Last Updated : 31 Jul, 2015 06:47 PM

 

Published : 31 Jul 2015 06:47 PM
Last Updated : 31 Jul 2015 06:47 PM

மயக்கும் அகல்யா

ராமாயணத்தில் சாபத்துக்குள்ளான முனிவரின் மனைவி அகல்யையின் கதையை நவீன காலத்தில் 14 நிமிடக் குறும்படமாக ‘அகல்யா’ என்று எடுத்திருக்கிறார் சுஜாய் கோஷ். யூட்யூபில் பார்த்தவர்கள் வியக்க, நண்பர்களைப் பார்க்கத் தூண்ட, லட்சக்கணக்கானவர்களைத் தீண்டிவிட்டாள் ‘அகல்யா’. அமிதாப் பச்சன் முதல் சாதாரணர் வரை புகழும் படமாக இருக்கிறது இந்தக் குறும்படம்.

பணக்கார ஓவியரும் முதியவருமான கௌதம சாதுவின் (சௌமித்ர சட்டர்ஜி) கொல்கத்தா பங்களாவுக்கு அவரது சிற்பத்துக்கான மாடலாக வந்து காணாமல் போன இளஞனைத் தேடி இன்ஸ்பெக்டர் இந்திர சென் அழைப்பு மணியை அழுத்துகிறார். கதவைத் திறந்தவுடன் அழகும் கவர்ச்சியும் ததும்பும் உடையில் இளம் மனைவி அகல்யா (ராதிகா ஆப்தே) கதவைத் திறக்கிறார். வரவேற்பறையில் நான்கு பொம்மைகள் இன்ஸ்பெக்டரின் கவனத்தை ஈர்க்கின்றன. பொம்மைகள் எந்தக் காரணமுமின்றி விழுந்துகொண்டேயிருக்கின்றன. இன்ஸ்பெக்டர் அகல்யாவால் ஈர்க்கப்படுகிறான்.

14 நிமிடங்களில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று நம்மால் ஊகிக்க முடிந்தாலும், சுவாரசியமாகவும் திடுக்கிடும் தன்மையைத் தக்கவைத்தபடி போகிறது படம். வங்காள வீடுகளின் அழகு, ராதிகா ஆப்தேயின் மயக்கும் கவர்ச்சி, குறும்புக்காரக் கிழட்டு ஓவியராக வரும் சௌமித்ரா சாட்டர்ஜி பேசும் துடுக்கான வசனங்கள், இன்ஸ்பெக்டராக நடிக்கும் டாடா ராயின் நுட்பமான வெளிப்பாடுகள் எல்லாம் சேர்ந்து அகல்யாவை ஒரு நவீன கிளாசிக்காக மாற்றுகின்றன.

ராமாயண அகல்யை தவறு செய்யாம லேயே கணவனால் தண்டிக்கப்பட்டவள். அந்தக் கதைக்குப் புதிய திருப்பத்தைக் கொடுத்து நவீன அகல்யாவாக மாற்றியுள்ளதோடு அதை நல்ல அனுபவ மாகவும் மாற்றியுள்ளார் சுஜாய் கோஷ்.