Published : 16 Jul 2019 10:42 AM
Last Updated : 16 Jul 2019 10:42 AM

‘சோக்கர்ஸ்’ ஆகிறதா இந்திய அணி?

டி. கார்த்திக் 

கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணியை ‘சோக்கர்ஸ்’ என்று கேலியாக அழைப்பதுண்டு. மிக முக்கியமான தருணத் திலோ போட்டியில் ஏற்படும் திடீர் நெருக்கடியையோ சமாளிக்க முடியாமல் தோல்வி அடைப வர்களை ஆங்கிலத்தில் இதுபோல கிண்டலாக அழைப்பார்கள்.

இந்த அவப்பெயர் பல ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கே சொந்தமாக இருந்துவருகிறது. இப்போது அந்த அவப் பெயர் இந்திய கிரிக்கெட் அணியையும் சூழ்ந்துவிட்டதா என்ற சந்தேகம் வருகிறது. கடைசியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்திய 6 பெரிய தொடர்களில் மிக முக்கியமான தருணத்தில் இந்திய கிரிக்கெட் அணி வெளியேறியதே இதற்குக் காரணம். 1992-ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிவரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, வழக்கமாக காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் தாங்கள் ‘சோக்கர்ஸ்’ என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டு செல்வார்கள்.

இந்த உலகக் கோப்பையில் தொடக்கத்திலேயே ‘சோக்கர்ஸ்’ ஆகி அந்த அணி உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிவிட்டது. இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணியாக தொடக்கம் முதல் கணிக்கப்பட்ட அணிகளில் ஒன்று இந்தியா. அதற்கேற்ப லீக் போட்டிகளில் அதகளப்படுத்தியது இந்திய கிரிக்கெட் அணி. லீக் போட்டிகளின் முடிவில் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இடம் பிடித்து அசத்தியது. ஆனால், மிக முக்கியமான அரையிறுதிப் போட்டியில் சொதப்பி, மிகப் பரிதாப கரமாக உலகக் கோப்பையை விட்டு வெளியேறிவிட்டது இந்திய அணி.

இந்த உலகக் கோப்பையில்தான் இந்திய கிரிக்கெட் அணி மிக முக்கியமான தருணத்தில் வெளியேறிவிட்டதாக நினைக்க வேண்டாம். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு நடைபெற்ற ஐ.சி.சி. தொடர்களில் ஒரே ஒரு முறை மட்டுமே இந்திய அணி ஜொலித்திருக்கிறது. 6 முறை மிக முக்கியமான தருணங்களில் மோசமாக விளையாடி இந்திய கிரிக்கெட் அணி வெளியேறுவது இப்போது வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறது.
கடைசியாக ஐ.சி.சி. நடத்திய தொடர் களில் இந்திய அணி வெற்றி பெற்றது, 2013-ம் ஆண்டில் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில்தான்.

தோல்வியடையும் நிலையிலிருந்து மீண்டு, இறுதி கட்டத்தில் த்ரில் வெற்றி பெற்று அப்போது கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணி ஐ.சி.சி. நடத்திய தொடர்களில் எல்லாம் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் மண்ணைக் கவ்வியே வந்துகொண்டிருக்கிறது.
2014-ல் வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் லீக் போட்டி, காலிறுதி, அரையிறுதி என எல்லாப் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, இறுதிப் போட்டியில் மிக மோசமாக விளையாடி இலங்கையிடம் தோல்வியடைந்து, கோப்பையைக் கோட்டைவிட்டது.

அதற்கு அடுத்தப்படியாக 2015-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றுப் போட்டிகளில் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த இந்திய அணி, காலிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குக் கம்பீரமாகத் தகுதி பெற்றது. ஆனால், அரையிறுதியில் கொஞ்சம்கூட போராட்டக் குணத்தை வெளிப்படுத்தாமல் ஆஸ்திரேலியாவிடம் சரணடைந்தது இந்திய அணி. இதேபோல 2016 இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆரவாரமாக விளையாடி அரையிறுதிவரை முன்னேறியது இந்திய அணி.

டி20 உலகக் கோப்பையே இந்தியாவுக்குதான் என்று ரசிகர்கள் எண்ணிய வேளையில், அரையிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியடைந்து வெளியேறியது. அதற்கு அடுத்ததாக, 2017-ல் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியிலும் கெத்தாக இறுதி போட்டிவரை முன்னேறிய இந்திய அணி, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் மிக மோசமாக விளையாடி கோப்பையை இழந்தது. அந்த வரிசையில் இந்த உலகக் கோப்பையில் பட்டியலில் முதலிடம் பிடித்தும், அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து பொன்னான வாய்ப்பை இழந்துவிட்டது.

மிகப் பெரிய தொடர்களில் லீக் போட்டிகளில் அதகளமாக விளையாடும் இந்திய அணி, நாக் -அவுட் போட்டிகளில் வெளியேறிவிடுவது இன்று விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது. நாக் - அவுட் போட்டிகள் என்றாலே எல்லா அணிகளுக்குமே ஓர் நெருக்கடி உருவாவது இயல்புதான். ஆனால், எத்தகைய நெருக்கடிகளையும் அனுபவ ஆட்டம் மூலம் கையாள முடியும். ஆனால், அதையும் தாண்டி நெருக்கடியையோ, அழுத்தத்தையோ சமாளிக்க முடியாமல் போகும்போதுதான் தோல்வி நேர்கிறது.

கிரிக்கெட்டில் ஜாம்பவான்கள், ஆல்ரவுண்டர்கள், நேர்த்தியான வீரர்கள் என எல்லோரும் இருந்தாலும், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அந்தப் பாணியில் விளையாடிதான் ‘சோக்கர்ஸ்’ என்ற கேலி, கிண்டலுக்கு ஆளானது. அந்த அணியைப் போலவே ஜாம்பவான்கள், ஆல்ரவுண்டர்கள் என எல்லோரும் இருந்து அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியும் சேர்ந்துவிட்டதா என்றே நினைக்கத் தோன்றுகிறது. இனிவரும் காலத்தில் தென் ஆப்பிரிக்காவைபோல இந்தியா ‘சோக்கர்ஸ்’ ஆகாமல் இருக்க வேண்டுமானால், நாக் - அவுட் போட்டிகளில் சோபிக்க வேண்டும். அதற்கு இந்திய அணி எதையும் எதிர்கொள்ளும் நிலைக்கு மாற வேண்டும். மாறும் என்று நம்புவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x