Published : 12 Jul 2015 01:18 PM
Last Updated : 12 Jul 2015 01:18 PM

விவாதக் களம்: வீட்டில் இருந்து மாற்றம் தொடங்க வேண்டும்

பெண்களை எப்போதும் உடலாக மட்டுமே பார்க்கிற இந்த சமூகத்தின் அணுகுமுறை குறித்தும் அதை எப்படிக் களைவது என்பது குறித்தும் கடந்த ஜூலை 5-ம் தேதி வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் கேட்டிருந்தோம். பலரும் மாற்றம் நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். அனைத்துக்கும் சமூகத்தின் ஆணாதிக்க மனோபாவமே காரணம் என்றும் சிலர் வாதிட்டிருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்கள் உங்கள் பார்வைக்கு.

பெண்ணின் ஆளுமை தோரணை மாறவேண்டும். எந்த விதத்திலும் உனக்கு நான் சளைத்தவள் அல்ல என்கிற முரட்டுப் பார்வை பெண்களுக்கு வேண்டும். அதுதான் எல்லா நிலையிலும் கிள்ளுக்கீரையாகப் பெண்களை நினைக்கும் ஆண்களின் மனப்போக்கை மாற்றும்.

- பி. சுபிசுதா, காவேரிப்பாக்கம்.

சமூகத்திலும் சில மாற்றங்கள் தேவை. பெண்களை இழிவுபடுத்தும் திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்கள் தடைசெய்யப்பட வேண்டும். வர்த்தக நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில் பெண்களைப் போகப்பொருள் போல சித்தரிக்கக் கூடாது. ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். பாலியல் அத்துமீறலுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். அரசியல், பொருளாதாரத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். அனைத்துக்கும் மேலாக பெண் கல்வி அவசியம் வேண்டும்.

- கே. சந்திரசேகரன், விருகம்பாக்கம், சென்னை.

பெண்களைப் பார்ப்பதையும் அவர்களுடன் பேசுவதையும், பழகுவதையும் குறைசொல்லும் சமூகத்தின் போக்கு மாற வேண்டும். அப்போதுதான் ஆண்களுக்குப் பெண்கள் மீதான மோகம் குறைந்து, அவர்கள் மீது மதிப்பு ஏற்படும். பெண்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

- எஸ்.கே. வாலி, த. முருங்கப்பட்டி, திருச்சி.

ஊடகங்கள் சிறு விளம்பரத்தில்கூட பெண்களையே பிரதானப்படுத்துகின்றன. ஏன் இந்த இச்சையைத் தூண்டும் கொச்சைத்தனம்? கடைகளின் முகப்புகளிலும் திரைப்பட சுவரொட்டிகளிலும் பெண்களின் அங்கங்களே காட்சிப்படுத்தப்படுகின்றன. அதன் வெளிப்பாடுதான் இதுபோன்ற அத்துமீறும் சம்பவங்களுக்குக் காரணம். இந்த நிலையை மாற்றுவதற்கான போராட்டத்தைப் பெண்களால்தான் உருவாக்கமுடியும்.

- சின்னை வெங்கட்ராமன், சேலம்.

மரியாதைக்குரிய மருத்துவரிடம் உரிமையாக நடந்துகொண்ட அமைச்சரின் செயல் கண்டிக்கத்தக்கது. ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தன் அழகை முன்னிறுத்தியே பதவியையும் அதிகாரத்தையும் பெறுகிறார் என்று சொல்வது எத்தனை தவறான அணுகுமுறை? பெண்கள் எத்தனைதான் முன்னேறினாலும் அவர்கள் தங்களைவிட ஒரு படி குறைவுதான் என்ற எண்ணம் ஆண்டாண்டுகாலமாக ஆண்கள் மனதில் வேரூன்றியிருக்கிறது. அதுதான் எல்லா நிலையிலும் பெண்களைச் சீண்டவைக்கிறது.

- ஜானகி ரங்கதாதன், மயிலாப்பூர், சென்னை.

பெண்கள்தானே என இளக்காரமாக நினைக்கிறவர்களைத் தண்டிப்பது நம் கையில்தான் இருக்கிறது. அது அத்துமீறும் அதிகாரியாக இருந்தாலும் சரி, அமைச்சராக இருந்தாலும் சரி. பெண் தைரியம் என்ற ஆயுதத்தை ஏந்தி தன் எதிர்ப்பை வெளிக்காட்டத் தயங்கக்கூடாது.

- கெஜலட்சுமி சுப்ரமணி, திருவானைக்காவல்.

சமூகத்தின் ஆணாதிக்கப் போக்குக்கு எதிராகப் பெண்கள் தங்கள் எதிர்ப்பைத் தனிப்பட்ட முறையிலும் ஊடகங்கள் வாயிலாகவும் வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் மாற்றம் வரும்.

- எஸ். ராஜம், சேலம்.

வீட்டுப் பணியிலும் அலுவலகப் பணியிலும் இருக்கும் பெண்கள் இதுபோன்ற அத்துமீறலுக்கு எதிராக ஒன்றுதிரள வேண்டும். ஒரே ஒரு நாளாவது அடையாளப் போராட்டம் நடத்தினால் அத்தனை இயக்கங்களும் ஸ்தம்பித்துப் போகும். அப்போதுதான் இயக்கங்களின் மாபெரும் சக்தி பெண் என்பது அனைவருக்கும் புரியும்.

- சுசீலா ராமமூர்த்தி, திருப்பூர்.

பெண்ணையும் சக உயிரியாக மதிப்பதே இந்தச் சிக்கலுக்குத் தீர்வு. சங்க காலம் முதல் இந்தக் காலம்வரை பெண்களை உடலாக மட்டுமே பார்க்கும் போக்கு இருக்கிறது. ஆணைத் திட்டும்போது ‘அறிவிருக்கா?’ என்று கேட்பதும் பெண்ணைத் திட்டும்போது ‘மூஞ்சியப் பாரு’ என்று சொல்வதும் நம் பொதுப்புத்தியில் ஊறியிருக்கிறது. பெண்களை அங்கமாக மட்டுமே சித்தரிக்கும் ஊடகங்களுக்கு நிச்சயம் தணிக்கை தேவை.

- இளங்கோ கண்ணன், சங்கரன்கோவில்.

பெண்களை போகப்பொருளாக மட்டுமே பார்த்த பார்வை இன்று பெருமளவு குறைந்துவிட்டது. அதற்காகப் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் அத்துமீறல்களை அனுமதித்துவிட முடியாது. இந்தக் கேவலமான விகாரப்போக்கு ஆண்களிடம் இருந்து அகல வேண்டும். வீட்டிலும் பொது இடங்களிலும் ஆண்-பெண் நல்லுறவுக்கு இடமளிக்க வேண்டும். அப்போதுதான் ஆண்களின் மனதில் பெண்கள் மீதான ஈர்ப்பு குறையும்.

- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை.

பெண்களும் இந்த விஷயத்தில் மாற வேண்டும். உடை, அலங் காரம் எதிலும் தான் பெண் என்பதை நினைவு படுத்திக்கொண்டே இருக்கக்கூடாது. பெண்மைக்கும் சுயகவுரவத்துக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்.

- ச. சாய்சுதா, நெய்வேலி.

பெண்களை உடலாக மட்டுமே பார்க்கிற மனோபாவத்தின் நீட்சியாகத்தான் சாதாரண கடைகளில் இருந்து பெருநிறுவனங்கள்வரை வனப்புடன் இருக்கிற பெண்களையே பணியில் அமர்த்துகின்றனர். சில விளம்பரங்களில் வெளிப்படையாகவே ‘அழகும் தோற்றப்பொலிவும் இருக்கிறவர்கள் தேவை’ என்று குறிப்பிடுகிறார்கள். பெண்கள் இதைக் கடந்து வரவேண்டும். மாற்றத்துக்கான செயலை ஊடகங்கள் முன்னெடுக்க வேண்டும்.

- ஆயிஷா சாதாத், சென்னை.

பெற்றோரின் வளர்ப்பில்தான் அனைத்துமே அடங்கியிருக்கிறது. ஆணோ, பெண்ணோ எந்தக் குழந்தையாக இருந்தாலும் சிறு வயது முதலே பாகுபாடு இல்லாமல் சமத்துவமாக வளர்க்க வேண்டும். ஓரளவுக்கு வளர்ந்த பிறகு உடல் குறித்தத் தெளிவை அந்தக் குழந்தை களுக்குப் பெற்றோர் ஏற்படுத்த வேண்டும்.

- எம். பிரேம்குமார், மதுரை.

ராவணன் கண்களுக்கு சீதை மாற்றான் மனைவி என்ற எண்ணம் மறைந்து அவள் உடல் அழகு மட்டுமே கண் முன்னே நின்றதாக ராமாயணம் சொல்கிறது. ராமாயண காலத்தில் மாறாத ஆண்களின் மனப்போக்கு எல்லாவற்றிலும் மேலை நாட்டைப் பார்த்து வாழும் இன்றைய சமூகத்தில் எப்படி மாறும்? தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை வளர்க்கும்போது பெண் என்பவள் மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியவள் என்று கற்றுத்தர வேண்டும். பிள்ளைகள் முன் மனைவியை கணவன் மரியாதையாக நடத்த வேண்டும்.

- உஷாமுத்துராமன், திருநகர்.

ஒரு பெண்ணைத் தவறான கண்ணோட்டத்தில் ஒருவர் பார்க்கிறார் என்பதை அந்தப் பெண் உணர்ந்துவிட்டால் உடனே தயங்காமல் அவர்களை எதிர்நோக்க வேண்டும். பெண்கள் துணிச்சலுடன் செயல்பட்டால் ஆண்களின் மனநிலை மாறும்.

- ரேவதி விஸ்வநாதன், சின்னமனூர்.

ஆண்களுக்கு நிகராக பெண்களின் முன்னேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களின் இயலாமையே பெண்களின் புறத்தோற்றத்தை விமர்சனம் செய்யத் தூண்டுகின்றது.பெண்களின் திறமையை உணர்ந்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தந்து சரிசமமாக நடத்தும் காலம் வரும்வரை எதுவும் மாறாது.

- பானு பெரியதம்பி, சேலம்.

ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மிகப்பெரிய புண்ணியம் அடைந்ததாக நினைத்து அவர்களுக்கு ராஜ மரியாதை செய்கிற பெண்கள் பலர் உண்டு. ‘ஒரு விளக்குமாறு குச்சியை சிறு துண்டாக உடைத்து போட்டு, ஆண் பிள்ளை என்று சொன்னால் அந்த விளக்குமாறு குச்சியும் துள்ளித் துள்ளி குதிக்குமாம்’ என்று சொல்வார்கள். பெண்களாகப் பிறந்துவிட்டால் ஆண்களிடம் அடிமைப் பட்டு பணிந்துதான் இருக்கவேண்டும் என்று காலம் காலமாக சொல்லி, ரத்தத்தில் விதைத்துவிட்டார்கள். இதை மாற்ற பெண்கள் மனது வைத்தால் மட்டுமே முடியும். பெண்களின் எண்ணங்களும் பார்வைகளும் மாற வேண்டும் .

- ஜீவன்.பி.கே, கும்பகோணம்.

பெண்களைக் கேவலப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு அதிகம். பொது மேடையில் நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுகிறார்கள். செய்தித்தாள்களின் பங்கு அதைவிட மோசம். பெண்கள் ஏதேனும் தைரியமான செயல்கள் செய்திருந்தால் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இவ்வளவு துணிச்சலா என்று விமர்சனங்கள் குவியும். இந்த நிலை மாற ஆண், பெண் சமத்துவம் அவசியம். அதை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும்.

- தேஜஸ், காளப்பட்டி, கோவை.

பெண்களுக்கான சட்டங்களில் எந்தக் குறுக்கீடும் இல்லாமல் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய நீதியை உரிய நேரத்தில் கிடைக்கும்படி செய்யவேண்டும். பெண் மீதான இயற்கை உந்துதல் அளவோடு இருக்கும் வரை எந்தச் சிக்கலுமில்லை. ஆனால் இன்று அனைத்து ஊடகங்களிலும் ஆண்களின் பாலியல் வேட்கைக்குத் தீனி குவிந்து கிடக்கிறது. பெரும்பாலான ஆண்களின் அடி மன ஆழத்தில் எப்போதும் பெண் குறித்த சிந்தனையே குடிகொண்டிருக்கும். தவறு செய்யாத ஆண்கள் பெரும்பாலும் வாய்ப்பு கிடைக்காதவர்களாகவோ துணிவு குறைவானவர்களாகவோதான் இருப்பார்கள்.

இதற்கான தீர்வு குடும்பங்களில் இருந்துதான் தொடங்கப்படவேண்டும். பெற்றோர், தாத்தா - பாட்டி ஆகியோர் தாங்களே முன்னோடிகளாக வாழ வேண்டும்.

- தங்கப்பா விண்மீன்.

ஒவ்வொரு பெண்ணும் படிப்புடன் திறமைகளையும் வளர்த்துக்கொண்டு சொந்தக்காலில் நிற்க பழக வேண்டும்.பெண் அழகு என்பது தன்னை எரிக்கும் நெருப்பு என்கிற உணர்வை ஆண்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.

-மு.க.இப்ராஹிம், வேம்பார்.

சட்டமன்றம், பாராளுமன்றம், பொதுத் துறை, தனியார் துறை என எல்லா இடங்களிலும் தங்களுக்கான சரிபாதி இட ஒதுக்கீட்டைப் பெறுவதன் மூலமே பெண்கள் முழுமையான அதிகாரங்களைப் பெறுவதுடன் சுயமரியாதையையும் காப்பாற்ற முடியும். அதற்கான போராட்டங்களை எல்லாத் தளங்களிலும் முன்னெடுப்பதே சமூக அக்கறை கொண்ட அனைவரது கடமை.

- மருதம் செல்வா, திருப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x