

மத்திய அரசின் பொதுப்பணித் துறை, மத்திய நீர் ஆணையம், இந்திய அஞ்சல் துறை, ராணுவ பொறியாளர் பணி ஆகியவற்றில் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் பிரிவுகளில் 1,000 இளநிலை பொறியாளர்கள் (Junior Engineers) காலிப் பணியிடங்கள் உள்ளன. இவர்கள் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வு மூலமாக நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்தில் பாலிடெக்னிக் டிப்ளமா பெற்றிருக்க வேண்டும். ஒரு சில பிரிவுகளுக்கு பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பைப் பொறுத்த வரையில், பணிக்குத் தகுந்தாற்போல் 27 , 32 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
எழுத்துத் தேர்வு (500 மதிப்பெண்கள்), நேர்காணல் (100 மதிப்பெண்கள்) அடிப்படையில் நியமனம் நடைபெறும். எழுத்துத் தேர்வில் சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்துடன் நுண்ணறிவுத் திறன் மற்றும் ரீசனிங், பொது அறிவு ஆகியவற்றிலிருந்தும் கேள்விகள் இடம்பெறும்.
எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. தகுதியான இளநிலை பொறியாளர்கள் ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதிக்குள் ஆன்லைனில் (>www.ssconline.nic.in) விண்ணப்பிக்க வேண்டும் கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வுமுறை, பாடத்திட்டம் உள்ளிட்டவை தொடர்பான விரிவான தகவல்களை பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.