Published : 15 Jul 2019 08:24 AM
Last Updated : 15 Jul 2019 08:24 AM

அலசல்: மரண சாலைகள்!

கடந்த வாரம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள யமுனா  விரைவு நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரும் அறிந்ததே. அன்றாடம் நாட்டின் பல பகுதிகளில் நிகழும் சாலை விபத்துகளில் நாமோ, நமது உறவினரோ சிக்காதவரை அது ஒருபோதும் கவனத்தை ஈர்ப்பதாக இருப்பதில்லை. ஆனால் சாலை விபத்துகளில் நிகழும் உயிரிழப்புகளும், நிரந்தர ஊனமடைவதால் ஏற்படும் பொருளாதார இழப்புகளும் ஏராளம்.

யமுனா விரைவு சாலையில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 4,900 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 165 கி.மீ. நீளமுள்ள இந்த விரைவு சாலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்த விபத்துகளில் 700 பேர் உயிரிழந்துள்ளனர். 7,500 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து பயணத்தில் உயிரிழப்புகளை ஆராய்ந்த ``சேவ் லைஃப் அறக்கட்டளை’’, இந்த விபத்துகளை தடுத்திருக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.  2017-ம் ஆண்டு நாடு முழுவதும் நிகழ்ந்த பேருந்து விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,000. இவை அனைத்துமே தடுத்திருக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டிலுள்ள பெரும்பாலான நெடுஞ்சாலைகளில் ``கிராஷ் பேரியர்ஸ்’’ எனப்படும் விபத்தை தடுக்கும் தடுப்புகள் உரிய வலுவுடன் இல்லை. சாலை தடுப்புகள் போதிய வலுவுடன் சிறந்த கட்டுமானத்தில் அமைக்கப்பட்டிருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும் என்று சுட்டிக் காட்டியுள்ளது சேவ் லைஃப் அறக்கட்டளை.
இந்தியாவில் ஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இதில் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சுமார் 5 லட்சம் பேர் படுகாயமடைகின்றனர். இவர்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் நிரந்தர ஊனம் ஏற்பட்டு வாழ்க்கையே முடங்கிப் போகும் நிலைக்கு ஆளாகின்றனர்.

நாட்டிலேயே அதிக விபத்துகள் நிகழும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது. இங்கு நாளொன்றுக்கு 55 விபத்துகள் நிகழ்கின்றன. இதற்கு அடுத்த இடத்தில் தமிழகம்தான் உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி 44 சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இந்தியா முழுவதும் நாளொன்றுக்கு 400 சாலை விபத்துகள் பதிவாகின்றன. இதில் நான்கில் ஒரு பங்கு உத்தரப் பிரதேசத்திலும், தமிழகத்திலும்தான் பதிவாகின்றன.

உலகம் முழுவதும் ஒரு ஆண்டில் சாலை விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை 13.50 லட்சமாகும். இதில் 5 வயது முதல் 29 வயதுப் பிரிவினர்தான் அதிக அளவில் உயிரிழக்கின்றனர். சாலை விபத்துகளை தடுக்கவும், உயிரிழப்புகளைக் குறைக்கவும் பிரேசிலில் உலக சுகாதார அமைப்பு ஏற்பாடு செய்த மாநாட்டில் அனைத்து நாடுகளும் தீர்மானம் ஏற்றுக்கொண்டன. இதன்படி 2022-ம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரெஸில்லியா ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டது. ஆனால், இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர, குறைவதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் 8 வழி விரைவு சாலை அமைக்க அரசு தீவிரம் காட்டுகிறது. சாலைகள் பொருளாதார வளர்ச்சியின் ஆதாரங்கள். எனவே, சாலைகளை அமைப்பது விரைவான போக்குவரத்துக்கு வழி வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், விபத்தில்லா சூழலை உருவாக்கும் வகையில் சாலைகள் பாதுகாப்பாக அமைக்கப்பட வேண்டியது அவசியம். இல்லையெனில் சாலை விபத்துகளைக் குறைக்க வேண்டும் என்ற இலக்கு வெறும் பெயரளவில் மட்டுமே இருக்கும். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x