Published : 14 Jul 2015 11:19 AM
Last Updated : 14 Jul 2015 11:19 AM

அறிவியல் அறிவோம்- 19: ஆப்பிரிக்க ஈட்டியோடு ஐரோப்பாவில் பறந்த நாரை!

மே 22, 1822-ம் ஆண்டு. ஜெர்மனி. குளிர்காலம் சென்று வசந்தம் பிறந்தது. மெக்லென்பேர்க் பிரதேசத்தில் இருக்கும் போத்மேர் எஸ்டேட் முதலாளி எப்போதும்போல பறவைகளைச் சுடும் விளையாட்டில் அன்றைய ஜமீன்தார்கள் போல ஈடுபட்டுவந்தார். அவரது தலைக்கு மேலே வசந்த காலத்தில் பறந்தது செங்கால் நாரை (White Stork). எடுத்தார் தனது துப்பாக்கியை, சரியாகக் குறிவைத்தார். டுமீல்... கீழே விழுந்தது நாரை.

இரண்டாம் வேட்டை

நாரையின் அருகே விரைந்தனர் அவரும் அவரது கூட்டாளிகளும். குண்டடி பட்டு இறக்கும் தறுவாயில் கிடந்த நாரையைப் பார்த்ததும் வியப்பில் ஆழ்ந்தார்கள், திகைப்பில் ஒரு கணம் விறைத்துப்போனார்கள்.

ஏற்கெனவே அந்த நாரை வேட்டையாடப்பட்டிருந்தது. அதன் கழுத்தில் 80 சென்டிமீட்டர் நீளமுள்ள இரும்பு முனையுடன் ஈட்டி பாய்ந்து கிடந்தது.

ஆப்பிரிக்காவிலிருந்து

உடனே அருகில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு அவர்கள் விரைந்தார்கள். ரோஸ்டோக் (Rostock) பல்கலைக்கழகத்தில் அந்தப் பறவையை ஒப்படைத்தார்கள். அங்கே, அந்தப் பறவையைப் பதப்படுத்தி, ஈட்டியுடன் வைத்தார்கள். அந்த ஈட்டி ஐரோப்பாவில் பயன்படுத்தும் ஈட்டி அல்ல என்றும் மத்திய ஆப்பிரிக்காவின் பழங்குடி மக்கள் பயன்படுத்தும் ஈட்டி என்றும் தெரியவந்தது. அதாவது அந்த நாரை ஆப்பிரிக்காவிலிருந்து பறந்துவந்திருக்கிறது என்பது விளங்கியது.

பட்ட காலிலே படும் என்பார்களே அதுபோல ஆப்பிரிக்காவில் வேட்டையாடப்பட்டு, தப்பிப் பிழைத்து ஐரோப்பா வந்தால் அங்கு குண்டடி பட்டு இறந்துபோனது அந்த நாரை. ஜெர்மன் மொழியில் அம்பு தைத்த நாரை எனும் பொருள் படும்படி ‘பைல்ஸ்ட்ரோச்’ (pfeilstorch) என்று செல்லமாகப் பெயர் வைக்கப்பட்டு இன்றளவும் பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் அதன் உடல் ரோச்டோக் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

நிலாவுக்கு அல்ல

குண்டடி பட்டு மடிந்த நாரை அறிவியல் உலகுக்குப் புது வெளிச்சம் பாய்ச்சியது. அதுவரை அறிவியல் உலகை உலுக்கிக்கொண்டிருந்த ஒரு கேள்விக்குப் பதில் தந்தது அந்த நாரை. பனிக் காலத்தில் ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து வலசை செல்லும் செங்கால் நாரைகள் எங்கு செல்கின்றன என்பதுதான் அந்தக் கேள்வி. ஐரோப்பியப் பனிக் காலத்தின்போது இந்த செங்கால் நாரை மத்திய ஆப்பிரிக்காவுக்குப் புலம்பெயர்கிறது என்பதை ஆப்பிரிக்க ஈட்டியைத் தாங்கிவந்த நாரை சுட்டிக்காட்டியது.

1703-ல் எழுதப்பட்ட ஒரு நூலில் பனிக் காலத்தில் பறந்து செல்லும் பறவைகள் நிலவுக்குச் சென்று ஓய்வெடுத்துக்கொள்கின்றன என்று சொல்லப்பட்டிருந்தது. பனிக் காலத்தில் உறைந்துபோகும் ஏரிகளின் அடியில் நீரில் இவை வசந்தம் வரும்வரை வாழும் என்றும் கூறினார்கள். அரிஸ்டாட்டில் தனது நூலில் பனிக் காலத்தில் செங்கால் நாரை போன்ற பறவைகள் குளிர்கால உறக்கத்தில் (hibernation) செல்லும் என்று கூறியிருந்தார். பனிக் காலத்தில் அந்தப் பறவைகள் எங்கு வலசை செல்கின்றன என்பது குறித்து 19-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெறும் யூகங்களும் கற்பிதங்களும்தான் நிலவின. இந்த நிலையில்தான் ஆப்பிரிக்க ஈட்டியுடன் வந்த செங்கால் நாரை இந்தப் புதிரை அவிழ்த்தது.

முதல் முயற்சி

ஸ்காட்லாந்தைச் சார்ந்த சர் ஆர்தர் தாம்சன் (Sir Arthur Landsborough Thomson) என்பவர்தான் முதன்முதலில் பறவைகளின் கால்களில் உலோக வளையத்தை அணிவித்து ஆராய முனைந்தவர். 1909-ல் இந்த முயற்சியை முதன்முதலில் அவர் மேற்கொண்டார். அதன் பிறகுதான் பறவைகளின் காலில் உலோக வளையங்களை மாட்டி பறவைகளின் வலசை குறித்து ஆராய்ச்சி செய்தார்கள். அந்த உலோக வளையங்களில் எண் பொறிக்கப்படும்.

மேலும், எந்த இடத்தில் அந்த உலோக வளையம் பொருத்தப்பட்டது என்பது பற்றிய குறியும் பொறிக்கப்படும். பறவை பறந்து செல்லும்பொது எங்காவது சிக்கிக்கொண்டால் எங்கு பிடிக்கப்பட்டது, என்று பிடிக்கப்பட்டது போன்ற தகவல்கள் திரட்டப்படும். இவ்வாறு திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில்தான் பறவைகள் குளிர்காலத்தில் ஐரோப்பா போன்ற பகுதிகளிலிருந்து வெப்பப் பிரதேசமான ஆப்பிரிக்கா போன்ற தொலைதூரப் பிரதேசங்களுக்குச் செல்கின்றன என்பது தெரியவந்தது.

இன்று, பறவைகள் மட்டுமல்ல; காண்டாமிருகம் போன்ற விலங்குகள் மீதும், ஆலிவ் ரிட்லி ஆமைகள் முதலானவற்றின் மீதும் கருவிகள் பொருத்தப்பட்டு அவற்றின் நகர்வுகள் கண்காணிக்கப்படுகின்றன. ரேடியோ கருவிகளைப் பொருத்தி ஜி.பி.எஸ் கருவி உதவியுடன் இந்த விலங்குகள், பறவைகள் போன்றவை செல்லும் பாதை உட்பட எல்லாவற்றையும் ஆய்வாளர்கள் பதிவுசெய்து ஆராய்ச்சி செய்துவருகிறார்கள்.

8 நாள் தொடர் பறப்பு

பட்டைவால் மூக்கன் (Bar-tailed Godwit) என்னும் பறவை குளிர்காலம் வரும் முன்னர் அலாஸ்காவிலிருந்து நியூஸிலாந்துக்குப் புயல் வேகத்தில் பறந்து 11 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்தை வெறும் எட்டு நாட்களில் மேற்கொள்கிறது. ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ ஒருமுறைகூடப் பயணத்தை முறிக்காமல் இடைவிடாது தொடர்ந்து எட்டு நாட்கள் கடலின் மீது பறக்கும் இதன் சாகசத்தைப் பற்றிப் பறவையியல் ஆய்வின்போது தெரியவந்தது. இதுபோன்ற ஆய்வுகள் மூலம் பறவைகளின் வலசை குறித்து எவ்வளவோ அதிசயங்கள் நமக்குத் தெரியவந்திருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியிலிருந்து குளிர்காலத்தில் வெளியேறும் செங்கால் நாரைகள் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்து பசிபிக் பெருங்கடலில் செங்கால் நாரை கஃபே (White Shark Cafe) என்று செல்லமாக விஞ்ஞானிகள் அழைக்கும் பகுதிக்கு வலசை செல்வது ஒரு அதிசயம். குளிர்காலத்தில் தென்கிழக்கு சைபீரியா மற்றும் வடக்கு சீனாவிலிருந்து நாகாலாந்து வழியே இந்தியாவின் மீது பறந்து சென்று அரபிக் கடலைத் தாண்டி ஆப்பிரிக்கா செல்லும் அமுர் வல்லூறு மறுபடி தாயகம் திரும்பும் வழியில் இந்தியப் பெருங்கடல் மீது பறக்கும். அதே சமயம் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும் வெட்டுக்கிளிகளைக் கடல் பரப்பின் மீதே அந்த வல்லூறுகள் உணவாகக் கொள்கின்றன.

சிறையில் நாரை

2013-ல் மேநெஸ் (Mnes) என்று பெயரிடப்பட்ட ஒரு நாரை சர்வதேச செய்தித்தாள்களில் இடம்பிடித்தது. ஐரோப்பியப் பறவையியல் ஆய்வுக்காக ஹங்கேரியில் கருவி பொருத்தப்பட்ட அந்தப் பறவை ரோமானியா, பல்கேரியா, கிரேக்கம், துருக்கி, சிரியா, ஜோர்டான், இஸ்ரேல் எனப் பல நாடுகளின் மீது பறந்து சென்று அதன் இலக்கான எகிப்தைச் சென்றடைந்தது.

எகிப்தில் அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்த புரட்சியின் இடையே காலில் சாட்டிலைட் கருவியுடன் பிடிபட்ட இந்த நாரை பிரான்ஸின் ‘உளவாளி' என்று கருதி போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டது. சிறைக் கம்பிகளினிடையே அந்தப் பறவையின் புகைப்படம் சர்வதேசச் செய்தித்தாள்களில் இடம் பிடித்தது. பின்னர்தான் ஆய்வுக்கான சாதனம் பொருத்தப்பட்ட பறவை அது என்பது புரிபட்டு அந்தப் பறவையை விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட அந்தப் பறவை அடுத்த சில நாட்களில் ஒரு வேட்டைக்காரரின் துப்பாக்கிக்கு இரையாகியது.

வலசைபோகும் பறவைகளின், விலங்குகளின் பாதையைத் துல்லியமாகக் கண்காணிப்பதன் தொடர்ச்சியாக அந்த விலங்குகளின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். பறவைகளின் பாதையில் அவை தங்கும் இடங்களைத் துல்லியமாகக் கண்டுபிடித்தால் அவற்றைப் பறவைகள் சரணாலயமாக மாற்றிப் பாதுகாப்பு அளிக்க முடியுமல்லவா? அவை செல்லும் பாதைகளில் அவற்றின் உணவு, அவை தங்கி இளைப்பாறும் இடங்கள் முதலியவற்றையும் உறுதி செய்ய இயலும்.

தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x