செய்திப்பிரிவு

Published : 16 Jul 2019 12:05 pm

Updated : : 16 Jul 2019 12:05 pm

 

அந்த நாள் 41: தென்னகத்தின் தாஜ்மகால்

the-taj-mahal-of-the-south

ஆதி வள்ளியப்பன் 

“திருமலை நாயக்கரைப் பத்தித் தெரியாதவங்ககூட, திருமலை நாயக்கர் மகாலைப் பத்திக் கேள்விப்படாம இருக்க மாட்டாங்க. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வர்றவங்கள்ல நாயக்கர் மகாலை பார்க்காமப் போறவங்க குறைச்சல்தான், செழியன்.”

“நீ சொல்றது உண்மைதான். ‘இருவர்‘, ‘பம்பாய்‘னு இயக்குநர் மணிரத்னத்தோட பல படங்கள் வழியா நேர்ல வராதவங்களும் நாயக்கர் மகாலை பார்த்திருப்பாங்க, குழலி.”
“தமிழ்நாட்டுல பெரிய அரண்மனைகளோ கோட்டைகளோ அதிகம் கிடையாதுன்னு சொல்லுவாங்க. நாயக்கர் மகால்னு அதை அழைச்சாலும், உண்மைல அது ஒரு அரண்மனைதான். 
1636-ல திருமலை நாயக்கர் இதை பிரம்மாண்டமா கட்டினார். இந்திய - சாரசெனிக் (இஸ்லாமிய) கட்டிடக் கலை ஆங்கிலேயர் காலத்துல பெருசா வளர்ந்துச்சு. ஆனா, அதுக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே இந்தக் கட்டிடம் இந்திய - சாரசெனிக் பாணில கட்டப்பட்டுச்சு. இந்த மகாலை வடிவமைச்சவர் ஒரு இத்தாலியச் சிற்பி. இன்னைக்கு நாம பார்க்கக்கூடிய நாயக்கர் மகால் நாலுல ஒரு பகுதிதான்.” 

“அப்படியா? அப்ப மிஞ்சின பகுதியெல்லாம் என்ன ஆச்சு?”
“1665-ல திருமலை நாயக்கரின் பேரன் சொக்கநாத நாயக்கர் தஞ்சை நாயக்கர்கள் மீது படையெடுக்க வசதியாக மதுரையிலிருந்து தலைநகரை திருச்சிக்கு மாத்தினார். அப்போ திருமலை நாயக்கர் மகாலின் பெரும் பகுதிகளை இடிச்சு, அதிலிருந்து சிற்பங்களையும் சித்திர வேலைப்பாடு அமைந்த பகுதிகளையும் திருச்சிக்குக் கொண்டுவந்தார். அந்த மகாலை திருச்சியில திரும்ப எழுப்புறதுதான் அவரோட திட்டம். ஆனால், திட்டமிட்டபடி எதுவும் கட்டப்படலை. அதனால நாயக்கர் மகால் என்கிற அற்புதத்தின் பெரும்பகுதி காலத்துல கரைஞ்சு போச்சு”.
“தமிழகத்தின் பண்டைய அரண்மனைகள்ல அழகான ஒண்ணா இருந்த நாயக்கர் மகால் இப்படி சுருங்குனது சோகம்தான்.”

“ஆமா, சொர்க்க விலாசம், ரங்க விலாசம்னு ரெண்டு முக்கியப் பகுதிகள் அந்த அரண்மனைல இருந்துச்சு. திருமலை நாயக்கர் சொர்க்கவிலாசத்திலும் அவருடைய தம்பி முத்தியாலு நாயக்கர் ரங்கவிலாசத்திலும் வாழ்ந்துவந்தாங்க.
சொர்க்க விலாசம், 40 அடி உயரமுள்ள வழுவழுப்பான சுண்ணாம்புக்காரை பூச்சு கொடுக்கப்பட்ட மண்டபம். இந்த மண்டபத்தை பிரம்மாண்டத் தூண்கள் தாங்கி நிக்குது. இந்தப் பகுதிலதான் அரசர் அரியணைல உட்கார்ந்து ஆட்சி செஞ்சார். நவராத்திரி விழா நடக்கிறப்ப ஒன்பது நாள்கள்லயும் சொர்க்க விலாசத்துல திருமலை நாயக்கர் கொலு வீற்றிருப்பாராம். இப்போ சொர்க்க விலாசம் மட்டுந்தான் எஞ்சியிருக்கு.”

“நானும் பார்த்திருக்கேன். அங்க ஒவ்வொரு தூணும் 40 அடிக்கு அண்ணாந்து பார்க்க வைக்கிற உயரத்துக்கு இருக்குமே. ஒவ்வொரு தூணையும் சேர்த்தணைக்க மூணு நாலு பேர் தேவைப்படுற அளவு பருமனா இருக்குமே.”
“ஆனா, நேப்பியர் பிரபு இல்லேண்ணா இந்த சொர்க்க விலாசமும் இப்ப இருந்திருக்குமாங்கிறது சந்தேகம்தான்”
“யாரு நேப்பியர் பிரபு? அவருக்கும் திருமலை நாயக்கர் மகாலுக்கும் என்ன சம்பந்தம்?“
“1857-ல் சொர்க்கவிலாசத்தோட பல பகுதிகள் விரிசல் விட்டிருந்துச்சு. அடுத்த வருசம் பெய்ஞ்ச பெருமழைல மேற்குப் பகுதிச் சுவர் இடிஞ்சு விழுந்திடுச்சு. பல பகுதிகள் சேதமாயிடுச்சு. 1868-ல சென்னை மாகாண கவர்னரா இருந்த பிரான்சிஸ் நேப்பியரின் கவனத்துக்கு இது வந்துச்சு.”

“சென்னை பல்கலைக்கழகம் பக்கத்துல இருக்குதே நேப்பியர்னு பாலம், அந்த நேப்பியர் தானா இவரு?”
“அவரேதான். அரண்மனையின் அழகைப் பார்த்து நேப்பியர் ஆச்சரியப்பட்டுப் போனார். அதைப் பாதுகாக்க நிதியும் ஒதுக்கினார். ஐஞ்சு லட்ச ரூபாய் செலவுல இடிஞ்ச பகுதிகள் சீரமைக்கப்பட்டுச்சு. சுதை வேலைப்பாடுகளைப் பழுதுபார்த்தாங்க. பழசுபோலவே வண்ணமும் தீட்டப்பட்டுச்சு. இப்போ இருக்கிற நுழைவாயில்கூட பிற்காலத்துல அமைக்கப்பட்டதுதான்.” 
“தென்னக தாஜ்மகால்னு அதுக்கு இன்னொரு பேரு இருக்கிறதப் பத்தி நீ சொல்லவேயில்லையே, குழலி”
“ஆமா, அந்தப் பெருமை நாயக்கர் மகாலுக்குப் பொருந்தும்தானே செழியன்”. 

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, பள்ளி வரலாற்றுப் பாடம்

நாயக்கர் மகாலின் முக்கியப் பகுதிகள்

பதினெட்டு வகை இசைக் கருவிகள் இசைக்கும் இடம், பல்லக்கு வைக்கும் இடம், படைக்கலன் வைக்கும் இடம், பூஜை செய்யும் பகுதி, அரியணை மண்டபம், அந்தப் புரம், நாடகசாலை, உறவினர்-பணிசெய்வோர் வசிப்பிடங்கள், வசந்தவாவி, மலர்த்தோட்டம். 

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

தென்னகம்Southதாஜ்மகால்திருமலை நாயக்கர்அந்த நாள்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author