Last Updated : 03 Jul, 2015 11:04 AM

 

Published : 03 Jul 2015 11:04 AM
Last Updated : 03 Jul 2015 11:04 AM

மிரளவைக்கும் சாது: ‘சொப்பன வாழ்வில் - நாடக விமர்சனம்

யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் ( UAA) நாடகக் குழுவின் 65-வது படைப்புக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபல கதாசிரியர்கள் கோபு-பாபு கதை மற்றும் வசனம் எழுதியுள்ளனர்.

கதாநாயகன் சராசரி மனிதர்களை விட மூளை வளர்ச்சி சற்றே குன்றியவன். அலுவலகத்திலும் நண்பர்கள் வட்டாரத்திலும் பரோபகாரி என்று பெயர் எடுத்தவன். தனக்கென வாழாமல் பிறருக்காகவே வாழ்பவன். அவன் ஆபத்தில் மாட்டிக்கொள்ளும் சமயங்களில் அவனுடைய உதவியைப் பெற்றவர்களும் அவனைக் கைவிட்டு விடுகிறார்கள். அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் மீண்டும் அவர்களுக்கு உதவி செய்ய அவன் தயங்குவதில்லை.

அவனுடைய அழகான மனைவிக்கோ அவன் எல்லோரையும்போல வாழவேண்டும் என்று ஆசை. அவனுக்குத் தன்னம்பிக்கையூட்டும் வகையில் அறிவுரையும் வழங்குகிறாள். திடீரென்று அவனுக் குத் தலையில் அடிபடுகிறது. எல்லாம் மாறிவிடு கிறது. நடக்கப் போகும் தீய நிகழ்வுகளை முன்கூட் டியே சொப்பனத்தில் காணும் தன்மையைப் பெறுகிறான். காவல்துறையின் பெரும் மதிப்பைப் பெற்றவனாகிறான். ஊடகங் களில் பெரும் புகழ் அடைகிறான்.

இந்த அமானுஷ்ய சக்தியை அவன் எப்படிப் பயன்படுத்துகிறான், அதன் விளைவுகள் என்ன என்பதே மீதிக் கதை.

கதை ஒய்.ஜி.மகேந்திரனை (ஒய்ஜிஎம்) மனதில் வைத்தே எழுதியதைப் போல் உள்ளது. நல்ல கதையம்சம், உயிரோட்டமான நிகழ்வுகள் யாவும் நாடகத்துக்கு பக்க பலம். நாடகம் முழுவதும் இழையோடும் நகைச்சுவையும் சுவாரஸ்யமான திருப்பங்களும் பார்வையாளர்களைக் கட்டிப் போடுகின்றன. வஞ்சிக்கப்படுபவன் வஞ்சம் தீர்க்க முனையும்போது ஏற்படும் அனுபவங்கள் சிந்திக்க வைப்பவை. இறுதிக் காட்சிகளில் சற்றும் எதிர்பார்க் காத திருப்பம் கதாசிரியர்களின் முத்திரை.

ஒய்ஜிஎம்மின் நடிப்புப் பசிக்கு நல்ல தீனி போடும் கதாபாத்திரம். பரம சாதுவாகவும், பின்னர் அந்தச் சாது மிரண்டு மிருகமாக மாறுவதையும் தத்ரூபமாக நம் கண் முன்னே காட்டுகிறார். ஒளிச் சாதனங்களின் உதவியின்றி, தன் முகபாவங்களினா லும், குரல் ஏற்ற இறக்கங்களினாலும் அந்தக் கதா பாத்திரத்தின் முழுப் பரிமாணத்தையும் சித்தரிக் கிறார். நகைச் சுவைக் காட்சிகளில் கேட்கவே வேண்டாம்.

ஒய்ஜிஎம்மின் மனைவியாக யுவ கொடுத்த பாத்திரத்தில் கச்சிதமாகத் தன்னைப் பொருத்திக் கொள்கிறார். ஒரே காட்சியில் மட்டும் வந்தாலும் அரங்கத்தைப் புரட்டிப் போட்டுவிடுகிறார் சுப்பிணி. நாயகனின் மாமியாராக பிருந்தாவும், அப்பாவாக ஜெயக்குமாரும் நகைச்சுவைக் காட்சிகளில் ஜொலிக்கின்றனர். கூடவே இருந்து குழிப்பறிக்கும் நண்பனாக ஹுசைன் பளிச்சிடுகிறார். காவல்துறை அதிகாரி, அலுவலக மேலாளர் என இரு வேடங் களை ஏற்றிருக்கும் ராமச்சந்திர ராவ், இரண்டு பாத் திரங்களுக்கும் தக்க நியாயம் வழங்கியிருக்கிறார்.

ஓய்ஜிஎம்மின் இயக்கம் அவரின் இன்னொரு பரிமாணத்தை நமக்கு உணர்த்துகிறது. அவரது பன்முகத் திறமையைப் பார்க்கும்போது திரைத் துறை இவரைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வில்லையோ என்று தோன்றுகிறது.

இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம் பாகவதரின் ‘சொப்பன வாழ்வில்’ பாடலை மிகவும் அழகாகக் கையாண்டிருக்கிறார். பின்னணி இசைக்கு அந்தப் பாடலைப் பயன்படுத்தி இருப்பது புதுமையாகவும், அதே சமயம் கதாநாயகனின் போக்குக்கேற்றபடி அமைத்திருப்பதும் காட்சி களுக்குக் கைகொடுக்கிறது.

பத்மா ஸ்டேஜ் கண்ணனின் மேடையமைப்பு, கலை ரவியின் ஒளி மற்றும் இசைக் கலவைகள், எஸ்.கே.ஆரின் ஒப்பனை ஆகியவை நாடகத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்துள்ளன.

அப்பாஸ் மற்றும் பாரத் கலாச்சாரின் சார்பாகச் சமீபத்தில் அரங்கேறியுள்ள இந்த நாடகம் நல்ல நடிப்பு, அழுத்தமான கதை, ரசனையான இசை ஆகியவற்றால் தரமான பொழுதுபோக்கு நாடக மாக அமைந்துள்ளது. அதேநேரத்தில் அவ்வப் போதுவரும் இரட்டை அர்த்த வசனங்கள் கொஞ்சம் நெருடலாக உள்ளன. அதைக் தவிர்த்திருந்தால் நாடகம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x