Published : 04 May 2014 12:53 PM
Last Updated : 04 May 2014 12:53 PM

பக்கத்து வீடு: அறுவை சிகிச்சையின் நாயகி

கடவுள் கொடுத்த உடலை அறுப்பதும், அதனுள் என்ன இருக்கிறது என்பதை ஆராய்வதும் மதக் கட்டுப்பாடுகளை மீறும் செயலாகப் பார்க்கப்பட்ட 13-ம் நூற்றாண்டில் உடலை அறுக்கும் பணியைச் செய்தவர் அலெஸ்ஸாண்டிரா கிலியானி (Alessandra Giliani).

இவர் வடக்கு இத்தாலியில் 1307-ம் ஆண்டு பிறந்தார் என்று கூறப்படுகிறது. இவர் போலோக்னா பல்கலைக் கழகத்தில் உடற்கூறு மருத்துவத்தின் அடிப்படைகளையும் தத்துவமும் பயின்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதே பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் மோண்டினோ டி லுஸ்ஸி என்பவரின் உதவியாளராக கிலியானி இருந்திருக்கிறார். மாணவர்களுக்கு உடற்கூறு குறித்துப் பாடம் நடத்த உதவியாக இறந்த உடல்களை அறுக்கும் பணியைச் செய்தார் கிலியானி.

மருத்துவரின் உதவியாளராக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் பல மருத்துவ உண்மைகளைக் கண்டறிந்திருக்கிறார். இறந்த உடலில் உள்ள ரத்தத்தை முழுவதுமாக வடித்த பிறகு, அந்த ரத்தக் குழாய்களில் அடர்த்தியான வண்ணம் கொண்ட திரவத்தைச் செலுத்தி சோதனை செய்தார். அதன் மூலம் மனித உடலின் ரத்தச் சுழற்சி மண்டலத்தைக் குறித்தத் தெளிவான பிம்பம் அலெஸ்ஸாண்டிரியாவுக்குக் கிடைத்தது. தான் பார்த்தவற்றைப் படமாகவும் வரைந்தார். அதன் மூலம் மருத்துவ மாணவர்கள் மனித உடலைப் பற்றி மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அவர் படம் வரைந்து வைத்திருந்த ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப் பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

அறுவை சிகிச்சை முறைக்கு அடித்தளமாக இருந்தது கிலியானியின் ரத்தக் குழாய்களின் செயல்பாடு பற்றிய கண்டுபிடிப்பு.

கிலியானி பற்றி மருத்துவர் மோண்டினோவின் உதவியாளர்களில் ஒருவரான ஓட்டோ ஆன்ஜெனியஸ் என்பவர் எழுதிய குறிப்புகளில் “கிலியானி மிகவும் மரியாதைக்குரியவர். மக்களுக்கும் மருத்துவத் துறைக்கும் அரும்பெரும் சேவை செய்தவர்” என்று குறிப்பிடுகிறார். கிலியானியின் கல்லறையில் இருக்கும் நினைவுத் தூணில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன.

16-ம் நூற்றாண்டின் வரலாற்று ஆய்வாளர் மைக்கேல் மெடிசி, தான் எழுதிய மருத்துவப் பள்ளி பற்றிய குறிப்புகளில் கிலியானியைப் பற்றியும், அவரது சேவை பற்றியும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

நவீன மருத்துவத்தின் முன்னோடியாக இருந்த கிலியானி, 19-வது வயதில் மரணமடைந்தார். காயத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவர் இறந்தார் என்று சொல்லப்பட்டாலும் கிலியானியும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்கிறார் பார்பரா குவிக். இவர், அலெஸ்ஸாண்டிராவை மையமாக வைத்து நாவல் எழுதியிருக்கிறார்.

மதக் கட்டுப்பாடுகள் ஓங்கி இருந்த காலத்தில் வாழ்ந்த அனைத்து மருத்துவப் பெண்களும் சூனியக்காரிகள் என்று தூற்றப்பட்டு அழிக்கப்பட்டனர் என்ற கணிப்பு வரலாற்றில் உள்ளது. கிலியானியின் மரணமும் அத்தகையதாக அமைந்திருக்கக்கூடும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தனக்குப் பெரும் ஆபத்து வரலாம் என்று தெரிந்தும் மருத்துவத்துறைச் சோதனையில் துணிந்து ஈடுபட்ட கிலியானி, பெண்மையின் உறுதிக்குச் சான்றாக வரலாற்றில் பிரகாசிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x