

பிளஸ் 2 முடித்த பிறகு என்ன படிக்கலாம் என்று மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் இணைப்பிதழான வெற்றிக்கொடியும் குன்றத்தூரில் உள்ள மாதா பொறியியல் கல்லூரியும் இணைந்து மே 24-ம் தேதி ‘வெற்றிப்பாதை’ என்ற உயர்கல்வி ஆலோசனைக் கருத்தரங்கை நடத்தின.
மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எந்தப் படிப்பை எப்படித் தேர்ந்தெடுக்கலாம், எந்தப் படிப்புக்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன, மாணவர்களின் வெற்றியை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி மாணவர்களுடனும் பெற்றோர்களுடனும் உரையாடும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.
சிறப்பு விருந்தினர்களாக, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.திருமலை, பேராசிரியர் பர்வீன் சுல்தானா, கல்வியாளர் மற்றும் கேலக்ஸி மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் பிரபா, ஆவணப்பட இயக்குநரும் பேராசிரியருமான சாரோன் ஆகியோர் பங்கேற்றனர்.
மாதா பொறியியல் கல்லூரி தலைவர் டாக்டர் எஸ்.பீட்டர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். தி இந்து தமிழ் நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன், நடுப்பக்கத்துக்கான ஆசிரியர் சமஸ் மற்றும் வர்த்தகப் பிரிவு தலைவர் சங்கர் வி.சுப்பிரமணியம் உள்படப் பலர் பங்கேற்றனர்
பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு ரிலையன்ஸ் டிரென்ட்ஸ் ஆடை நிறுவனம் பரிசு கூப்பன்களை வழங்கியது. தி இந்து நாளிதழ் சார்பாக மாணவர்களுக்கு ‘வெற்றிக்கொடி’ விருதுகள் வழங்கப்பட்டன.