

ரெ.சிவா
அறிவுரைகள் சொல்வதில் சொல்லும் திருப்தி மட்டுமே கிடைக்கிறது. கேட்பவரின் மனத்தைத் தொட்டு மாற்றங்களைத் தொடக்கிவைக்கும் சூழல் இல்லை. சொல்லில் மாற்றம் சாத்தியம் என்றால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ நீதி நூல்களைச் சொல்லிக் கேட்ட இச்சமூகம் நற்பண்புகளால் நிறைந்திருக்க வேண்டுமே!
தேடலின் ஆர்வத்தில் இளம் பருவத்தினர் திசைமாறிவிடாமல் ஆற்றுப்படுத்த என்ன செய்வது? அவர்களின் கனவுகளையும் தனித்திறன்களையும் எப்படிக் கண்டுகொள்வது? பல்வேறு செயல்பாடுகளில் ஒரு சிலரின் திறமைகள் வெளிப்படுகின்றன. பலரும் எதிலும் ஆர்வம் காட்டாமல் அப்படியே இருக்கிறார்கள்.
அவமானத்திலிருந்து வெகுமானம்
தொடர்ந்து பல்வேறு உரையாடல்கள் நடக்கும்போது சிலர் மனம் திறக்கிறார்கள். நாட்குறிப்பில் செய்தியைத் தாண்டிச் சில உணர்வுகள் தென்படுகின்றன. இப்போது அவர்களின் சூழல், கனவுகள், ஆசைகள், திறன்கள் குறித்துத் தயக்கமில்லாமல் பகிர்வார்கள் என்று தோன்றியது. ‘மக்கு’ என்ற குறும்படம். மாணிக்கம் தமிழ் வாசிக்கத் தெரியாத மாணவன். வகுப்பறையில் ஆசிரியரிடம் திட்டு வாங்குகிறான். அனைவரும் சிரிக்கின்றனர். தொடர்ந்த அவமானங்களால் மனம் வருந்துகிறான். ஒருநாள் வகுப்பறைக்கு வராமல் இருந்த அவனைத் தேடி ஒரு மாணவியை அனுப்புகிறார் ஆசிரியர். வீட்டுப்பாடம் செய்யாமல் ஆசிரியர் அடிப்பார் என்று பயந்து வகுப்பறைக்கு வராமல் இருந்த அவனைச் சமாதானம் செய்து அவள் வகுப்புக்கு அழைத்து வருகிறாள். அனைவரிடமும் மாணிக்கத்தைப் பாராட்டிக் கைதட்டச் சொல்லுகிறார் ஆசிரியர். காரணத்தையும் விளக்குகிறார். படம் முடிந்ததும் மாணவர்கள் அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர். உரையாடலை அவர்களே தொடங்கினர்.
அக்கம்பக்கத்திலிருந்து வரும் ஆசை
படிப்பு மட்டும் முக்கியமில்லை. மற்ற திறமைகளையும் வளர்க்கணும். எல்லோருக்கும் ஏதாவது திறமை இருக்கும். படிப்பு வரலேன்னா கேலி பண்ணக் கூடாது. படிக்க மாட்டான்னு முடிவுகட்டிடக் கூடாது. பரிசு வாங்கினாதான் திறமையை நம்புறாங்க. என்று பலரும் பகிர்ந்து கொண்டார்கள். “நாளை வரும்போது, உங்க வீட்டில் யாரெல்லாம் இருக்காங்க, என்ன வேலை செய்றாங்க, நண்பர்கள், ஆசைகள், திறமைகள் இப்படி உங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தை நாட்குறிப்பில் எழுதிட்டு வாங்க” என்றேன்.
மறுநாள் ஓரிருவரைத் தவிர அனைவரும் தங்களைப் பற்றிய அறிமுகத்தை எழுதியிருந்தனர். தகவல் களைத் தாண்டி நிறையப் புரிதலும் பல்வேறு செயல்பாடுகளுக்கான தொடக்கப்புள்ளிகளும் எனக்குக் கிடைத்தன. சிறார்கள் தங்களது சூழலில் இருந்தே கனவுகளையும் ஆசைகளையும் பெறுகிறார்கள். காவல்துறை அதிகாரி, பேருந்து ஓட்டுநர், ராணுவ வீரர், ஜல்லிக்கட்டு வீரர், இசைக்குழுவில் வேலை என்று அவர்களைச் சுற்றி இருப்பவர்களைப் பார்த்து அதேபோல் ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். வளரிளம் பருவத்தினர் வயலைப் போன்றவர்கள். பள்ளி நாற்றங்காலில் பல்வேறு கனவுகளை விதைத்து, அவற்றைப் பாதுகாத்து வளர்க்கும் வழிமுறைகளையும் வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும்.