Published : 16 Jul 2019 05:00 PM
Last Updated : 16 Jul 2019 05:00 PM

இந்தப் பாடம் இனிக்கும் 03: உலகம் போற்றும் அற்புதம்

ஆதி 

மாமல்லபுரம் என்றவுடனேயே உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்? பலருக்கும் ‘கடற்கரை கோயில்’, இன்னும் சிலருக்கு ‘ஐந்து ரதங்கள்’. ஆனால், மாமல்லபுரம் அத்துடன் முடிவடைந்துவிடுவதில்லை. சென்னைக்கு மிக அருகில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற சிற்பக் கலை அற்புதம் மாமல்லபுரம்.

‘அர்ச்சுனன் தபசு’ சிற்பத் தொகுதி மாமல்லபுர சிற்பக் கலையின் உச்சங்களில் ஒன்று. அதேபோல ‘கிருஷ்ண மண்டபம்’ எனும் பகுதியில் கோவர்த்தனகிரி மலையை கிருஷ்ணர் ஒற்றை விரலால் தூக்கியதுபோல அமைந்துள்ள சிற்பத் தொகுதியும் மிகச்சிறந்த கலை வெளிப்பாட்டுக்கு எடுத்துக்காட்டு.

இந்த இரண்டு சிற்பத் தொகுதிகளிலும் வடிக்கப்பட்டுள்ள உயிரினங்கள் - மனிதர்களின் செயல்பாடுகள், உடலமைப்பு, முகபாவங்கள் வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. நாடகத்தின் இறுதியில் உறைந்துபோவது போன்ற காட்சிகள் வருமில்லையா, அதுபோல இயற்கையை அப்படியே உறைய வைத்ததுபோல இந்தச் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.

சிற்பிகளின் பெருங்கற்பனை

இந்தச் சிற்பங்கள் அனைத்தும் குறைந்தபட்சம் 1,300 ஆண்டுகளுக்கு முன்னால், இன்றைக்கு உள்ள எந்த ஒரு வசதியும் இல்லாத காலத்தில் வடிக்கப்பட்டவை. அன்றைக்கு இந்தச் சிற்பங்களையும் கோயில்களையும் வடித்த சிற்பிகளிடம் என்ன இருந்திருக்கும்? உளிகள், சிறு கட்டைகளுடன் மரத்தால் கட்டப்பட்ட சாரங்கள், தீப்பந்தம்-விளக்கு போன்ற அடிப்படை வசதிகளுடன் உலகின் சிறந்த கற்பனைவாதிகளாக அந்தச் சிற்பிகள் இருந்திருக்க வேண்டும். அவர்களுடைய பெருங்கற்பனைதான் மாமல்லபுரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

மாமல்லனின் நகரம்

ஏழாம் நூற்றாண்டில் துறைமுக நகராகவும் பல்லவர்களின் தலைநகராகவும் மாமல்லபுரம் திகழ்ந்தது. இந்தத் துறைமுகம் வழியாகவே உலகப் புகழ்பெற்ற பயணிகளான பெரிபுளூஸ் (பொ.ஆ. முதலாம் நூற்றாண்டு), தாலமி (பொ.ஆ. 140) போன்றவர்கள் தமிழகம் வந்தார்கள். முதலாம் மகேந்திர வர்மன் (பொ.ஆ. 580-630) காலத்திலேயே மாமல்லபுரத்தில் சிற்பம் வடிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. மகேந்திரவர்மனின் மகன் முதலாம் நரசிம்மவர்மனே (பொ.ஆ. 630-668) தற்போது நாம் காணும் சிற்பக் கலை, கட்டிடக் கலை அற்புதங்களின் காரணகர்த்தா.

நரசிம்மவர்மனின் பட்டப்பெயர் மாமல்லன். அவரது பெயரில்தான் இந்த ஊர் அழைக்கப்படுகிறது. பெரிய அளவில் உயிர்களைப் பலி கொடுக்கும் வழக்கம் ஒரு காலத்தில் இருந்தபோது, இந்த ஊருக்கு மகாபலிபுரம் என்ற ஒரு பெயரும் இருந்திருக்கிறது. பாறைகளைக் குடைந்து கட்டப்பட்ட ரதங்கள், திறந்த பாறைப் பகுதிகளில் செதுக்கப்பட்ட அர்ச்சுனன் தவம், கிருஷ்ண மண்டபம், மகிஷாசுரமர்த்தினி குகை, வராக மண்டபம் உள்ளிட்டவை முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் கட்டப்பட்டவை.

பவுத்தக் கோயில்கள்

ஒற்றைக் கற்பாறையில் செதுக்கப்பட்டவை கற்றளிகள் அல்லது ஒற்றைக்கல் கோயில்கள் எனப்படுகின்றன. குன்றுகளைக் குடைந்து உருவாக்கப்பட்டவை குடைவரை கோயில்கள் அல்லது குகைக் கோயில்கள் எனப்படுகின்றன. ஏற்கெனவே இருந்த பாறைகளில் தேவையற்ற பகுதிகளை அகற்றி உருவாக்கப்பட்டவை கற்றளிகள். கற்றளிகளில் புகழ்பெற்றதான ஐந்து ரதங்கள், ‘பஞ்ச பாண்டவ ரதங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. ஆனால், தொடக்க காலத்தில் இவை பவுத்தக் கோயில்களாக இருந்திருக்க வேண்டும்.

இவற்றில் ஒன்றின் பெயர் தர்மராஜா ரதம். புத்தரின் மற்றொரு பெயர் தர்மராஜா. பல்லவர்களில் ஒரு பிரிவினர் பவுத்த மதத்தைப் பின்பற்றினார்கள். பல்லவர்கள் சிங்கத்தையும் நந்தியையும் சின்னமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த இரண்டுடன், யானையின் சிற்பங்களும் மாமல்லபுரத்தில் அதிகமாக உள்ளன. அத்துடன் இங்கு காணப்படும் மனித, உயிரின சிற்பங்கள் இயற்கை வடிவளவில் வடிக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.

யுனெஸ்கோ அங்கீகாரம்

ராஜசிம்மன் (பொ.ஆ. 700-728) காலத்தில் திட்டமிட்ட கட்டுமானக் கலை அறிமுகமாகி, பல்லவர் கட்டிடக் கலை உச்சத்தைத் தொட்டது. பல்லவக் கட்டிடக் கலையின் முதன்மை அடையாளமாகக் கருதப்படும் கடற்கரை கோயில் ராஜசிம்மன் காலத்திலேயே கட்டப்பட்டது.
ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாமல்லபுரம் கோயில் தொகுதிகள், யுனெஸ்கோ அமைப்பின் உலக மரபுச் சின்னங்கள் பட்டியலில் 1984-ல் சேர்க்கப்பட்டன. தமிழகத்தில் இந்தத் தகுதியைப் பெற்ற முதல் கலைச்சின்னம் மாமல்லபுரம்.

இந்த வாரம்:

ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில், ‘பாடறிந்து ஒழுகுதல்’ என்ற இயலின்கீழ் ‘மனம் கவரும் மாமல்லபுரம்’ என்ற விரிவானம் பகுதி.

 

மாமல்லபுரத்தின் தனிச்சிறப்பு

தமிழகச் சிற்பக் கலை நான்கு வகைகளில் அமைந்துள்ளது:

1.     கற்றளிகள் அல்லது ஒற்றைக்கல் கோயில்கள் - ஐந்து ரதக் கோயில்கள்.
2.     பாறைகளைக் குடைந்து கட்டப்பட்ட குடைவரை கோயில்கள் அல்லது குகைக் கோயில்கள், மண்டபங்கள் – கிருஷ்ண மண்டபம், மகிஷாசுரமர்த்தினி குகை, வராக மண்டபம்.
3.     புடைப்புச் சிற்பங்கள் - அர்ச்சுனன் தவம் அல்லது கங்கையின் தோற்றம்.
4.     கட்டுமானக் கோயில்கள் - மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்.
இந்த நான்கு வகைகளும் காணப்படும் ஒரே இடம் மாமல்லபுரம்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x