Published : 15 Jul 2019 08:20 AM
Last Updated : 15 Jul 2019 08:20 AM

எண்ணித் துணிக: யாரும் போகாத பாதை

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

ஸ்டார்ட் அப் துவங்க ஐடியா பெறும் வழிகள் பற்றி பார்த்தோம். ஸ்டார்ட் அப்களில் புதிய பொருள் கொண்டு வரு
வதை விட சிறந்த வழி ஒன்று உண்டு. புதிய பொருள் பிரிவையே படைப்பது! புதிய பொருளை அறிமுகப்
படுத்தினால் உங்களுக்குத்தான் அது புதிய பொருள். அப்பொருள் பிரிவில் ஏற்கெனவே இருக்கும் பல பொருட்களில் அதுவும் ஒன்று, அவ்வளவே. அக்கூட்டத்தில் காட்டு கத்தல் கத்தினாலும் வாடிக்கையாளர் காதில் விழுவது கடினம். ஆனால், புதிய பொருள் பிரிவை அறிமுகப்படுத்தும் போது நீங்கள்தான் முதல் ஆள். போட்டி இல்லை. கத்த தேவையில்லை. நீங்கள்தான் தனி காட்டு ராஜா.

ஷாம்பு மார்க்கெட்டில் புதிய பிராண்டுகள் வருகின்றன. பத்தோடு பதினொன்றாக படாத பாடுபடுகின்றன. ஆனால், அதே மார்க்கெட்டில் புதிய வடிவில் வந்த ‘மீரா’ தான் முதல் சீயக்காய் பேஸ்ட். ஒரு புதிய பொருள் பிரிவைப் படைத்தது. அன்றிலிருந்து இன்று வரை அந்த மார்க்கெட்டின் நிரந்தர முதல்வர் அவளே! புதிய பொருள் பிரிவுகள் பிறக்கும் விதம் பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே விளக்கிவிட்டு போயிருக்கிறார், இனங்களில் புதிய பிரிவுகள் உருவாகும் ரகசியத்தை கூறிய  ‘சார்லஸ் டார்வின்’. அவர் அளித்த பரிணாம வளர்ச்சி தத்துவம் அதிகம் பேசப்பட்டாலும் அதற்கு ஆதாரமாக அவர் கூறியது விலகுதல் கோட்பாடு (Divergence). இனங்கள் விலகி அதிலிருந்து புதிய அவதாரங்கள் பிறந்தன என்றார்.

விலகுதல் கோட்பாடுதான் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டது. பாந்தேரா என்ற மிருகம் தான் காலப்போக்கில் விலகி சிங்கம், புலி, ஜாகுவார், சிறுத்தை என்று புதிய இனங்களாய் பிறந்து பரிணாம வளர்ச்சி பெற்றது. குரங்கு இனத்திலிருந்து விலகி காலப்போக்கில் வளர்ந்தவை தான் ஏப், கொரில்லா, சிம்பன்சி, ஒரங்குட்டான், கிப்பன் இன்ன பிற. அந்த விலகுதல் கோட்பாடுதான் மார்க்கெட்டில் புதிய பொருள் பிரிவுகளைப் படைக்கிறது என்கிறார்கள் ‘ஆல் ரீஸ்’ மற்றும் அவருடைய மகள் ‘லாரா ரீஸ்’ இருவரும். இவர்கள் எழுதிய முக்கியமான புத்தகம் ‘The origin of brands’.

சோப் என்ற பொருள் பிரிவுதான் பிற்காலத்தில் நம் சவுகரியத்திற்கேற்ப லிக்விட் சோப், ஹாண்ட் வாஷ், சானிடைசர் என்று விலகியது. பால் என்ற பொருள் பிரிவு பிரிந்து கண்டென்ஸ்ட் மில்க், டோண்ட் மில்க், ஸ்டாண்டர்டைஸ்ட் மில்க் என்று பிரிந்து அதுவும் பத்தாமல் ஏ1, ஏ2 என்று பாயிண்ட் டு பாயிண்ட் பஸ் நம்பர் போல் விலகியிருக்கிறது!
மார்க்கெட்டிங் என்பது பொருட்களுக்குள் நடக்கும் போட்டியல்ல. பொருள் பிரிவுகளிடையே நடக்கும் யுத்தம். புதிய பொருள் பிரிவை உருவாக்கும் பிராண்டுகள் பெரும்பாலும் வெற்றியடைகின்றன. இருக்கும் பொருள் பிரி
வில் புதிய பிராண்டாக நுழையும் போது வாடிக்கையாளர்கள் உங்கள் பிராண்டை மற்ற பிராண்டுகளோடு ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. 

ஆனால், புதிய பொருள் பிரிவை உருவாக்கி அதில் புதிய பிராண்டை அறிமுகப்படுத்தும்போது ஒப்பீடு செய்ய அப்பிரிவில் வேறு பிராண்டே இருக்காது. அதனாலேயே முதல் பிராண்டாய் நுழையும் போது அதற்கு அங்கீகாரமும் அரவணைப்பும் கிடைக்கிறது! இயற்கையில் சுற்றுச்சூழலால் ஏற்படும் மாற்றங்கள்தான் இனங்கள் விலக காரணம் என்றால் தொழில்நுட்பம் மற்றும் மக்களின் சமூக கலாச்சார மாற்றங்கள்தான் பொருள்கள் விலகி புதிய பொருள் பிரிவுகள் பிறக்க காரணமாகின்றன. தினம் குடிக்கும் ‘காபி’ விலகி ஃபில்டர் காபி, இன்ஸ்டன்ட் காபி, ஐஸ் காபி, காஃபீன் ஃப்ரீ காபி, கோல்ட் காபி என்று விலகியது நம் கலாசார மாற்றங்களினால்தானே. பெண்கள் வேலைக்குப் போவது அதிகரிக்க, வீட்டில் பெரியவர்கள் இல்லாத நியூக்ளியர் குடும்பங்கள் பெருகியதால் பிறந்தவைதானே மற்ற காபி சமாச்சாரங்கள் எல்லாம்!

பொருள் விலகி அதிலிருந்து புதிய பொருள் பிரிவுகள் பிறக்கும் விதம் ஸ்டார்ட் அப் துவங்க நினைப்பவர்களுக்கு புதிய ஐடியா தரும். இருக்கும் பொருள் பிரிவுகளை பிரித்து மேய்ந்து, வாடிக்கையாளரின் தேவைகளை அது பூர்த்தி செய்யும் விதங்களை ஆராயும் போது புதிய பொருள் பிரிவிற்கான ஐடியா பிறக்கும். அப்படி புதிய பொருள் பிரிவை படைத்து அதில் முதல் பிராண்டாய் நுழைவதே வெற்றிக்கு வழி.
விலகுதல் கோட்பாட்டை கண்ணால் எளிதாக பார்க்க முடிவதில்லை. அதனாலேயே இதன் சக்தி புரிவதில்லை. தோட்டத்திலுள்ள மரத்தில் புதிய கிளைகள் பிறப்பது நம் கண்ணுக்கு தெரிகிறதா? 
ஆனால், பல நாள் கழித்து அதே மரத்தை பார்க்கும் போது ‘எப்படி இந்த மரம் பெரிசாச்சு. புது கிளைகள் எங்கிருந்து வந்தது’ என்று ஆச்சரியப்பட வைக்கிறதல்லவா!?

புதிய பிராண்ட் என்பது ஒரு புதிய இனம் போல. சிங்கம் என்பது பிராண்ட் என்றால், புதிய பிராண்டை உருவாக்க சிங்கத்தையா மேம்படுத்துவீர்கள்? சிங்கத்தை எவ்வளவு மேம்படுத்தினாலும் கடைசி வரை சிங்கம்தானே. புதிய பிராண்ட் வேண்டுமென்றால் சிங்கம் பிரிந்து புலி ஆனது போல், இருக்கும் பொருள் பிரிவை பிரித்து புதியதை அறிமுகப்படுத்தும் வழியை தேடுங்கள் என்பதே இயற்கை நமக்கு கற்றுத் தரும் வழி. மீரா சீயக்காய் ஷாம்பு நமக்கு சொல்லித் தரும் பாடம்! ஏகப்பட்ட பொருள் பிரிவுகள் இருக்க, எதில் எப்படி நுழைவது என்று குழம்பியிருக்கும் ஸ்டார்ட் அப் அபிமானிகளே, பல புதிய பொருள் பிரிவுகள் இன்னும் விலகாமல் காத்திருக்கின்றன. உங்கள் வரவுக்குத்தான் அவை வெயிட்டிங்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x