Published : 16 Jul 2019 12:14 PM
Last Updated : 16 Jul 2019 12:14 PM

கடந்த வாரம்: சேதி தெரியுமா?

தொகுப்பு: கனி 

காவல்துறை: 5.28 லட்சம் பணியிடங்கள் காலி

ஜூலை 7: நாடு முழுவதும் 5.28 லட்சம் காவல்துறைப் பணியிடங்கள் காலியாக இருப்பதாக உள்துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில், அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1.29 லட்சம், பிஹாரில் 50,000, மேற்கு வங்கத்தில்  40,000 காவல்துறை பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் 22,420 காவல்துறை பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.  நாட்டின் அனுமதிக்கப்பட்ட காவல்துறைப் பணியிடங்கள் 23,79,728. இதில், 2018, ஜனவரி 1 அன்று வரை, 18,51,332 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தங்கம் வென்ற தூத்தி சந்த் 

ஜூலை 10: இந்தியத் தடகள வீராங்கனை தூத்தி சந்த், இத்தாலியில் நடைபெற்ற 30-வது ‘சம்மர் யுனிவெர்சிட்டி கேம்ஸி’ன் மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையையும் தூத்தி சந்த் படைத்திருக்கிறார். 

நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படும்

ஜூலை 11: தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அணுசக்தி, விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார். 

வறுமை: 27.1 கோடிப் பேர் மீட்பு

ஜூலை 11: இந்தியாவில்  2006 முதல் 2016 வரையிலான பத்து ஆண்டுகளில் 27.1 கோடிப் பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டதாக ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. 2019-ம் ஆண்டுக்கான உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீட்டை (Multidimensional Poverty Index) ஐ.நா. வெளியிட்டது. வருமானம், சுகாதாரம், பணிச்சூழல், வன்முறை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு உலகின் 101 நாடுகளின் வறுமை நிலை குறித்து இந்த அறிக்கையில் ஐ.நா. தெரிவித்துள்ளது. 

நதிகளைப் பராமரிக்காததால் அபராதம்

ஜூலை 12: சென்னையின் கூவம், அடையாறு உள்ளிட்ட நதிகளைப் பராமரிக்கத் தவறியதால் தமிழக அரசுக்குப் பசுமைத் தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்திருந்தது. பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய முடியும் என்று தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தனர். 

நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் குமாரசாமி

ஜூலை 12: கர்நாடக முதலமைச்சர் 
எச்.டி.குமாரசாமி, சட்டப்பேரவையில் பெரும் பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரிக்கை விடுத்திருக்கிறார். கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், 16 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமா, குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.  

யூடியூப்: கல்விக்கான பிரத்யேகக் காணொலிகள்

ஜூலை 12: கல்விக்கான பிரத்யேகமான காணொலிகளை அறிமுகம் செய்யவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது யூடியூப். மாணவர்களுக்குப் பயன்படும் வகையில், கணிதம், அறிவியல், மொழி, இசை உள்ளிட்ட பாடங்களில் பிரத்யேகமான கற்றல் காணொலிகளை விரைவில் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது யூடியூப். இந்தப் பிரத்யேகமான கற்றல் பக்கங்களில், வழக்கமான பரிந்துரைக் காணொலிகள் இடம்பெறாது என்றும் யூடியூப் அறிவித்திருக்கிறது. 

உலகக் கோப்பை: இங்கிலாந்து வெற்றி

ஜூலை 14: 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 
இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில், நியூசிலாந்து அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி இங்கிலாந்து அணி முதன்முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. அரையிறுதி போட்டியில் (ஜூலை 10), நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணி, தோல்வியைத் தழுவியதால் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து 
வெளியேறியது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x