உலக அரங்கில் அசத்தும் அரசுப் பள்ளி

உலக அரங்கில் அசத்தும் அரசுப் பள்ளி
Updated on
2 min read

அ. முன்னடியான் 

மின்னாற்றலை உற்பத்தி செய்யும் மரம், டெங்கு நோய் பரவுவதைத் தடுக்கும் தானியங்கி வாகனம், சூரிய ஆற்றல் கொண்டு கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், தரிசு நிலங்களில் மீண்டும் காடுகளை உருவாக்கும் இயந்திரம்…  என நீள்கிறது புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பனித்திட்டு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள்,  ஆய்வுத்திட்டங்களின் பட்டியல்.

இதன் மூலம் இப்பள்ளி மாணவர்கள் மாநிலம் முதல் சர்வதேசம் வரையிலான பரிசுகளைப்  பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்ந்துள்ளனர். இந்தக் கிராமத்து அரசுப் பள்ளி மற்ற பள்ளி மாணவர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. இப்பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதோடு, தங்களுடைய கடமை முடிந்த தாக இருந்துவிடுவதில்லை. பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திவருகிறார்கள். இவற்றின்மூலம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் தீர்வு காண்பதற்கான புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அறிவியல் ஆய்வுத் திட்டங் களையும் இப்பள்ளி மாணவர்கள் உருவாக்கி வருகிறார்கள்.

பாரிஸின் பாராட்டு

புதுச்சேரி கல்வித் துறை, புதுச்சேரி அறிவியல் இயக்கம் , பிரான்ஸ் நாட்டு பாரிஸ் பல்கலைக்கழகம் (தெற்கு 11 ) ஆகியவை இணைந்து நடத்தும் ‘அறிவியல் படைப்போம்’ சர்வதேச அளவிலான ஆய்வுத் திட்டப் போட்டியில் கடந்த ஆண்டு பங்கேற்று 300 யூரோ ரொக்கத்தையும் சான்றிதழையும் இப்பள்ளி மாணவர்கள் வென்றனர். அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில்  ‘புவி வெப்பமயமாதலைக் குறைக்கும் மரங்கள் – வெவ்வேறு முறைகள்’ என்ற ஆய்வுத் திட்டத்துக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற 25-ம் தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டு 10 மாணவர்கள் ‘குழந்தை விஞ்ஞானி’ சான்றிதழையும் பட்டத்தையும் பெற்றனர்.
அறிவியல் கண்காட்சிகள், துப்புரவு இருவாரத்துக்கு விழாக்கள், ஊர்வலங்கள் ஆகியவை மூலம் மாணவர்களிடம் மட்டுமன்றிக் கிராம மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

நீருக்கு மரியாதை

பள்ளியில் நடத்தப்படும் விடுதலை, குடியரசு, குழந்தைகள், தாய்மொழி மற்றும் விளையாட்டு நாள் போன்ற விழாக்களில் நீர் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நாடகங்களையும் நடத்தியுள்ளனர். ஆழ்குழாய், சொட்டுநீர்ப் பாசன முறையில் பள்ளியில் மரங்களை வளர்த்துள்ளனர். வீணாகும் கழிவு நீர் மரக்கன்றுகளை அடைய வாய்க்கால் வெட்டியுள்ளனர்.

பள்ளி மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் பணிகளையும் மா.ச.சாமிநாதன் அறக்கட்டளையும் புதுச்சேரி சுற்றுச்சூழல் கலைக்கழகமும் அங்கீகரித்துள்ளன.
நீர் மேலாண்மை, பாதுகாப்பு குறித்துச் சிறப்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக நாட்டிலேயே சிறந்த பள்ளிகளுக்கான பிரிவில் முதல் பரிசு பெற்றதோடு, ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு வென்று முன்மாதிரிப் பள்ளியாக மின்னுகிறது இப்பள்ளி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in