துளி உலகம்

துளி உலகம்
Updated on
2 min read

இணைய உலகத்தின் ரத்தினங்களைப் போன்ற கட்டுரைகளைப் பற்றி ரத்தினச் சுருக்கமாக இந்தப் புதிய பகுதி அறிமுகம் செய்யும்.

எல்லாம் மறந்துபோன பிறகும் எஞ்சுவது எது? (What stays when everything goes)

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் வலைப்பூவில் வெளியான கட்டுரை இது. அல்ஷைமர் நோய் பற்றிய ஒரு ஆய்வைப் பற்றிய கட்டுரை இது. அல்ஷைமர் நோய் என்பது பெரும்பாலும் முதுமை காரணமாக ஏற்படும் கொடுமையான மறதி நோய். நமது தினசரி வாழ்க்கைக்குத் தேவையான தகவல்களை எல்லாம் நாம் மறக்க ஆரம்பிப்போம். நமது நண்பர்கள், உறவினர்கள், பிள்ளைகள், கணவர்/மனைவி ஆகியோரின் பெயர்களை மட்டுமல்லாமல் அவர்களையே மறந்துவிடுவோம். இதன் உச்சம்தான் நம் பெயரை நாமே மறந்துவிடுவது. ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் லீலா சாம்சனுக்கு இந்த நோய் இருப்பதுபோல் காட்டியிருப்பார்கள்.

சமீபத்திய ஆய்வொன்றில் ஆச்சரியமான ஒரு விஷயம் தெரியவந்திருக்கிறது. நமது பெயர் மறந்தாலும்கூட நமக்குப் பிடித்த இசை, பாடல்கள் போன்றவை மறப்பதில்லை என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளையின் தற்காலிக நினைவுப் பகுதியில்தான் இசை நினைவுகள் சேமிக்கப்படுகின்றன என்றே பெரும்பாலும் கருதப்பட்டுவந்தது. தற்போதைய ஆய்வில் மூளையின் மையவரிப் பகுதிக்கும் இசை நினைவுக்கும் தொடர்பிருப்பதுபோல் தெரிகிறது. இந்த ஆய்வு இன்னும் தொடரவிருக்கிறது.

இந்தக் கட்டுரையின் இணைப்பு: >http://bit.ly/1M7BoxU

குத்துச்சண்டைதான் என்னைக் காப்பாற்றியது (‘Boxing saved me from a life of crime’)

ஜுயூஸப்பி லீத்தோ என்ற முன்னாள் குத்துச்சண்டை வீரரின் அனுபவப் பகிர்வு இது. ஃபைனான்ஸியல் டைம்ஸ் இதழில் வெளியாகியிருக்கிறது. எதிர்மறை சக்தியையும் சூழலையும் எப்படி ஆக்கபூர்வமான வழியில் திருப்புவது என்பதற்கு ஜுயூஸப்பி லீத்தோவின் வாழ்க்கையை உதாரணமாகக் கொள்ளலாம். வன்முறை தலைவிரித்தாடும் இத்தாலிய நகரமான பலேமோவின் தெருக்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே வன்முறையின் வெவ்வேறு வடிவங்கள். தெருவில் கொள்ளையர்கள் போல் விளையாடும் சிறுவர்கள் பின்னாட்களில் கொள்ளையர்களாக மாறுவதுதான் அங்கே நிதர்சனம்.

சிறுவராய்த் தெருச்சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜுயூஸப்பி தெருவில்தான் அடிபட்டுச் சாவார் என்று அவருடைய அம்மா எதிர்பார்த்திருந்தார். அவருடைய உறவினர் ஒருவர் ஜுயூஸப்பியை உடற்பயிற்சிக் கூடத்துக்கு வருமாறு ஒரு முறை அழைத்திருக்கிறார். அன்றிலிருந்து அவரது வாழ்க்கையே மாறியது. குத்துச்சண்டை பயிற்சியில் சிறு வயது முதலே ஈடுபடத் தொடங்கியதால் அவருக்குப் படிப்பு மீதும் நாட்டம் ஏற்பட்டு தொடக்கக் கல்வியை மீண்டும் தொடர்ந்தார். படிப்பை முடித்துவிட்டுக் குத்துச்சண்டைக் களத்துக்குச் செல்லும்போது அவரை இளக்காரமாகத்தான் பார்த்திருக்கிறார்கள். யாரும் எதிர்பாராத வகையில் ஒரு வெற்றியைப் பெற்ற பிறகு ஜுயூஸப்பிக்கு ஹீரோ அந்தஸ்து கிடைக்க ஆரம்பித்தது.

தனது திசையை எப்படி அவர் மாற்றிக்கொண்டாரோ அதேபோல் தெருவில் வன்முறையில் திளைத்துக்கொண்டிருந்த சிறுவர்கள், இளைஞர்கள் வாழ்க்கையையும் மாற்றுவதற்காக அவர்களுக்குக் குத்துச்சண்டை பயிற்சியும் அளிக்க ஆரம்பித்தார். ஜுயூஸப்பியின் வாழ்க்கை மூன்றாம் உலக நாடுகளின் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.

இந்தக் கட்டுரையின் இணைப்பு: >http://on.ft.com/1J6K8U6

-தம்பி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in