

ஏதாவது ஒரு பழைய விஷயத்தை யாரிடமாவது கேட்டால், ஆட்காட்டி விரலையும் கட்டைவிரலையும் சேர்த்து நெற்றிப் பொட்டில் வைத்து, கண்களை மூடி யோசிக்கத் தொடங்கிவிடுவார்கள். கொஞ்ச நேரத்தில், "ம்..., அதைப் பற்றித்தானே கேட்டீர்கள். நான் சொல்வது சரியா" என்று அவர்கள் சரியான பதிலைச் சொல்வதைக் கேட்டிருப்போம்.
ஏதாவது ஒன்றை நினைவுகூரும்போது ஏன் இப்படிக் கண்களைத் மூடிக்கொள்கிறோம்? கண்களை திறந்துகொண்டு சிறப்பாக நினைவுகூர முடியாதா என்ன? முடியாது.
மனத்திரை
ஏதாவது ஒன்றை நம் மனத்திரையில் காட்சிப்படுத்திப் பார்க்கும்போது, கவனம் சிதறுவதைத் தவிர்க்கவே நாம் கண்களை மூடிக்கொள்கிறோம்.
பார்ப்பது, தொடுவது அல்லது கேட்பது ஆகிய உணர்வுகள் செயல்படக் காரணமாக இருக்கும் அமைப்பையே, மனத்திரையில் காட்சிப்படுத்திப் பார்க்கவும் நம்முடைய மூளை பயன்படுத்துகிறது.
பழைய விஷயம் ஒன்றை நினைவுகூர முயலும்போது, நம்முடைய மூளையின் காட்சிப் பட்டையைத் தளர்த்தி, ஏற்கெனவே பதிந்த பழைய காட்சியை மனத்திரைக்குத் திரும்பக் கொண்டுவர முயலும்போதுதான் கண்களை மூடிக்கொள்கிறோம்.
ஆராய்ச்சி முடிவு
ஆராய்ச்சியாளர்கள், ஒரு சிறிய வீடியோவை ஒளிபரப்பிப் பிறகு அது தொடர்பாகச் சிலரிடம் கேள்வி கேட்டார்கள். அப்போது தொடர்பற்ற காட்சிகளைப் பார்த்தவர்கள் அல்லது புதிய சொற்களைக் கேட்டவர்களைவிட, கண்களை மூடிக்கொண்டு சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளைப் கவனித்தவர்களும், வெற்றுத்திரையைப் பார்த்துக்கொண்டு இருந்தவர்களும் அதிகமான கேள்விகளுக்குச் சரியாக விடையளித்திருக்கிறார்கள்.
அதேபோல ஒரு குற்றச்செயல் நடந்த வீடியோவைக் கண்ணைத் திறந்துகொண்டும், மூடிக்கொண்டும் பார்க்கச் சொல்லி ஆய்வு நடத்தப்பட்டது. கண்களை மூடிக்கொண்டு பார்த்தவர்கள், பல விவரங்களைச் சரியாக நினைவுகூர்ந்தார்கள். அதேபோல வீடியோவில் பதிவாகியிருந்த சத்தத்தைக் கண்களை மூடிக்கொண்டு கேட்டபோது, அவர்களால் மிகச் சரியாக நினைவுகூர முடிந்தது.
கேட்பதும் எழுதுவதும்
பழசை நினைவுகூர ஒரு சிலர் கண்களை மூடுவார்கள், சிலர் மேல் நோக்கிப் பார்ப்பார்கள், சிலர் தூரமாகப் பார்ப்பார்கள். எல்லாமே பக்கத்தில் தொந்தரவாக இருக்கும் காட்சிகளை விலக்கி வைப்பதற்குத்தான். அப்படி விலக்கி வைக்கும்போது, இந்தத் தொந்தரவுகளிலிருந்து நகர்ந்து பழையதை நினைவுகூர மூளையின் செயல்திறன் உதவுகிறது.
இதேபோலத்தான் மற்ற உணர்வுகளும் செயலாற்று கின்றன. ஒருவருடைய குரல் அல்லது ஏதாவது ஒரு சத்தத்தை நினைவுகூரும்போது சுற்றிலும் குழப்பமான சத்தங்கள் வந்துகொண்டிருந்தால், அந்தச் சத்தத்தைச் சரியாக நினைவுகூர முடியாது. மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, நம்மால் எழுத முடியாமல் போவது இதன் காரணமாகத்தான்.
ஏனென்றால், அப்போது நம்முடைய மூளை பேச்சைக் கவனிப்பதிலேயே கவனத்தைச் செலுத்திக்கொண்டிருக்கும். எப்போதுமே எதையாவது நினைவுக்குக் கொண்டுவர வேண்டுமென நினைத்தால், அதற்கான உணர்வுகளைத் தனிமைப்படுத்திக் கவனத்தைச் செலுத்தினால், சீக்கிரம் நாம் நினைப்பது ஞாபகத்துக்கு வந்துவிடும்.