Published : 31 Jul 2015 12:14 PM
Last Updated : 31 Jul 2015 12:14 PM

சினிமா ரசனை 9: விறுவிறுப்புக்குப் பெயர்போன கில்லி!

நுழைவாயில்

வெறும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்ததுதான் சினிமா என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? கதையோ திரைக்கதையோ துளிக்கூடத் தேவையில்லை; பிரம்மாண்டங்கள், செட்கள், கதைக்குத் தேவையே இல்லாத காட்சிகள் ஆகியவற்றையே வைத்து ஒரு படத்தை உருவாக்கிவிடலாம் என்ற எண்ணத்தையே வலிந்து விதைக்கும் தற்போதைய படங்களைப் பார்த்தால் இப்படியெல்லாம் தோன்றுவது இயற்கைதான்.

ஆனால், கதை, திரைக்கதை, உருவாக்கம் ஆகிய எல்லா அம்சங்களிலும் மிகுந்த தரத்தோடு, அதேசமயம் விறுவிறுப்பும் குறையாமல் திரைப்படங்களை உருவாக்கிவரும் புகழ்பெற்ற இயக்குநர் ஒருவர் இருக்கிறார். இவர் போன்ற இயக்குநர்கள்தான் தமிழுக்கு உண்மையில் தேவை. அப்போதுதான் தரமான படங்கள் நமக்குக் கிடைக்கும்.

இதுவரை நாம் பார்த்துவந்த தலைப்புகளில் பெரும்பாலும் ஆர்ட் படங்கள் அல்லது அவை போன்ற படங்களே இடம்பெற்றிருக்கின்றன. இந்தத் தொடரின் அறிமுகத்தில் பார்த்ததுபோல், மூன்று வகையான ரசிகர்களுக்காகவும் பல்வேறு விஷயங்கள் இடம்பெறும் என்று சொல்லிவிட்டு, ஆர்ட் படங்களைப் பற்றி மட்டுமே எழுதினால் எப்படி? எனவே, தரமான வணிகப் படங்கள் எடுத்து, உலகின் சிறந்த கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் நபர் ஒவருவரைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

டேவிட் ஃபிஞ்ச்சர் (David Fincher). இவரது படங்கள் பிரபலமான அளவு இவரது பெயர் பிரபலம் அடைந்ததில்லை. இவரது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகை. அந்த ஒவ்வொரு படமுமே அந்தக் குறிப்பிட்ட வகையில் மிகவும் பிரசித்தி அடைந்த படமாகவே இருக்கும். ‘கல்ட்' என்ற பதத்துக்கு ஃபிஞ்ச்சரை விடவும் தகுதி பெற்றுள்ள நபரைக் காண்பது அரிது. அதேசமயம், வெறும் கமர்ஷியல் படமாக இல்லாமல், இவரது பெரும்பாலான படங்களில் இருக்கும் செய்நேர்த்தி, ஆழமான கதை, அதில் வெளிப்படும் உணர்வுகள், கதாபாத்திரங்களின் இருண்ட தன்மைகள் என்று பல்வேறு அடுக்குகளில் கதை சொல்வதில் சிறந்தவர்.

இவரது முதல் படம் - ஏலியன் 3 (Alien 3). 1992-ல் வெளியாகிப் பிரபலம் அடைந்தது. இந்தத் தொடரின் முதல் படத்தை இயக்கியவர் ரிட்லி ஸ்காட். இரண்டாம் படம் ஜேம்ஸ் கேமரூனால் இயக்கப்பட்டது என்றால்தான் இந்த சீரிஸின் முக்கியத்துவம் புரியும். இரண்டாவது படமாக 1995-ல் ஃபிஞ்ச்சர் இயக்கிய ‘செவன்' (Seven) படம் இன்றளவும் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் படம். உலகெங்கும் உள்ள திரை ரசிகர்களை உலுக்கிய த்ரில்லர். 'காக்க காக்க' படத்தில் இதன் க்ளைமேக்ஸை நினைவுபடுத்தும் காட்சிகள் உண்டு. இதன் பின்னர் மைக்கேல் டக்ளஸ் நடித்த ‘The Game' (1997) வெளியானது. அடுத்து 1999-ல் ஃபிஞ்ச்சர் இயக்கிய ‘ஃபைட் க்ளப்' (Fight Club) படம் இன்றும் இளைஞர்களின் மனதில் ஒரு கல்ட் படமாக இருந்துகொண்டிருக்கிறது.

இதில் இடம்பெற்றுள்ள பல சர்ச்சைக்குரிய கருத்துகள் இன்றும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் பின்னர் 2002-ல் ‘பேனிக் ரூம்' (Panic Room) வெளியானது. இதன்பின் 2007ல் ‘ஸோடியாக்' (Zodiac) படத்தை இயக்கினார். இந்தப் படம் கான் திரைப்பட விருதுகளில் உயரிய ஒன்றான தங்கப் பனை (Palme d'Or) பரிந்துரை வரை சென்றது. உலகெங்கும் புகழப்பட்ட த்ரில்லர். அடுத்த வருடமே ‘க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்' (Curious case of Benjamin Button) வெளியானது. எழுத்தாளர் ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்டின் கதை ஒன்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. 2010-ல் அடுத்து பிஞ்ச்சர் இயக்கிய படம், ‘சோஷியல் நெட்வொர்க்' (Social Network). ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கைப் பற்றிய படம்.

இதுவும் பரவலாகப் பேசப்பட்ட படமே. பின்னர் 2011-ல் ‘கேர்ல் வித் அ ட்ராகன் டாட்டூ’ (The Girl with a Dragon Tattoo) என்ற புகழ்பெற்ற ஆக் ஷன் படத்தை இயக்கினார். கடைசியாக 2014-ல் ‘கான் கேர்ள்' (Gone Girl) என்ற படத்தை இயக்கி, அது உலகம் முழுதும் பரவலாகப் பாராட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதுவும் த்ரில்லரே. குடும்ப உறவுகளில் நிலவும் போலித்தன்மைகளைப் பற்றிய படம். சென்னையில் இது நன்றாக ஓடியது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

இவற்றைத் தவிர, பல்வேறு இசை வீடியோக்களையும் ஃபிஞ்ச்சர் இயக்கியுள்ளார். அதற்கென்றே இரண்டு முறை கிராமி விருதையும் வென்றிருக்கிறார்.

ஃபிஞ்ச்சரின் படங்களில் பெரும்பாலும் திரைக்கதை எழுதியவர் வேறொருவராகவே இருப்பார். அதுதான் ஹாலிவுட் நடைமுறை. இருந்தாலும், மார்ட்டின் ஸ்கார்ஸேஸி (Martin Scorsese) போல, இவரது படங்களில் இவரது முத்திரை அவசியம் தெரியும். ஒரு தலைமுறைமீது பெரும் தாக்கம் ஏற்படுத்திய சில இயக்குநர்கள் ஹாலிவுட்டில் உண்டு. அதில் இளம் தலைமுறையை ஃபிஞ்ச்சரைப் போல் பாதித்தவர்கள் யாரும் இல்லை என்று அவசியம் சொல்லலாம்.

க்வெண்டின் டாரண்டினோவுக்கு மிகவும் பிடித்த இயக்குநர்கள் யார் என்ற கேள்விக்கு, தனது அத்தனை திரையுலக நண்பர்களுக்குமே மிகவும் பிடித்த இயக்குநர்கள் பட்டியலில் டேவிட் ஃபிஞ்ச்சரின் பெயரும் ரிச்சர்ட் லிங்க்லேட்டரின் (Richard LInklater) பெயரும் தவறாமல் இடம்பெற்றிருப்பதாக அவர் சொல்லியிருக்கிறார். டாரண்டினோவின் படங்களில் பல காட்சிகளில் அபத்த நகைச்சுவை இருக்கும். ஆனால் ஃபிஞ்ச்சரோ, தனது படங்களில் மிளிரும் இருள்மை, வாழ்க்கையைப் பற்றிய கருத்துகள், உடைந்து சிதறும் சமூக வாழ்க்கை போன்றவற்றைத் துல்லியமாக வெளிப்படுத்தும் திறன் பெற்றவர்.

உதாரணமாக, ‘செவன்' படத்தின் இறுதியில், தேடப்படும் கொலைகாரன் ஜான் டோ என்பவன் பேசும் வசனம் புகழ்பெற்றது. ஏழு விதமான பைபிள் பாவங்களை மையமாக வைத்து ஏழு கொலைகளைச் செய்வான் அவன். ஏன் இப்படிச் செய்கிறாய் என்ற கேள்விக்கு, ‘மக்களிடம் இது தப்பு… இது சரி... இதைச் செய்... இதைச் செய்யாதே என்று அமைதியாக அவர்களின் தோளில் தட்டி நம் கருத்தைக் கூறினால் கேட்கும் காலமெல்லாம் மலையேறிவிட்டது. பெரிய சுத்தியல் ஒன்றை வைத்து ஒரே போடு போட்டால் மட்டுமே அவர்கள் நாம் சொல்வதைக் கேட்பார்கள். அதைத்தான் செய்தேன்' என்று ஜான் டோ பதில் சொல்வான். ‘ஃபைட் க்ளப்’ படத்தின் வசனங்கள் கூர்மையும் அங்கதமும் கொண்டவை.

சமீபத்திய ‘கான் கேர்ல்' படத்தில், தற்காலச் சமூகத்தில் கணவன் மனைவி, திருமணத்துக்குப் பின்னர் மெல்ல மெல்லத் தேயும் அவர்களின் உறவு, இருவரும் ஒருவரையொருவர் எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றனர் என்பதெல்லாம் துல்லியமாகக் காட்டப்பட்டிருக்கும். பெரும்பாலும் ஃபிஞ்ச்சரின் படங்கள் அனைத்துமே நாவல்களிலிருந்தே எடுக்கப்பட்டவை என்பது இங்கே முக்கியம். நாவலின் கதையைத் தனது முத்திரையோடு ஃபிஞ்ச்சரால் இன்னும் ஆழமாகவே சொல்ல முடிந்திருக்கிறது.

தரமான கமர்ஷியல் படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்று ஆசைப்படும் யாருமே, டேவிட் ஃபிஞ்ச்சர் படங்களை அவசியம் பார்க்கலாம். இப்படங்கள் கருத்துரீதியாக மட்டும் இல்லாமல் கமர்ஷியல் ரீதியாகவும் எப்படி வெற்றி பெற்றிருக்கின்றன என்பதை அறிந்துகொள்வது அவசியம். தமிழில் கதை, திரைக்கதை, சொல்லும் கருத்து, படத்தை உருவாக்கும் முறை ஆகிய எல்லா அம்சங்களிலும் துல்லியமான, செய்நேர்த்தி மிகுந்த, பல வகையிலும் பாராட்டுகளைப் பெறும் விறுவிறுப்பான படங்கள் உருவாவது இதிலிருந்து சாத்தியமாகலாம்.

தொடர்புக்கு rajesh.scorpi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x