Published : 05 May 2014 02:24 PM
Last Updated : 05 May 2014 02:24 PM

கப்பலில் வேலை தரும் பட்டப்படிப்பு

பிளஸ்-2 முடிக்கும் மாணவ-மாணவிகள் வழக்கமான பொறியியல், கலை, அறிவியல் படிப்புகள் மீது மட்டும் கவனம் செலுத்தாமல் அரிய சில தொழில்நுட்ப படிப்புகளையும் பரிசீலிக்கலாம். தற்போது, கப்பல்துறை அறிவியல் (Nautical Science) பட்டதாரிகளுக்குக் கப்பல்களில் வேலைவாய்ப்புகள் மிகுதியாக உள்ளன.

மத்திய அரசின் கடல் சார் மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் (Central Institute of Fisheries Nautical and Engineering Training-CIFNET) மீன்பிடி சார்ந்த பல்வேறு தொழில்நுட்பப் படிப்புகளை வழங்கிவருகிறது. கேரள மாநிலம் கொச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிப்நெட் நிறுவனத்துக்குச் சென்னை ராயபுரத்திலும் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திலும் கல்வி வளாகங்கள் உள்ளன. சிப்நெட் வழங்கும் படிப்புகளில் முக்கியமானது பி.எப்.எஸ்சி. நாட்டிக்கல் சயின்ஸ் (B.F.Sc. Nautical Science).

மத்தியக் கப்பல் துறை இயக்குனரகத்தின் அனுமதி பெற்ற நாட்டிக்கல் சயின்ஸ் பட்டப் படிப்பு சிப்நெட் தலைமையகமான கொச்சியில் வழங்கப்படுகிறது. படிப்புக் காலம் 4 ஆண்டுகள். இப்படிப்பில், பிளஸ்-2 முதல் குரூப் (கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்) எடுத்துப் படித்தவர்கள் சேரலாம். பிளஸ்-2 அல்லது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிளஸ்-2 மதிப்பெண், நுழைவுத்தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள். நுழைவுத் தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண் உண்டு.

நாட்டிக்கல் சயின்ஸ் படிப்புக்கு மொத்தம் 20 இடங்கள் உள்ளன. இந்தப் படிப்பை முடிப்பவர்கள் தேவையான கடல் அனுபவம் பெற்றிருந்தால் அவர்கள் எழுத்துத் தேர்வு எதுவும் இல்லாமல் மேட் பிஷ்ஷிங் வெசல் (Mate Fishing Vessel) நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துகொள்ளலாம். இதில் வெற்றிபெற்றால் Certificate of Competency in Mate of Fishing Vessel சான்றிதழ் வழங்கப்படும்.

வரும் ஆண்டுக்கான (2014-2015) பி.எப்.எஸ்சி. நாட்டிக்கல் சயின்ஸ் மாணவர் சேர்க்கை அறிவிப்பை சிப்நெட் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

விண்ணப்பப் படிவத்தின் விலை: ரூ.500 (எஸ்சி, எஸ்டி. வகுப்பினருக்கு ரூ.250). விண்ணப்பம் கிடைக்குமிடம்: கொச்சியில் உள்ள சிப்நெட் தலைமையகம், சென்னை ராயபுரத்தில் உள்ள சிப்நெட் வளாகம், சிப்நெட் இணையதளம் (www.cifnet.gov.in).

பூர்த்திசெய்த விண்ணப்பம் அனுப்பக் கடைசி நாள்: மே 16.

அனுப்ப வேண்டிய முகவரி: Central Institute of Fisheries Nautical and Engineering Training, (C I F N E T), Dewan's Road, Kochi - 682 016

நுழைவுத்தேர்வு நாள்: ஜூன் 7

நுழைவுத் தேர்வு மையங்கள்: கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம்

இத்தேர்வில் வெற்றிபெறு வோருக்கு ஜூலை 15-ம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இறுதியாகத் தேர்வுசெய்யப்படுவோருக்கு வகுப்புகள் ஜூலை 21-ம் தேதி தொடங்கும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

பி.எப்.எஸ்சி. நாட்டிக்கல் சயின்ஸ் பட்டம் பெற்றவர்கள், மீன்பிடிக் கப்பல் இயக்கம் மற்றும் மீன்பிடி ஆராய்ச்சி தொடர்பான மத்திய மீன்பிடி நிறுவனங்களிலும், மாநில அரசின் மீன்வளத் துறையிலும் அரசுப் பணிகளில் சேரலாம். தனியார் மீன்பிடிக் கப்பல்களிலும் வேலைவாய்ப்புகள் ஏராளமாகக் காத்திருக்கின்றன. ரூ. 40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். சம்பளம் தவிர, ஊக்கத் தொகை உள்பட ஏராளமான சலுகைகளும் உண்டு. அட்மிஷன் நடைமுறை, நுழைவுத் தேர்வு, பயிற்சித் திட்டம் தொடர்பான விவரங்களை சிப்நெட் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x