Published : 18 May 2014 15:51 pm

Updated : 20 May 2014 14:57 pm

 

Published : 18 May 2014 03:51 PM
Last Updated : 20 May 2014 02:57 PM

மணக்கும் மண்பானை உணவகம்

தைப்பொங்கலையே குக்கரில் வைத்துப் பொங்கும் அளவுக்கு சமையல் நவீனமயமாகி வருகிறது. வீட்டிலேயே இந்த நிலைமை என்றால் உணவகங்களைப் பற்றிக் கேட்கத் தேவையில்லை. வறுத்த சாதம், எரித்த கோழி என எல்லைகளைக் கடந்து செல்கிறது உணவுத்தேடல். இருந்தாலும் பாரம்பரியச் சுவையோடு மட்டுமல்லாமல், பாரம்பரிய முறையிலும் உணவு தயாரிக்கிற உணவகங்களும் சில நம்பிக்கையளிக்கத்தான் செய்கின்றன.

திருச்சி அரசு மருத்துவமனை எதிரே ஆபீஸர்ஸ் காலனியில் இருக்கிறது செல்லம்மாள் உணவகம். சோறு, குழம்பு, பொரியல் என அனைத்தும் மணக்க மணக்க மண்பானைகளில் தயாராகின்றன. இதில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. வீட்டில் சமைக்கவே சிரமப்படுகிற கீரை வகைகளையும் இங்கே சுவைக்க முடிகிறது. அதற்காகவே வாடிக்கையாளர்கள் இந்த உணவகத்தைத் தேடி வருகிறார்கள்.


“இப்படித் தேடி வரவழைத்ததுதான் எங்கள் வெற்றி” என்று புன்னகையுடன் தொடங்குகிறார் ‘செல்லம்மாள் சமையல்’ உணவகத்தின் உரிமையாளர் செல்வி.

“துறையூர் பக்கத்துல உப்புளியபுரம்தான் என் சொந்த ஊர். கல்யாணம் முடிஞ்சு திருச்சிக்கு வந்தேன். என் கணவர் பத்து வருஷம் டாமின்-ல வேலை பார்த்தார். சொந்தமா ஏதாவது தொழில் பண்ணலாம்னு யோசிச்சோம். வெளியூர்ல இருந்து வேலைக்காக திருச்சி வந்து தங்குற பெண்களுக்காக ஹாஸ்டல் தொடங்கலாம்னு முடிவு பண்ணோம். அவரும் வேலையை விட்டுட்டு என் முடிவுக்குக் கைகொடுத்தார்.

ஹாஸ்டலில் இருக்கற பெண்களுக்கு நாங்கதான் சமையல் செய்து கொடுத்தோம். அதையே இன்னும் கொஞ்சம் விரிவாக்கலாம்னு தோணுச்சு. அதோட விளைவுதான் இந்த செல்லம்மாள் சமையல்” என்று உணவகம் தொடங்கிய கதையை விவரித்தார் செல்வி.

சிறுதானியமும் கீரையும்

செல்விக்கு உதவியாக இந்த உணவகத்தில் எட்டு பெண்கள் இருக்கிறார்கள். எண்ணெய் கத்தரிக்காய், மிளகுக் குழம்பு, வத்தக் குழம்பு என்று தொடங்கும் இவர்களின் சமையல் பட்டியல் முருங்கைக்கீரை, மணத்தக்காளி, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணி, புளிச்சக்கீரையுடன் நல்லெண்ணெய் என்று பயணித்து வாழைத்தண்டு கூட்டு, வாழைப்பூ வடை, தினை, வரகு போன்றவற்றில் சமைக்கப்படும் சிறுதானிய சோறு, கைக்குத்தல் அரிசி சோறு, அவல் பாயசம் என்று வயிறு நிறைக்கிறது. இவை அத்தனையும் ஒருவேளை சாப்பாட்டிலா என நினைக்கலாம். மற்ற உணவகங்கள் போல இங்கே முழு சாப்பாடு என்று பரிமாறப்படுவதில்லை. என்ன தேவையோ அதை மட்டும் சாப்பிடலாம்.

“சிலருக்கு சிலது பிடிக்கும், சிலது பிடிக்காது. நாம ஒரு சாப்பாட்டுக்கு இவ்வளவுன்னு காசு வாங்கிட்டா பிடிக்காதைக்கூட வாங்கற மாதிரி ஆகிடும். அதனால என்ன தேவையோ அதை மட்டும் வாங்கிக்கலாம்” என்று அதற்கு விளக்கமும் தருகிறார் செல்வி.

சமையல் தயாராவது மட்டுமல்ல, பரிமாறப்படுவதும் மண் பாத்திரங்களில்தான். சின்னச் சின்ன மண் கிண்ணங்களில் சோறும், குழம்பும், கூட்டும் வருகிறது. அவற்றைப் பார்க்கும் போதே வயிற்றை முந்திக் கொண்டு கண்கள் பசியாறிவிடுகின்றன. இத்தனை இருந்தும் பிளாஸ்டிக் கவர்களில் பார்சல் வழங்கப்படுவது மட்டும் ஒட்டாமல் இருக்கிறது.

“என்ன செய்வது? இப்போதைக்கு அனுமதிக்கப்பட்ட அளவில் இருக்கும் பிளாஸ்டிக் கவர்களைத்தான் பயன்படுத்துகிறோம். எங்களுக்கும் அதில் உடன்பாடு இல்லை. அதனாலதான் பார்சல் கேட்டு வருகிறவர்களிடம் அடுத்தமுறை வரும்போது வீட்டில் இருந்தே பாத்திரங்களை எடுத்துவரச் சொல்கிறோம்” என்கிறார் செல்வி.

கண்ணும் கருத்துமான சமையல்

எவர்சில்வர் அல்லது அலுமினியப் பாத்திரங்களைக் கொஞ்சம் கவனக்குறைவாகக் கையாண்டாலும் சிக்கல் இருக்காது. அதிகபட்சம் அவை நெளிந்துபோகக்கூடும். ஆனால் மண்பாத்திரங்கள் அப்படியல்ல. அவற்றைக் கையாள்வது சிரமம். அதைத்தான் வழிமொழிகிறார்கள் இங்கே உதவிக்கு இருக்கிறவர்களும்.

“ஒவ்வொரு முறை பாத்திரங்களை அடுப்பிலேற்றி, இறக்கும்போதும் கவனத்துடன் தான் இருப்போம். லேசாகக் கவனம் சிதறினாலோ, கைதவறினாலோ அவ்வளவுதான். சமைத்தவை அனைத்தும் பாழாகிவிடும். சில சமயம் சோறு வெந்துகொண்டிருக்கும்போதே பானை பொத்துக்கொண்டு அடுப்பில் கொட்டிவிடும். குழம்பை இறக்கிவைக்கும் போது கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாலும் விரிசல்விட்டு குழம்பு சிந்திப்போகும். இதையெல்லாம் கவனத்தில் வைத்துதான் வேலை செய்கிறோம்” என்கிறார்கள்.

சிறுதானிய பயன்பாட்டுக்கும் காரணம் வைத்திருக்கிறார்கள். இப்போதிருக்கும் உணவு முறையால் பலருக்குச் சிறுவயதிலேயே நீரிழிவு நோய் வந்துவிடுகிறது. சிறுதானியங்கள் மூலமாகத்தான் அதைக் கட்டுக்குள் வைக்க முடியும். அதற்காகவே தினசரி ஒரு சிறுதானிய உணவை, பட்டியலில் இருக்கும்படி பார்த்துக் கொள்வதாகச் சொல்கிறார் செல்வி.

“ஆரம்பத்தில் இப்படி கீரையும், தானியங்களுமாகச் சமைப்பது நஷ்டத்தைத் தந்தது. எடுத்ததுமே எதிலும் ஏற்றம் கிடைத்துவிடுமா என்ன? பொறுமையக இருந்தோம். என் முயற்சிகளுக்கு என் கணவரும், கேட்டரிங் படிக்கும் என் மகனும் துணை நின்றார்கள். இப்போது வாடிக்கையாளர்கள் தேடிவருகிற அளவில் இருக்கிறோம். இதுவே நிறைவாக இருக்கிறது” என்கிற செல்வியின் வார்த்தைகளிலும் அந்த நிறைவு வெளிப்படுகிறது!


தவறவிடாதீர்!

  செல்லம்மாள் உணவகம்உணவகம்பாரம்பரிய சமையல்பாரம்பரிய உணவு

  Sign up to receive our newsletter in your inbox every day!

  More From This Category

  weekly-updates

  சேதி தெரியுமா?

  இணைப்பிதழ்கள்

  More From this Author

  x