Published : 07 Jul 2015 12:14 PM
Last Updated : 07 Jul 2015 12:14 PM

ஐ.ஏ.எஸ். எழுதுவது எப்படி?

ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகளைக் கேட்டு வாசகர்களிடமிருந்து பல மின்னஞ்சல்கள் வந்துள்ளன. அதற்கான பதிலைத் தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறையின் துணை இயக்குநர் எம்.கண்ணனிடம் கேட்டுப் பெற்றோம்.

ஐ.ஏ.எஸ். தேர்வில் விருப்பப் பாடமாக இயற்பியலை எடுக்கலாமா என ஒரு வாசகர் கேட்டுள்ளார். ஐ.ஐ.டி. போன்ற உயர்தர பொறியியல் கல்வி பயின்ற மாணவர்கள் அதிக அளவில் இயற்பியலை விருப்பப் பாடமாகக் கடந்த காலங்களில் தேர்ந்தெடுத்த காரணத் தால் இயற்பியல் பாடத் திட்டம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) சற்று கடினமாக்கப்பட்டது. அதனால் அந்தப் பாடம் சற்று கடினமாகவே இருக்கும்.

அரசியல் விஞ்ஞானம், பொது நிர்வாகம், வரலாறு, புவியியல், சமூகவியல், உளவியல் போன்ற அனைத்து விருப்பப் பாடங்களும் தேர்வுக்கான தயாரிப்புக்குச் சற்று எளிமையாக இருக்கும்.

பல்கலைக்கழகங்கள் வழங்கும் முதுநிலை பட்டப்படிப்புகளில் மேற்கண்ட பாடப் பிரிவுகளில் தமிழ்வழி புத்தகங்கள் கிடைக்கின்றன. அவற்றை நாம் தேர்வுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஐ.ஏ.எஸ் தேர்வு ஒன்றே குறிக்கோளாக இருக்கும் நிலையில் நீங்கள் மேற்கண்ட பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றை இளங்கலை பாடப்பிரிவாகத் தேர்ந்தெடுக்கலாம்.

ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு ஆங்கில அறிவு அதிகம் தேவையா என்கிறார் ஒரு வாசகர். Language Paper-ல் முதனிலைத் தேர்வில் (PRELIMINARY EXAM) கேள்விகளைப் படித்து விடையளிக்கும் அளவுக்கு ஆங்கில அறிவு இருந்தால் போதுமானது. பிரதானத் தேர்வில் (MAIN EXAM) கேள்விகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் அதைப் புரிந்துகொண்டு தமிழ் வழியில் விடையளிக்கலாம்.

இதற்குப் பிரதானத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது தமிழ்வழித் தேர்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழ்வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களையும் தொடர்புகொண்டு தக்க ஆலோசனை பெறலாம்.

ஐ.ஏ.எஸ். பாடத்திட்டம், தேர்வு முறை தொடர்பான தகவல்களுக்கு >www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தகவல்கள் உள்ளன. தமிழக அரசு நடத்தும் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற >www.civilservicecoaching.com என்ற இணையதளத்தை பார்வையிடவும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கும் தன்னார்வப் பயிலும் வட்டங்கள் (Study Circle) மூலமாகவும் இதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x