Published : 22 Jun 2015 10:40 AM
Last Updated : 22 Jun 2015 10:40 AM

துணிவே தொழில்: வெற்றியை தீர்மானிப்பது எது?

தொழில் முனைவோருக்காக இதுவரை நான் கூறிய அனைத்து ஆலோசனைகளும் இதுவரையில் நான் ஒரு தொழில் ஆலோசகனாக, தொழில் முனைவோராக, பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றதன் மூலம் பெற்ற விஷயங்கள் மூலமாக, தொழில் நடத்தியதன் மூலம் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன்.

இந்தத் தொடர் எழுத ஆரம்பித்ததிலிருந்து ஏறக்குறைய 30 வாரங்களாக பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித் துள்ளோம். ஏறக்குறைய பெரும்பாலான விஷயங்களை விவாதித்துள்ளதால் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டோம் என்ற நிலை எனக்கே ஏற்பட்டுவிட்டது. இதுவரை பகிர்ந்து கொண்ட முக்கியமான விஷயங்களை ஒருமுறை அசைபோட்டால் அது நிச்சயம் பலனுள்ளதாக இருக்கும்.

தொழில் தொடங்கும் உத்வேகம் உள்ளவர்களுக்கு 7 விஷயங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த 7 விஷயங்கள்தான் திரும்பத் திரும்ப பல்லாயிரக்கணக்கான புத்தகங்களிலும், கட்டுரைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

7 சி எனப்படும் இந்த விஷயங்களை இனி பார்ப்போம்.

1. தெளிவு (Clarity): முதலில் உங்க ளைப் பற்றிய தெளிவு மிகவும் அவசியம். நீங்கள் யார், உங்களது தேவை என்ன என்பதை உணருங்கள். (இது ஏதோ தத்து வார்த்தமாக தோன்றுவதாக நினைக்க வேண்டாம். இதுதான் தொழிலுக்கு மிகவும் அவசியம்). உங்களது இலக்கு களை, லட்சியங்களை எழுதி வைத்து அதை எந்தெந்த கால கட்டத்தில் எட்ட வேண்டும் என்பதை தீர்மானியுங்கள்.

அ. இதிலே உப பிரிவாக உங்கள் வாழ்க்கையில் எது முக்கியமானது என்பதை கண்டுபிடியுங்கள்.

ஆ. எதற்கு நீங்கள் விலை கொடுக்கிறீர்கள், எதற்காக போராடு கிறீர்கள், எதற்காக கஷ்டப்படுகிறீர்கள், எதற்காக இறக்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானியுங்கள்.

இ. எது குறித்து நீங்கள் அதிக அக்கறை காட்டுகிறீர்கள். சாகப் போவதற்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கிறது எனும்போது எப்படி வாழ வேண்டும் என்று தீர்மானிக்காதவர்கள் வாழ்வதற்கே தகுதியற்றவர் என என் நண்பர் ஒரு முறை என்னிடம் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

உங்களின் தொலைநோக்கு திட்டம் எது? உங்களது எதிர்காலம் எது? உங்கள் குடும்பத்தினரின் தொலைநோக்கு திட்டம் என்ன? உங்களுடைய நிதிவளம் தான் என்ன? உங்கள் இலக்கு மற்றும் நிறுவனம் குறித்த இலக்கு என்ன? பீட்டர் டிரக்கர் கூறும்போது, உங்களது தொழில் அடுப்பறையில் தொடங்கு வதாயிருந்தாலும், அந்த தொழிலில் உலக அளவில் பிரபலமான முன்னோடி நிறுவனமாக விளங்குவது எப்படி என்பதை தீர்மானியுங்கள். அவ்விதம் தீர்மானிக்கவில்லையெனில் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்று உணர்த்தியுள்ளார்.

உங்கள் தொழிலில் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை எட்டுவதற் கான திட்டம் என்ன? உங்களது வாடிக்கையாளர் களுக்கு எத்தகைய தயாரிப்புகளை அளித்து திருப்தி செய்ய திட்டமிட்டுள் ளீர்கள். உங்கள் பகுதி மக்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உங்கள் சேவை மற்றும் தயாரிப்புகளின் மூலம் எவ்விதம் மேம்படுத்தத் திட்டமிட்டுள் ளீர்கள். இந்த விஷயத்தில் தெளிவான தொலைநோக்கு திட்டமும், அதை அடை வதற்கான ஊக்கமான ஓட்டமும் உங்கள் தொழிலை வெற்றிகரமானதாக்கும்.

உங்கள் வாழ்வின், தொழிலின் லட்சியம் என்ன? ஏன் காலையில் எழுந்திருக்க வேண்டும். உங்கள் வாழ்வில் நீங்கள் எதை சாதிக்க நினைக்கிறீர்கள். இறுதியாக உங்களது இலக்குதான் என்ன? நிதி வளம் மூலம் உங்கள் வாழ்வில் எதை அடைய நினைக்கிறீர்கள்? உங்கள் குடும்பத்தினரின் இலக்குதான் என்ன? உடல் சார்ந்த உங்கள் லட்சியம் என்ன? மற்றவர்களைக் காட்டிலும் எதில் வித்தியாசமாய் வாழ வேண்டும் என நினைக்கிறீர்கள்? எதில் தோல்வியை சந்திக்க மாட்டீர்கள் என நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள்.

மேலே கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளையும் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.. இவை அனைத்தும் மதிப்பு மிக்க, தொலை நோக்கு திட்டமாக, இலக்கு நோக்கிய பயணமாக, பொருள் பொதிந்த இலக்காக இருக்கும். இவை அனைத்துமே உங்கள் வாழ்வின் அற்புதமான அம்சங்களாக இருக்கும். மற்ற 6 சி என்ன என்பதை வரும் வாரங்களில் பார்க்கலாம்.

aspireswaminathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x