Last Updated : 10 Jul, 2015 01:10 PM

 

Published : 10 Jul 2015 01:10 PM
Last Updated : 10 Jul 2015 01:10 PM

இனி எல்லாமே ‘மீம்ஸ்’ தான்!

இப்போதைய சமூக ஊடக யுகத்தில், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள செய்தித் தொலைக்காட்சிகளையோ, செய்தித் தாளையோ பார்க்க வேண்டிய அவசியமே ஏற்படுவதில்லை. ஏனென்றால், நாட்டில் ஏதாவது ஒரு முக்கியமான விஷயம் நடந்தால், அடுத்த நொடியிலேயே அதைப் பற்றிய ‘மீம்’ பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவிவிடுகிறது.

‘ஹெல்மெட்’ கட்டாயமாக்கப் பட்டாலும் மீம், சென்னையில் மெட்ரோ ரயில் ஓடினாலும் மீம், கேப்டன் யோகா செய்தாலும் மீம் என எங்குப் பார்த்தாலும் இப்போது ‘மீம்ஸ்’ மயமே. இந்த மீம்ஸ் கலாசாரம் இளைஞர்கள் மத்தியில் இந்தளவுக்குப் பிரபலமாவதற்கு என்ன காரணம் தெரியுமா? எவ்வளவு சீரியஸான செய்தியாக இருந்தாலும் அதை நகைச்சுவை, நையாண்டி, நக்கலோடு வெளிப் படுத்தும் ‘மீம்ஸ்’தான்.

இந்த மீம்ஸைச் சமூக ஊடகங்களில் வெளியிடும் ‘டைமிங்கும்’ இவற்றை டிரெண்டிங்காக மாற்றி விடுகின்றன. அப்படி பேஸ்புக்கில் ‘சென்னை மீம்ஸ்’ என்னும் பக்கம் இளைஞர்களின் ஃபுல் சப்போர்ட்டுடன் செயல்பட்டுவருகிறது. சென்னையைப் பற்றிய அரிய தகவல்களில் ஆரம்பித்து, சமூக செயல்பாடுகள், அரசியல் நிகழ்வுகள் எனச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் மீம்ஸை வெளியிடுகிறது இந்தப் பக்கம்.

கடந்த ஆண்டு, கௌதம் ஆரம்பித்த ‘சென்னை மீம்ஸ்’ பக்கம் ஒரே ஆண்டில் ஒரு லட்சம் லைக்ஸைத் தொட்டிருக்கிறது. “நான் முதலில் ‘முகப்பேர் கன்ஃபெஷன்ஸ்’ என்னும் பேஸ்புக் பக்கத்தை நடத்திவந்தேன். அந்தப் பக்கத்துக்குக் கிடைத்த வரவேற்பும், சென்னை மீது எனக்கிருந்த காதலுமே ‘சென்னை மீம்ஸ்’ பக்கத்தை ஆரம்பிக்க காரணமாக இருந்தது” என்கிறார் 22 வயதான கௌதம். இவர் தற்போது சோஷியல் மீடியா அனலிஸ்ட்டாகப் பணியாற்றி வருகிறார்.

அதற்குப் பிறகு, ‘சென்னை மீம்ஸ்’ பக்கத்துக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்தவர்களையும் இந்தப் பக்கத்துக்கு ‘அட்மின்’ ஆக்கியிருக்கிறார் கௌதம். இவர்கள் அனைவரும் புனைபெயரில் மீம்ஸைப் பகிர்கின்றனர். கௌதம் (ஜோக்கர்), கிராபிக் டிசைனர் பரத் சுப்ரமணி (கிரிம்), சாப்ட்வேர் டெவலப்பர்  ரங்கராஜன் (சைஃபெர்), சாப்ட்வேர் இஞ்சினீயர் பிரவீன்(பேன்), கல்லூரி மாணவர்கள் சஞ்சய் ராம் (அந்நியன்), அட்ரியன் டேவிட் (டாங்லீ) ஆகியோர் இந்தப் பக்கத்தைத் தற்போது நிர்வகிக்கின்றனர்.

இந்தப் பக்கத்தில் இடம்பெறும் மீம்ஸ், சென்னையின் தற்போதைய போக்கை நகைச்சுவையோடு வெளிப்படுத்துவது மட்டுமன்றி, சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. “கொடுங்கையூர் குப்பைக் கிடங்கைப் பற்றிய செய்தியை எங்கள் பக்கத்தில் வெளியிட்டோம். அப்போது அங்கே வசிக்கும் ஒருவர் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி எங்களுக்கு அனுப்பினார். அதை சென்னை மீம்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தோம். அதற்குப் பலதரப்பில் இருந்தும் எங்களுக்குக் கருத்துகள் வந்தன. அந்தக் கருத்துகள் எங்களை யோசிக்க வைத்தன. இப்போது சென்னை மீம்ஸ் சார்பாக, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கைப் பற்றி ஓர் ஆவணப் படத்தைத் தயாரிக்கிறோம்” என்று பொறுப்பாகப் பேசுகிறார் கௌதம்.

இந்த ஆண்டு ‘மெட்ராஸ் டே’வைக் கொண்டாடும் விதமாக ‘சென்னை மீம்ஸ்’ இணையதளத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருக்கின்றனர் இந்த இளைஞர்கள். “அன்றாட வேலைப் பளுவுக்கிடையே எங்களுடைய மீம்ஸ் ‘ஸ்ட்ரெஸ் பஸ்டராக’ செயல்படுகிறது என்று பலரும் எங்களிடம் தெரிவிக்கின்றனர். எங்களால் மற்றவர்களைச் சிரிக்க வைக்க முடிகிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், சிரிக்க வைப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் எங்கள் பக்கத்தின் பிரபலத்தை முடிந்தளவுக்கு சமூகச் செயல்பாடுகளுக்காகவும் பயன்படுத்துகிறோம்.

ரத்த தானம் பற்றிய அறிவிப்புகள், ஆதரவற்ற நாய்களைத் தத்தெடுப்பதற்கான தகவல்கள், உள்ளூர் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து பகிர்வோம்” என்று சொல்கிறார் பரத். இந்தத் தகவல்களை சென்னை மீம்ஸ் பக்கத்தைப் பின்தொடர்பவர்களும் இவர்களுக்கு அளிக்கின்றனர்.

சென்னை பற்றிய தகவல்கள், படங்கள், செய்திக் கட்டுரைகளைப் பெரியளவில் சேகரித்துவைத்திருக்கின்றனர் இந்தக் குழுவினர். “இந்தத் தகவல்களைச் சேகரிக்க நான்கு மாதங்கள் எடுத்துக்கொண்டோம். இப்போது வரவிருக்கும் ‘மெட்ராஸ் டே’வைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டிருக் கிறோம். ‘சென்னை மீம்ஸ்’ இணையதளம் சார்பாக ஆவணப் படங்கள், சிரிக்க வைக்கும் வீடியோக்கள், மீம்ஸ் எனப் பல அம்சங்களை அதில் எதிர்பார்க்கலாம்” என்று உற்சாகமாகச் சொல்கிறார் கௌதம்.

சென்னை மீம்ஸ் பக்கத்தைப் பின்தொடர்வதற்கு: >https://www.facebook.com/memeschennai

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x