Published : 15 Jul 2019 07:05 AM
Last Updated : 15 Jul 2019 07:05 AM

முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி ‘கோனா’

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவியாக களம் இறங்குகிறது ஹுண்டாயின் கோனா. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை இன்னும் உருவாகவில்லை. ஆனால், ஹுண்டாயின் ‘கோனா’ அத்தகைய சந்தையை உருவாக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுப்பதாக இருக்கிறது. கோனா எஸ்யுவி மாடல் என்றாலும்கூட இதன் ஏரோடைனமிக்ஸ் வித்தியாசம் காட்டுகிறது. வழக்கமான எஸ்யுவி போல் அதிக உயரம் இல்லை. முன்புறம் கிரில், பானெட் போன்றவற்றிலும் எஸ்யுவியின் சாயல் மிக மிகக் குறைவாகவே தெரிகிறது. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது எஸ்யுவி போல் தெரிகிறது. ஆனால் முன்பக்கம் இருந்து பார்த்தால் செடான் கார் போலவே தெரிகிறது. 

கோனாவின் முன்பக்கம் கிரில், எம்பாடிகளுடன் கூடிய இன்டேகிலியோ பேட்டர்ன்களுடன் அழகாக உள்ளது. இதில் 100 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 131 பிஹெச்பி பவரையும் 395 என்எம் டார்க் இழுவிசையையும் வழங்கும் செயல்திறன் கொண்டது. இது 9.7 விநாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் திறனைக் கொண்டுள்ளது. இதனால் கோனா எலெக்ட்ரிக் கார் பெயரில் மட்டுமல்லாமல் டிரைவிங் செயல்திறனிலும் எஸ்யுவி என்பதை நிரூபிப்பதாக இருக்கிறது. 

நீண்டதூரங்களுக்கான பயணத்தை ரம்மியமாக்கும் வகையில் அதிகபட்ச ஆக்சில ரேஷன் திறனை வெளிப்படுத்துவதாக இது விளங்குகிறது. இதில் 39.2 கிலோவாட்லித்தியம் அயான்பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதற்கு இந்திய ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி கூட்டமைப்பு உத்தரவாத சான்றளித்துள்ளது. ஹுண்டாயின் ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 52 நிமிடத்தில் 80 சதவீத அளவுக்கு சார்ஜ் செய்துகொள்ளலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ஈக்கோ, ஈக்கோ பிளஸ், கம்ஃபோர்ட், ஸ்போர்ட் உள்ளிட்ட நான்கு டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன.

கோனா ஐந்து பேர் சவுகரியாக உட்காரக் கூடிய காம்பேக்ட் எஸ்யுவியாகும். இதன் நீளம் 4180மிமீ, அகலம் 1800 மிமீ, உயரம் 1570 மிமீ என்ற அளவில் உள்ளது. வீல் பேஸ் 2600மிமீ என்ற அளவில் அழகான கட்டமைப்
புக்கு உறுதுணையாக உள்ளது. இதன் வீல் ஆர்ச்சுகள் காற்றும் மோதும்போது சத்தம் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேற்பக்க வடிவமைப்பு காற்றை இலகுவாக பின்னோக்கிச் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் மின் மோட்டார் அதிக பளுவை ஏற்க வேண்டிய அவசியமில்லை. இதனால் பேட்டரி திறன் குறைவாகவே செலவாகும். 

எலெக்ட்ரிக் வாகனங்களில் முக்கியமான விஷயம் சார்ஜிங். ஏனெனில் சொந்தமாக வாகனம் வாங்குவது நினைத்த நேரத்தில் செல்வதற்கு தயாராக இருக்க வேண்டும். அவசரத்தில் அப்போதுபோய் சார்ஜ் செய்துகொண்டிருக்க முடியாது. விரைவாக சார்ஜ் செய்யப்படுவதும், அடிக்கடி சார்ஜ் செய்யும் நிலை இல்லாமல் இருப்பதும் எலெக்ட்ரிக் வாகனங்களில் முக்கியமான அம்சங்களாக இருக்க வேண்டும். மேலும் சார்ஜிங் நிலையங்களுக்கான கட்டமைப்பு பரவலாக உருவாக்கப்படாத நிலையில் வீடுகளிலேயே சார்ஜ் செய்யும் வகையிலும் பயண வழியில் எமர்ஜென்சி சார்ஜிங் ஆப்ஷனும் அவசியமாகிறது. கோனா இதுபோன்ற அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதில் இரண்டுவிதமான சார்ஜ் ஆப்ஷன்கள் வழங்கப்
படுகின்றன. ஒன்று வால் மவுண்டபிள் சார்ஜர். இதனை ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் 50 கிமீ பயணிக்கலாம். போர்ட்டபிள் சார்ஜர் காரிலேயே வைத்துக்கொள்ளலாம். இது 3 பின் 15 ஆம்பியர் சாக்கெட்டில் பொருத்தி சார்ஜ் செய்துகொள்ளலாம். இதன் பிரேக்கிலிருந்து இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் அம்சமும் இதில் உள்ளது. இதனால் பேட்டரி திறன் பெற வாய்ப்பு உள்ளது. சார்ஜ் குறைவாகும்போது ஓட்டுநருக்கு மட்டும் ஏசி காற்றுவரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

பொழுதுபோக்கு மற்றும் பிற டேஷ் போர்ட் அம்சங்களிலும் எந்தக் காருக்கும் குறைவில்லை இந்த கோனா. 8.0 அங்குல புளோட்டிங் தொடுதிரை இன்ஃபோடெயின் மெண்ட் சிஸ்டம் வாய்ஸ் கமாண்ட், ரியர் வியு மானிட்டர் ஆகிய வசதிகளுடன் உள்ளது. இதுபோக, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், லெதர் இருக்கைகள், ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆறு காற்றுப்பைகள், ஏபிஎஸ் இபிடி பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை இதில் உள்ளன.  
இதில் விர்ச்சுவல் இன்ஜின் சவுண்ட் சிஸ்டம் தொழில்நுட்பத்தைப் புகுத்தியுள்ளனர். இதனால் பெட்ரோல் டீசல் கார்களின் என்ஜினில் வரும் சத்தத்தை கோனாவின் எலெக்ட்ரிக் இன்ஜின் செயற்கையாக உருவாக்குகிறது. இது ஓட்டுநர் மற்றும் சாலையில் செல்லும் பிறரின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் சத்தம் கார் வருவதை பிறருக்கு தெரியப்படுத்தும் அதே வேளையில் கார் இயக்கத்தில் இருக்கிறது என்பதை ஓட்டுநர் நினைவில் வைத்திருப்பதற்கும் உதவியாக இருக்கிறது. சத்தமில்லாமல் அமைதியாக இருந்தால் ஓட்டுநர் கண்ணயர்ந்துவிடும் ஆபத்து நேரலாம் என்பதற்காக இந்த ஏற்பாடு. 

மேலும் எல் இடி ஹெட்லைட், கார்னரிங் லைட், டூயல் சோன் கிளைமேட் கன் ட்ரோல் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், குரூயிஸ் கன் ட்ரோல் சிஸ்டம், ஊஃபருடன் எட்டு ஸ்பீக்கர் என கிரெல் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் உள்ளன. ஹுண்டாயின் கோனாவில் பிரீமியம் வேரியன்ட் என்ற ஒன்று மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இது ரூ. 25.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டூயல் டோன் வேரியன்ட் இதைவிட 20 ஆயிரம் அதிகம். இது நான்கு கலர் ஆப்சன்கள் மற்றும் டூயல் டோன் கலர் ஆப்சன்களில் கிடைக்கிறது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து இருக்கும் பல்வேறு பழமையான கருத்துகளை எல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில் இந்த கோனா விளங்கும் என்று எதிர்பார்க்கலாம்.  சுற்றுச்சூழல் மாசுபாடு மனித வாழ்க்கைக்குப் பல சவால்களை உருவாக்கி வருவதால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்கள் அவசியத் தேவையாக மாறியுள்ளன. மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய அரசும் தீவிரமாக உள்ளது. இந்த நிதி ஆண்டின் பட்ஜெட்டில் கூட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கடனுக்குச் செலுத்தப்படும் வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையைப் பயன்படுத்தி எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x