Published : 16 Jul 2019 11:55 AM
Last Updated : 16 Jul 2019 11:55 AM

அதென்ன யுனெஸ்கோ பாரம்பரிய இடம்?

டி. கார்த்திக் 

‘பிங்க் சிட்டி’, ‘மதில் சூழ்ந்த நகரம்’ என்று பல்வேறு சிறப்புப் பெயர்களில் அழைக்கப்படும் ஜெய்ப்பூர் நகரம் உலகப் பாரம்பரிய இடமாக ஜூலை 6 அன்று யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனை, கோட்டை, தனித்துவமான கட்டிடங்கள், அந்நகரின் கலாச்சாரம், நகர மக்களின் விருந்தோம்பல் ஆகியவை உலகப் புகழ்பெற்றவை. அந்த அடிப்படையில் ஜெய்ப்பூர் நகரம் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் முன்னிலையில் ஜெய்ப்பூர் இருந்துவருகிறது. இந்நகரில் உள்ள அரண்மனை, நினைவிடங்கள் ஆகியவற்றைச் சர்வதேசக் குழு கடந்த ஆண்டு ஆய்வுசெய்து, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய இடத்துக்கான பட்டியலில் சேர்க்கப் பரிந்து ரைத்தது. அசர்பைஜான் நாட்டில் உள்ள பாகு நகரில்  நடைபெற்ற யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய கமிட்டியின் 43-வது மாநாட்டில் இந்தப் பரிந்துரை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பரிசீலனைக்குப் பின்னர் ஜெய்ப்பூரை உலகப் பாரம்பரிய இடங்களுக்கான பட்டியலில் சேர்த்தது யுனெஸ்கோ.

38-வது இடம்

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெறுவது எளிதான விஷயம் கிடையாது. ஒவ்வோர் ஆண்டும் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் கமிட்டியானது ஒரு முறையாவது கூடுவது வழக்கம். அப்படிக் கூடும்போது பட்டியலில் புதிய இடங்களைப் பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பது, நீக்குவது, அல்லது மாற்றம் செய்வது ஆகியவற்றை மேற்கொள்ளும். இந்த முறை இந்தியாவிலிருந்து பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஜெய்ப்பூர்  பெரிய அளவில் விவாதமின்றிப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் யுனெஸ்கோவின் பட்டியலில் சேர்ந்த 38-வது இடம் ஜெய்ப்பூர். இதுவரை ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 1,121 இடங்களை யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் அல்லது இடமாக அறிவித்துள்ளது. சீனா, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள இடங்கள், நினைவுச் சின்னங்கள் யுனெஸ்கோ பட்டியலில் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த நாடுகளுக்கு அடுத்தபடியாகத்தான் இந்தியா இப்பட்டியலில் உள்ளது. இந்தியாவில் முதன்முறையாக 1983-ல் மகாராஷ்டிராவில் உள்ள அஜந்தா, எல்லோரா குகைகள், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ரா கோட்டை, தாஜ்மஹால் ஆகிய 4 இடங்கள் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. தற்போது 38-வது இடமாக ஜெய்ப்பூர் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

யுனெஸ்கோ பிரிவுகள்

உலகப் பாரம்பரியச் சின்னம் என்பது என்ன? யுனெஸ்கோவால் பட்டியலில் சேர்க்கப்படும் இடம் ‘உலகின் சிறந்த மதிப்பீடு’ என்ற பொருளில் குறிப்பிடப்படுகிறது. உலகப் பாரம்பரிய அமைப்பின் வழிகாட்டுதல்படி, உலகின் சிறந்த மதிப்பீடு என்பது கலாச்சாரம் / இயற்கைப் பின்னணி கொண்ட இடங்களைக் குறிக்கிறது. இதில் 3 பிரிவுகளை யுனெஸ்கோ வைத்துள்ளது. அதன் அடிப்படையில்தான் உலகப் பாரம்பரிய இடங்கள் / சின்னங்களை அறிவிக்கிறது.  கலாச்சாரப் பாரம்பரியம், இயற்கைப் பாரம்பரியம், கலாச்சாரமும் இயற்கையும் கலந்த பாரம்பரியம் என 3 பிரிவுகளில் யுனெஸ்கோ இடங்களைத் தேர்வு செய்கிறது.

இதில் கலாச்சாரப் பாரம்பரியப் பிரிவில் வரலாறு, கலை, அறிவியல், நினைவுச் சின்னங்கள், கட்டிடங்கள், இயற்கையாகவும் மனிதர்களாலும் அமைக்கப்பட்ட வேலைப்பாடுகள் ஆகியவை வருகின்றன. இதற்கு உதாரணமாக தாஜ்மஹால், அமெரிக்காவின் சுதந்திரா தேவி சிலை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இயற்கைப் பாரம்பரியப் பிரிவில் அறிவியல், பாதுகாக்கப்பட்ட பகுதி அல்லது அழகிய இயற்கைப் பகுதிகள் வருகின்றன. இதற்கு உதாரணமாக விக்டோரியா நீர்வீழ்ச்சி, மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனம் உயிர்கோளக் காப்பகம் ஆகிய இடங்களைக் குறிப்பிடலாம். தற்போது ஜெய்ப்பூர் நகரம் கலாச்சாரப் பிரிவில் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது.

தேர்வு முறை

யுனெஸ்கோவால் உலகில் அறிவிக்கப்பட்ட 1,121 உலகப் பாரம்பரிய இடங்களில்  869 இடங்கள் கலாச்சாரப் பிரிவில் இடம்பெற்றுள்ளன. 213 இயற்கை சார்ந்த இடங்கள், 39 இடங்கள் கலப்பு இடங்களாகவும் இடம்பெற்றுள்ளன. ஒரு குறிப்பிட்ட இடத்தை யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாக எப்படி அறிவிக்கிறது? யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில் இடம்பிடிக்க ஒவ்வொரு நாடும் உத்தேசப் பட்டியலைத் தயார் செய்து அதற்கான ஆவணங்களை யுனெஸ்கோ கமிட்டிக்கு அனுப்புவார்கள். இந்த ஆவணங்களை கமிட்டி ஆய்வுசெய்யும்.

இந்தியாவில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், ‘யுனெஸ்கோ ஒத்துழைப்புக்கான இந்தியத் தேசிய ஆணையம்’ என்ற அமைப்பும் இந்தியத்  தொல்லியல் துறையும் இந்தப் பட்டியல்களைத் தயாரிப்பதில் முக்கியப் பங்காற்று கின்றன. இவ்வாறு பல்வேறு நாடுகளிடமிருந்து பெறும் பரிந்துரைகளை  யுனெஸ்கோ கமிட்டியில் உள்ள 21 உறுப்பினர்கள் தீவிரமாகப் பரிசீலித்துக் கள ஆய்வு மேற்கொள்வார்கள். பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகே உலகப் பாரம்பரியச் சின்னமாக  அறிவிப்பார்கள்.

என்ன பயன்?

அதெல்லாம் சரி, ஓரிடத்தை உலகப் பாரம்பரியச் சின்னம் / இடமாக அறிவிப்பதால் என்ன பயன்? யுனெஸ்கோ அறிவிக்கும் பாரம்பரிய இடங்கள் ‘மிகவும் விரும்பத்தக்க இடம்’ என்ற அந்தஸ்தைப் பெறும். இதனால், அந்தப் பகுதியில் சுற்றுலா பெரிய அளவில் வளர்ச்சி அடையும். அதே நேரத்தில் உலகப் பாரம்பரியச் சின்னம் என்ற அந்தஸ்தைத் தக்கவைத்துக்கொள்ளச் சம்பந்தப்பட்ட நாடுகள், அந்த இடங்களில் சிறந்த பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். யுனெஸ்கோ அந்த இடங்களைத் தொடர்ந்து தணிக்கைசெய்யும். உலகப் பாரம்பரியச் சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டால பராமரிக்காமல் விடப் பட்டிருந்தாலோ, பட்டியலிலிருந்து யுனெஸ்கோ நீக்கமும் செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x