ என் மனைவி எப்படி இருக்கிறாளோ, அப்படியே இருக்கட்டும்’ என்று திடமான ஆனால் பணிவான குரலில் சொன்னார் என் கணவர். அப்போது நான் எப்படி இருந்தேன் தெரியுமா? கையில் கண்ணாடி வளையல்கள். கழுத்தில் தாலிச் சரடு. அத்துடன் ஒரு கருகமணி மாலை. அவ்வளவுதான். என் எளிமைக் கோலத்தைப் பார்த்து அம்மா அழுகையை அடக்கியபடி உள்ளே ஒடினாள்.

அப்பாவின் நினைவுகள்

புறப்படலாம் என்றார்கள் என்னுடன் வந்தவர்கள். அப்பாவை விட்டுப் பிரிந்து போகும் யதார்த்தம் என்னைச் சுட்டது. ஏன்தான் இந்தக் கல்யாணத்தை செய்து கொண்டோமோ என்று மனசு துடித்தது. தாங்க முடியாமல் அழுகையில் விம்மினேன். கல்கத்தாவில் ‘வர விக்ரேயம்’ படப்பிடிப்பின் போது வங்காளிச் சாப்பாடு எனக்குப் பிடிக்கவில்லை. அப்போது அவர் என்னை மடியில் உட்கார வைத்துக்கொண்டு, ஆரஞ்சுப் பழத்தை ஒவ்வொரு சுளையாகப் பொறுமையுடன் உரித்து, என் பசி தீரும்வரை ஊட்டிவிட்டது எனக்கு நினைவுக்கு வந்தது.

இரவில் படப்பிடிப்பு நடந்தால் தூங்காமல் கண்விழித்து கண்ணின் இமைபோல் என்னைக் காத்ததும் ஞாபகம் வந்தது.
அப்படிப்பட்ட அப்பாவைப் பிரிந்து போகிறேன். அப்பா கஷ்டப்பட்டு எழுந்து என் கையைப் பிடித்து ராமகிருஷ்ணாவின் கைகளில் ஒப்படைத்தார். ‘குழந்தாய் போய் வா. கடவுள் உனக்கு நல்ல புத்திர பாக்யம் அருளட்டும்’ என்றார். கார் புறப்பட்டது. எங்கள் வீட்டைத் திரும்பிப் பார்த்தேன். இந்த வீட்டுக்கு இனி நான் அந்நிய மனுஷிதான். நான் புக்ககம் போகிறேன். இந்த வீட்டில் இனி நான் வசிக்கவே முடியாது. வாசலில் நின்றபடி அப்பாவும் அம்மாவும் கையசைத்தார்கள்.மனசைக் கல்லாக்கிக்கொண்டு நானும் கையசைத்தேன். கண்கள் கோதாவரியாக மாறியிருந்தன.

(தாரகை ஜொலிக்கும்)
தொடர்புக்கு: 
thanjavurkavirayar@gmail.com
படம் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x