Last Updated : 25 Jul, 2015 01:14 PM

 

Published : 25 Jul 2015 01:14 PM
Last Updated : 25 Jul 2015 01:14 PM

இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்?

உலக இயற்கை பாதுகாப்பு நாள்: ஜூலை: 28

உக்கிரமாக அடிக்கிற காற்று

காலை முழுவதும் நீடிக்க முடியாது;

பயங்கரமாக அடிக்கிற மழை

நாள் முழுவதும் நீடிக்க முடியாது;

வானகமும் வையகமும் தவிர

இவற்றை யார் உருவாக்கியிருக்கிறார்கள்?

வானகமும் வையகமும்

நிரந்தரமாக நீடிக்க முடியாதபோது

மனிதன் எப்படி நீடிக்க முடியும்?

- லாவோ ட்சு

இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டடையத் தேனீ போன்ற ஒரு சிற்றுயிர் நமக்கு உதவக்கூடும். பதிலைக் காண்பதற்கு முன்பு தேனீக்களைப் பற்றிய சில விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

தேனீக்கள் அளிக்கும் உயிர்ப்பு

உலகம் முழுவதும் தாவரங்களில் நிகழும் மகரந்தச் சேர்க்கையில் 80 சதவீதத்துக்குப் பொறுப்பு காட்டுத் தேனீக்களும் வளர்ப்புத் தேனீக்களும்தான். தேனீக்களின் ஒரு சமூகம், ஒரு நாளில் 30 கோடி பூக்களில் மகரந்தச் சேர்க்கை நிகழ உதவுகிறது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. மனிதர்களுக்கு உணவு தரும் பயிர்களில் நூற்றுக்கு 70 பயிர்களில் தேனீக்களால்தான் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது. இந்தப் பயிர்கள்தான் உலகின் ஊட்டச்சத்து தேவையில் 90 சதவீதத்தைப் பூர்த்திசெய்கின்றன. இதற்கெல்லாம் காரணம் தேனீக்கள்தான்.

ஆனால், எதையும் பண மதிப்பில் சொன்னால்தானே நமக்குப் புரியும்! ஒவ்வோர் ஆண்டும் உலகமெங்கும் தேனீக்களின் அயராத மகரந்தச் சேர்க்கைப் பணியின் விளைவால் கிடைக்கும் பொருளாதாரத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ. 20 லட்சம் கோடி! இது உணவு விளைபொருளின் மதிப்புதான். இந்த உணவுகளெல்லாம் புவியின் பெரும்பாலான உயிர்களுக்குக் கொடுக்கும் ஆற்றலையும் அதனால் காக்கப்படும் இயற்கைச் சமநிலையையும் மதிப்பிடவே முடியாது.

கூடு திரும்பாத தேனீ

ஆனால், தேனீக்களின் இன்றைய நிலை என்ன தெரியுமா? 1990-களிலிருந்து தேனீக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைய ஆரம்பித்திருக்கிறது. தேனீக்கள் கூட்டம் கூட்டமாகக் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. 2006-ல் டேவ் ஹேக்கன்பெர்க் என்ற தேனீ வளர்ப்பாளருக்கு என்ன நடந்தது என்பதைப் பாருங்கள்.

ஒரு நாள் காலை அவர் தன்னுடைய பராமரிப்பில் உள்ள 400 தேன்கூடு பெட்டிகளைப் பார்வையிட வந்திருக்கிறார். கிட்டத்தட்டப் பெரும்பாலானவை காலியாகவே இருந்தன. அவற்றில் ராணித் தேனீக்கள் மட்டுமே இருந்தன. தேன் சேகரிக்கச் சென்ற வேலைக்காரத் தேனீக்கள் அனைத்தும் வீடு திரும்பவில்லை, அதாவது கூடு திரும்பவில்லை.

இப்படித்தான் அமெரிக்காவின் பல இடங்களிலும்! என்ன நடந்ததென்று யாருக்கும் புரியவில்லை. வெவ்வேறு விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன. கைபேசிக் கோபுரங்கள்தான் காரணம் என்றும், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்தான் காரணம் என்றும், பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட வேதிப்பொருட்கள், ஒட்டுண்ணிகள் போன்றவையே காரணம் என்றும் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டன.

சுடும் உண்மை

இந்தக் காரணங்களில் கைபேசிக் கோபுரங்களின் தொடர்பு, சிட்டுக்குருவி விவகாரம் போலவே இன்னும் நிரூபிக்கப்படவில்லை; எனினும் மற்றக் காரணங்கள் பெருமளவு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதுதவிர, முக்கியமான காரணங்கள் வாழிட அழிப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு. கூடவே, காற்று மாசுபாடு, புவி வெப்பமாதல் போன்றவையும் சேர்ந்துகொள்கின்றன. ஆக, ஒட்டுண்ணியைத் தவிர மற்றக் காரணங்கள் எல்லாவற்றுக்கும் காரணகர்த்தா வேறு யார்? உலகை ஆள்வதாகச் சொல்லிக்கொள்ளும் மனித இனமான நாம்தான்.

இந்தக் காரணங்கள் ஒவ்வொன்றையும் பற்றி சற்று விரிவாகப் பார்க்கப்போனால் ஒரு விஷயம் நமக்குப் புரியும். இவையெல்லாம் தேனீக்கள் மட்டுமே எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் அல்ல; மனிதர்கள் உட்பட உயிரினங்கள் அனைத்தும் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினை.

புதிய கொல்லிகள்

தேனீக்களின் அழிவுக்கு முதல் காரணமாகச் சொல்லப்படுபவை நியோநிக்கோடினாய்டுகள் என்னும் பூச்சிக்கொல்லிகள். இவற்றின் பெயர் நமக்கு உணர்த்துவதைப் போல, புகையிலையின் நிக்கோடினுக்கும் இவற்றுக்கும் தொடர்பு உண்டு. நியோநிக்கோடினாய்டுகள் சுருக்கமாக நியோனிக்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வேதிப்பொருட்கள் திட்டமிட்டாற்போல் செயல்படக்கூடியவை என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.

அதாவது ஒரு தாவரத்தை முழுவதுமாக ஒரு படலம்போல் இவை சூழ்ந்துகொள்கின்றன. பூக்கள், இலைகள் என்று எதையும் இவை விட்டுவைப்பதில்லை. இந்த வேதிப்பொருட்கள் தாவரங்களை மட்டுமல்லாமல், தாவரங்களில் உள்ள பூக்களை நாடிவரும் தேனீக்களின் மூளைவரை ஊடுருவி அங்கேயும் சூழ்ந்துவிடுகின்றன என்றும், அதனால் தேனீக்களுக்குக் குழப்பம் ஏற்பட்டுக் கூடு திரும்ப முடியாமல் போகிறது என்றும் அறிவியல் ஊகங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

குழம்பிய தேனீக்கள்

இதற்கு அடுத்த முக்கியமான காரணம் வாழிட இழப்பு. தேனீக்கள் இடம்பெயரக் கூடியவை. அவை இடம்பெயரும் வழிகளில் ஆங்காங்கே தேவையான அளவு தாவரங்கள் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு நெடுஞ்சாலையில் காரில் நீங்கள் நீண்ட பயணம் சென்றுகொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு கட்டத்தில் உங்கள் காரில் பெட்ரோல் குறைந்துகொண்டே வருகிறது.

வழியில் பெட்ரோல் பங்க் இல்லை. வேறு குறுக்குச் சாலைகளும் இல்லை. உங்களிடமும் கையிருப்பு இல்லை. இப்போது நீங்கள் வந்த வழியிலும் திரும்ப முடியாது. மீதி வழியையும் கடக்க முடியாது. அப்புறம் என்ன ஆகும்? இதுதான் தேனீக்களின் நிலையும்.

காடுகள், மரம் செடிகொடிகள் இல்லையென்றாலும், வழியெங்கும் வயல்கள் இருக்குமல்லவா என்று நாம் கேட்கலாம். அங்கேதான் மூன்றாவது பிரச்சினையும் நியோநிக்கோடினாய்டுகள் பிரச்சினையும் கைகோக்கின்றன. ஊட்டச்சத்துக் குறைபாடு, இதுதான் மூன்றாவது பிரச்சினை. தேனீக்களுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளும் நுண்ணூட்டச்சத்துகளும் ஒரே தாவரத்தின் தேனிலிருந்து கிடைத்துவிடாது.

வெவ்வேறு வகையான தாவரங்களிலிருந்து திரட்டப்படும் தேனால்தான், இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். அதாவது தேன் ஆதாரங்கள் ஓர் இடத்தில் பலவகைப்பட்டதாக இருக்க வேண்டும். கண்ணுக்கு எட்டிய பரப்பெங்கும் நெல் வயல்கள், கோதுமை வயல்கள் மட்டுமே இருந்தால் தேனீக்களுக்கு எத்தகைய ஊட்டச்சத்துகள் கிடைக்கும்? அதிலும் பூச்சிக்கொல்லிக் குளத்தில் முங்கினால், கிடைக்கும் தேன் மட்டும் தேவாமிர்தமாகவா இருக்கும்?

சங்கிலிப் பிணைப்பு

இந்த ஊட்டச்சத்து குறைபாட்டால் தேனீக்களுக்கு இயற்கையாகவே இருக்கும் எதிர்ப்பு சக்தி குறைந்துபோய்விடுகிறது. நோய்கள், ஒட்டுண்ணிகள் போன்றவற்றால் கூட்டம்கூட்டமாக அழிந்துபோகின்றன தேனீக்கள். ஆக, ஊட்டச்சத்து பிரச்சினைக்குள்ளிருந்து இன்னொரு பிரச்சினையும் வெளிப்படுகிறது. ஓரினச் சாகுபடி என்ற பிரச்சினைதான் அது.

இன்னும் காற்று மாசுபாடு, புவி வெப்பமாதல்… இப்படி இயற்கை இன்றைக்கு எதிர்கொண்டிருக்கும் அபாயங்கள் அத்தனையும் தேனீக்களில் தொடங்கி, நாம் அனைவரும் எதிர்கொண்டிருக்கும் அபாயங்களே. இதனால் நமக்கு ஒரு உண்மை மேலும் மேலும் துலக்கமாகிறது. இயற்கையில் எதுவும் தனித்து இல்லை. இயற்கையின் அம்சங்களில் ஒரு பகுதியில் ஏற்படும் பாதிப்பு, எல்லாப் பகுதிகளிலும் பிரதிபலிக்காமல் இருக்காது.

என்ன செய்ய வேண்டும்?

ஆக, இயற்கையைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அதாவது மனிதர்களான நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால், தேனீக்களைக் காப்பாற்றியாக வேண்டும். தேனீக்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால் பூச்சிக்கொல்லி மருந்துகள், வாழிட அழிப்பு, ஓரினச் சாகுபடி, காற்று மாசுபாடு, புவி வெப்பமாதல் ஆகிய அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும். அல்லது, அவற்றைத் தவிர்க்கக் குறைந்தபட்ச முயற்சிகளையாவது உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இந்தக் கட்டுரையைத் தேனீக்களை வைத்து ஏன் ஆரம்பிக்க வேண்டும் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். ஓர் இயற்கைச் சூழலினுடைய ஆரோக்கியத்தின் மிகவும் பொருத்தமான அடையாளம் தேனீக்களே. தேனீக்களுக்கு ஏற்படும் எந்தப் பாதிப்பும் நம் சூழலுக்கும் நமக்கும் ஏற்படும் பாதிப்பே.

விழித்துக்கொள்வோமா?

உலகின் பெரும்பாலான உயிரினங்களை அழிவுக்குள்ளாக்கும் ஆறாவது பேரழிவு தொடங்கிவிட்டது என்ற எச்சரிக்கைகள் நம் காதுகளில் விழுகின்றன. அந்தப் பேரழிவில் ஒரே ஒரு உயிரினம் நிச்சயமாக எஞ்சியிருக்காது என்று உறுதியுடன் சொல்ல வேண்டுமென்றால், மனித இனத்தைத்தான் அப்படிச் சொல்ல முடியும். அது மட்டுமல்ல உயிரினங்களில் ஒரு குறிப்பிட்ட இனத்தால், அதாவது நம்மால், ஏற்படப்போகும் பேரழிவைப் பற்றி நாம் காதுகளில் போட்டுக்கொண்டதுபோலவே தெரியவில்லை. நாம் சாகாவரம் பெற்றவர்கள், என்பதுபோல் நடந்துகொள்கிறோம் (இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள கவிதையைப் பார்க்கவும்).

மத நூல்களில் சொல்லப்படும் உலக அழிவு பற்றிய தீர்க்க தரிசனங்களைப் போன்றே இந்த எச்சரிக்கைகளையெல்லாம் நாம் புறந்தள்ளிவிடுகிறோம். நமது எல்லையற்ற சுயநலம், நம்மை அழிக்காமல் போனாலும் நம் பிள்ளைகளின் எதிர்கால உலகத்தை அழிக்காமல் விடாது என்பது கொஞ்சம்கூட நமக்குப் புலப்படவேயில்லை என்பதுதான் விசித்திரம்.

பிரபஞ்சத்தில் நமக்கென்று இருக்கும் ஒரே இடம் இந்தப் புவிதான். ‘நமக்கென்று’ என்று சொல்வது மனிதர்கள், தேனீக்கள், விலங்குகள், தாவரங்கள், கிருமிகள் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கும். இந்த எண்ணம் மட்டுமே நம்மை, அதாவது மனிதர்களைக் காப்பாற்றும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x