Last Updated : 20 May, 2014 04:45 PM

 

Published : 20 May 2014 04:45 PM
Last Updated : 20 May 2014 04:45 PM

தோணி ஆமைக்கு மறுவாழ்வு

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி கடற்கரை கிராமத்தில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் ஓர் ஏழு வரி ஆமை/தோணி ஆமை காப்பாற்றப்பட்டுக் கடலில் மீண்டும் விடுவிக்கப்பட்டது. இந்தியக் கடற்கரைக்கு வந்து முட்டையிடும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள அரிய ஆமை வகை அது. உலகிலேயே மிகப் பெரிய கடல் ஆமையும் இதுதான்.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உருவாகிக் கன்னியாகுமரி மாவட்டத்தின் குறுக்காக ஒழுகினசேரி, சுசீந்தரம் வழியாக ஓடி மணக்குடி கடற்கரைக் கிராமத்தை ஒட்டி அரபிக் கடலில் கலக்கிறது ‘பழையாறு’. இந்தப் பழையாறுதான் சங்க இலக்கியத்தில் ‘பஹ்ருளியாறு’ என்று அழைக்கப்பட்டது. ‘பஹ்ருளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள’ என்ற சங்க இலக்கிய வரிகளே இதற்குச் சான்று. மணக்குடி அவ்வளவு பழமையான ஊர்.

பிடிபட்ட ஆமை

மணக்குடி வாழ் மீனவர்களின் வலையில் ஒரு ‘தோணி ஆமை’ பிடிபட்டிருப்பதாக, பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தை (Bombay Natural History Society) சேர்ந்த நண்பர்கள் மூலமாகத் தகவல் கிடைத்தவுடனேயே வனச் சரக அலுவலர் தலைமையின் ஒரு குழு அங்கே சென்றது. அந்த ஆமையை ஒரு படகின் கீழ் வலையோடு சேர்த்துக் கட்டி வைக்கப்பட்டிருந்தது. வலையில் சிக்கிய ஆமையை விடுவிக்க அந்தக் குழு, மீனவர்களிடம் இசைவு பெற்றது.

வன உயிர்ப் பாதுகாப்புச் சட்டம் (Wildlife Protection Act, 1972) அமலில் இருந்தாலும், மீனவர்களாக முன்வந்து ஆமையைக் காட்டாவிட்டால், எங்கள் குழுவால் அதைக் கண்டுபிடித்திருக்க முடியாது.

நாங்கள் அதுவரை அவ்வளவு பெரிய ஆமையைப் பார்த்தது கிடையாது. ஆமையின் பெரிய அளவு உடல், அதன் முதுகிலிருந்த ஏழு வரிகள் ஆகியவற்றைக்கொண்டு அதை ‘ஏழு வரி ஆமை’ (Leatherback Turtle) என்று அடையாளம் காண முடிந்தது. அதற்குத் தோணி ஆமை என்றும் பெயர் உண்டு. ஆமையின் நீளம் 1.5 மீட்டர்; அகலம் 1 மீட்டர்; உயரம் 0.75 மீட்டர். எடை சுமார் 300 முதல் 400 கிலோ இருக்கலாம். மீனவர்களின் உதவியுடன் அந்த ஆமை மீண்டும் கடலில் விடுவிக்கப்பட்டது.

ஆமை வகைகள்

இந்தியக் கடற்பகுதிகளில் பங்குனி ஆமை (சித்தாமை/பஞ்சல் ஆமை - Olive ridley), அலுங்காமை (Hawksbill turtle), பெருந்தலை ஆமை (Loggerhead turtle), தோணி ஆமை (Leatherback turtle), ஓங்கில் ஆமை (Green turtle) ஆகிய ஐந்து வகை ஆமைகள் காணப்படுகின்றன.

கடலில் வாழும் ஆமைகள் முட்டை இடுவதற்கு மட்டும் கடலை ஒட்டிய நிலப் பகுதிக்கு இரவு நேரத்தில் வருகின்றன. அந்த முட்டை பொரிந்து இரவு நேரத்தில் முட்டை பொரிந்து வெளிவரும் குஞ்சுகளின் மனதில் நிலத்தின் அமைப்பு, அங்கு நிலவும் காந்தப்புலம், அங்கு வீசும் நறுமணம் ஆகியவை பதிந்துவிடுவதால், இந்தக் குஞ்சுகள் வளர்ந்து இனப்பெருக்கத்துக்குத் தயாராகும்போது, தாங்கள் பிறந்த கடற்கரைப் பகுதிக்கே மீண்டும் முட்டையிட வருகின்றன. இந்த வியக்கத்தக்க செயல்பாட்டை ‘Natal Homing' என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்.

தோணி ஆமை

‘Leatherback Turtle’ என்றும் ‘Dermochelys coriacea’ என்ற அறிவியல் பெயராலும் அழைக்கப்படுகின்ற ஏழு வரி ஆமை/தோணி ஆமை கடல் ஆமைகளிலேயே மிகப் பெரியது, மிகுந்த எடையுள்ளது. சராசரியாக எட்டு அடி நீளம் வரை வளரும். அதிகபட்சமாக 800 கிலோ எடை கொண்டவை. கருஞ்சாம்பல் வண்ணத்தில் காணப்படும் இந்த வகை ஆமைகள் ஊனுண்ணிகள். இவை இழுது அல்லது சொறி மீன்களை (Jelly fish) விரும்பி உண்கின்றன. சுமார் 400 முதல் 1,200 மீட்டர் ஆழத்தில் கடலின் உள்ளே அரை மணி நேரம்வரை மூச்சு பிடித்து நீந்தும் திறன்கொண்டவை. இனச்சேர்க்கை நேரத்தில் மட்டுமே இந்த வகை ஆமைகள் கடற்கரைப் பகுதிக்கு வருகின்றன.

ஆனால், கடல் ஆமைகள் மாமிசத்துக்காகவும் கொழுப்புச் சத்துக்காகவும் அதிகம் வேட்டையாடப்படுகின்றன. ஆமைகள் கடற்கரைகளில் முட்டையிடுவதால் நாய், காக்கை உள்ளிட்டவற்றால் முட்டைகளும், குஞ்சுகளும் பலியாகின்றன. இப்படி வேட்டையாலும், இனப்பெருக்கக் காலத்திலும் பலியாவதாலும் இவற்றின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவருகிறது.

பொதுவாகக் கடல் ஆமைகள் ஆரோக்கியச் சுட்டி உயிரினங்களாக (Flagship species) கருதப்படுகின்றன. அதனால் இவை வாழும் சூழல்தொகுதி (Eco system) முழுமையும் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

வ.சுந்தர ராஜு - கட்டுரையாளர், இந்திய முன்னாள் வனப் பணி அலுவலர்- தொடர்புக்கு: sundarifs.raju@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x