Published : 16 Jul 2019 06:29 PM
Last Updated : 16 Jul 2019 06:29 PM

டிங்குவிடம் கேளுங்கள்: அணு ஆயுதங்களை ஒழிக்க முடியுமா?

ஆந்தைக்கு ஏன் இரவில் பார்வை நன்றாகத் தெரிகிறது, டிங்கு? 

–ஆர். முத்துப்பாண்டி, 7-ம் வகுப்பு, 
பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

ஆந்தையின் கண்ணில் விழிக்கோளம் (eye ball) கிடையாது என்பதால் கண் நகராது. மற்ற பறவைகளுக்குப் பக்கத்துக்கு ஒரு கண் இருக்கும். ஆந்தைக்கு ஒரே பக்கத்தில் இரண்டு கண்கள் இருக்கின்றன. மற்ற பறவைகளை ஒப்பிடும்போது ஆந்தைக்கு பைனாகுலர் பார்வை (binocular vision) சிறப்பாக இருக்கிறது. அதாவது, இரண்டு கண்களாலும் ஒரு பொருளை, ஒரே நேரத்தில் முப்பரிமாணத்தில் பார்க்க முடியும்.

இதன் மூலம் ஒரு பொருளின் தூரத்தையும் ஆழத்தையும் சரியாகக் கணிக்க முடியும். ஆந்தை இரவு நேரத்தில் இரை தேடக் கூடிய பறவை. இதன் விழித்திரையில் குச்சிகள் (rods) அதிகமாகவும் கூம்புகள் (cones) குறைவாகவும் இருக்கின்றன. குறைவான வெளிச்சத்திலும் குச்சிகளால் சிறப்பான பார்வையைக் கொடுக்க முடியும். அதனால் ஆந்தைகளுக்கு இரவில் நன்றாகப் பார்வை தெரிகிறது, முத்துப் பாண்டி.

கந்தக அமிலம் (Sulfuric Acid) ஆபத்தானது என்றார் ஆசிரியர். அதை எப்படிக் கையாளுகிறார்கள்? அது எதுக்குப் பயன்படுகிறது, டிங்கு? 

-அ. பிரியதர்சினி, 8-ம் வகுப்பு, சேதுலெட்குமிபாய் பெண்கள் அரசு 
உயர்நிலைப் பள்ளி, ராசாக்கமங்கலம், குமரி.

நிறமும் மணமும் அற்ற நீர்போல் இருக்கும் கந்தக அமிலம் ஆபத்தானதுதான். உரம், சோப்பு, மருந்துகள், பெட்ரோலியம் வினையூக்கி, பூச்சிக்கொல்லி, பேட்டரி, வண்ணப்பூச்சு, அச்சு மை, கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்வதற்கு என்று பல விஷயங்களில் கந்தக அமிலம் பயன்படுகிறது. இதைக் கையாள்கிறவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதனால் சுவாசக்கருவி, ரப்பர் கையுறை, பூட்ஸ், ரசாயனப் பாதுகாப்பு கண்ணாடி, முகமூடி போன்றவற்றை அணிந்துகொண்டுதான் கந்தக அமிலத்தைக் கையாள்வார்கள், பிரியதர்ஷினி.

வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் ஆயுதங்களையும் அணுகுண்டுகளையும் தயாரிக்கின்றன. உயிரினங்கள் வாழ்வதற்குத்தான் இந்தப் பூமி. அணுகுண்டு வெடிப்பின் பாதிப்பை ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் பார்த்த பின்பும் ஏன் அமைதி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அணுகுண்டுகளைத் தயாரித்துக்கொண்டிருக்கின்றனர்? ஆயுதங்கள், அணுகுண்டுகள் தயாரிப்பதை நிறுத்தி, அமைதியை ஏற்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா, டிங்கு? 

–பி. மேஹசூரஜ், 12-ம் வகுப்பு, நியூ கிரெசென்ட் மெட்ரிக். பள்ளி, புளியங்குடி.

சுவாரசியமான கேள்வி. ஆயுதங்களையும் அணு ஆயுதங்களையும் தயாரிப்பதற்கு நாடுகள் சொல்லும் பொதுவான காரணம், பாதுகாப்பு. மன்னராட்சியில் படைகளைத் திரட்டிச் சென்று நாடுகளைக் கைப்பற்றியதுபோல், இப்போது ஒரு நாட்டைப் பிடித்துவிட முடியாது. ஆனாலும் ஆயுதங்களை வாங்கி வைத்துக் கொண்டால்தான் எதிரி நாடு சண்டைக்கு வந்தால் சமாளிக்க முடியும் என்ற எண்ணத்தில் ஏராளமான தொகையைச் செலவு செய்து ஆயுதங்களை வாங்கிக் குவிக்கின்றன. வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகளுக்கு ஆயுதங்கள் தயாரிப்பு என்பது வருமானம் கொட்டக்கூடிய தொழில்.

ஆரம்பத்தில் அணு ஆயுதங்கள் தயாரிப்பு தங்கள் நாட்டின் ராணுவ பலத்தையும் ராணுவத் தொழில்நுட்ப வளர்ச்சியையும் உலகத்துக்குத் தெரியப்படுத்தும் முயற்சியாகக் கருதப்பட்டது. பிறகு அது யார் பெரியவர் என்ற அதிகாரப் போட்டியாக மாறியது. முன்பு சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் தங்கள் பலத்தைக் காட்டுவதற்காகவும் ஒரு நாடு இன்னொரு நாட்டை மிரட்டுவதற்காகவும் அணு ஆயுதப் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தன. இந்தக் காலகட்டத்தில் பிரான்ஸ், இங்கிலாந்து, சீனாவும் அணு ஆயுதத் தயாரிப்பில் இறங்கின. பிறகு இந்தியா, பாகிஸ்தான் நாடுகளும் அணு ஆயுதங்களைத் தயாரித்தன.

அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதற்காக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகள் ஓர் ஒப்பந்தத்தைக் கொண்டுவந்தன. இதில் மற்ற நாடுகள் கையெழுத்து இட வேண்டும் என்று வலியுறுத்தின. இந்த ஒப்பந்தத்தில் சில அம்சங்கள் சரியில்லை என்று கூறி இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் கையெழுத்து இடவில்லை. இந்த நடவடிக்கை தோல்வியில் முடிந்தது.

தற்போது ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, இஸ்ரேல், வட கொரியா ஆகிய 9 நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. இவற்றைத் தவிர, மேலும் சில நாடுகளும் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ரஷ்யாவும் அமெரிக்காவும் படிப்படியாகத் தங்கள் ஆயுதங்களைக் குறைத்துக்கொள்வதாக அறிவித்தன. ஆனால், முற்றிலுமாக ஆயுதங்களும் அணு ஆயுதங்களும் இல்லாத பூமியாக மாற்றுவதற்கு நாடுகள் முன்வரவில்லை. வியாபாரம், அதிகாரம், பலம் போன்றவற்றை இழக்கத் தயாராக இல்லை, மேஹசூரஜ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x