Last Updated : 28 Jun, 2015 02:22 PM

 

Published : 28 Jun 2015 02:22 PM
Last Updated : 28 Jun 2015 02:22 PM

சாதிக்கப் பிறந்த தேவதை!

“வேடிக்கையைப் பாருங்கள், எல்லோரும் என்னைத் துரத்த முயற்சி செய்கிறார்கள், ஆனால் நான்தான் அவர்களைத் துரத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்’’ என்கிறார் டச்யானா மெக்ஃபேடன்.

பாஸ்டன், நியூயார்க், சிகாகோ, லண்டன் என்ற நான்கு மாரத்தான் பட்டங்களையும் ஒரே ஆண்டில் பெற்றவர் இவர்! ஆரோக்கியமானவர்களிலோ, மாற்றுத் திறனாளிகளிலோ இந்தச் சாதனையைச் செய்தவர்கள் இதுவரை யாரும் இல்லை. தன்னுடைய நாடான அமெரிக்காவுக்குப் பெருமையும் உலகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்குத் தன்னம்பிக்கையும் பெற்றுத் தந்திருக்கிறார் 26 வயது டச்யானா.

வறுமையின் பிடியில்

முதுகெலும்பில் துளையுடன் இடுப்புக்குக் கீழே இயங்காத தன்மையோடு, ரஷ்யாவில் பிறந்தார் டச்யானா. பிறந்த 3 வாரங்களுக்குள் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் குழந்தையைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். ஆனால் டச்யானாவின் அம்மாவால் ஏற்பாடு செய்ய இயலவில்லை. மூன்று வாரங்களுக்குப் பிறகும் குழந்தை உயிரோடு இருந்ததில் மருத்துவர்களுக்கு ஆச்சரியம்.

குழந்தையை ஆதரவற்றவர்கள் இல்லத்தில் சேர்த்துவிட்டார் அம்மா. மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த அந்த இல்லத்தால் டச்யானாவுக்கு ஒரு சக்கரநாற்காலிகூட ஏற்பாடு செய்ய இயலவில்லை. ஆறு ஆண்டுகள்வரை தோள்களைக் கால்களாகவும் கைகளைப் பாதங்களாகவும் பயன்படுத்தி நகர்ந்துவந்தார் டச்யானா.

அமெரிக்காவைச் சேர்ந்த டிபோரா மெக்ஃபேடன் அரசாங்க அலுவல் காரணமாக ரஷ்யாவுக்கு வந்தார். ஆதரவற்றவர் இல்லத்தில் டச்யானாவைச் சந்தித்தார். நோய்களோடு உடல் பலமின்றி இருந்த டச்யானாவைத் தத்தெடுக்க முடிவு செய்தார் டிபோரா.

ஆனால் டச்யானா நீண்ட நாட்கள் உயிர் வாழ வாய்ப்பில்லை என்றார்கள் மருத்துவர்கள். ஆனாலும் தன் எண்ணத்தில் உறுதியாக இருந்தார் டிபோரா. அதற்கு ஒரு காரணமும் இருந்தது. சிறுவயதில் டிபோராவுக்கு வந்த மர்மக் காய்ச்சல், அவரை மாற்றுத் திறனாளியாக மாற்றியிருந்தது. அதிலிருந்து மீண்டு, நீச்சல் வீராங்கனையாக மாறி, அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்து வந்தார் டிபோரா.

அமெரிக்கா பயணம்

ரஷ்ய மொழி மட்டுமே அறிந்திருந்த அந்த நோஞ்சான் குழந்தை, ஆங்கிலம் பேசும் அம்மாவுடன் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தது. முதல் காரியமாக ஒரு சக்கர நாற்காலி வாங்கிக் கொடுத்தார் டிபோரா. பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சில அறுவை சிகிச்சைகளும் டச்யானாவுக்கு அளிக்கப்பட்டன. உடல் தேறியதே தவிர, அவரின் பாதி உடல் இயங்கும் வாய்ப்பை நிரந்தரமாக இழந்துவிட்டிருந்தது.

பள்ளியில் சேர்ந்ததும் ஆர்வத்தோடு படித்தார் டச்யானா. ஓய்வு நேரங்களில் விளையாட்டுகளில் ஈடுபட வைத்து, அவரது தசைகளை வலுவாக்கினார் டிபோரா. நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், சக்கர நாற்காலி கூடைப் பந்து, பனி சறுக்கு ஹாக்கி, ஸ்கூபா டைவிங் என்று வரிசையாகக் கற்றுக்கொண்டு களத்தில் இறங்கினார் டச்யானா. இறுதியில் சக்கர நாற்காலி ஓட்டப் பந்தயத்தில்தான் அவரது ஆர்வம் நிலைகொண்டது. தன்னுடைய வலுவான தோள்கள் மூலம் எளிதில் வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்தார் டச்யானா.

பள்ளியில் மற்ற மாணவர்களுடன் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கு டச்யானாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எவ்வளவோ பேசிப் பார்த்தார். சக்கர நாற்காலி ஓட்டம் பாதுகாப்பற்றது என்று சொன்னார்கள். ஓடுவதற்காகவே உருவாக்கப்பட்ட சக்கர நாற்காலி என்பதால் ஆபத்தில்லை என்று விளக்கினார்.

ஆனாலும் ஒரு மாற்றுத் திறனாளியை மற்றவர்களுடன் ஓட வைக்கப் பள்ளி நிர்வாகம் விரும்பவில்லை. டச்யானாவுக்கு என்று சக்கர நாற்காலி ஓட்டப் பந்தயங்கள் தனியாக நடத்தப்பட்டன. வேறு யாரும் கலந்துகொள்ளாததால் மைதானத்தில் தனியாக ஓடிக்கொண்டிருந்தார் டச்யானா. இந்த நிகழ்ச்சி அவரை வெகுவாகப் பாதித்துவிட்டது.

அனைவரும் சமமே

சாதாரணமானவர்களையும் மாற்றுத்திறனாளிகளையும் சமமாக நடத்த வேண்டும் என்று டச்யானாவும் டிபோராவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

“பதக்கங்களுக்கோ, பணத்துக்கோ இவர்கள் போட்டிகளில் பங்கேற்க நினைக்கவில்லை. எல்லோரையும் போலத் தாங்களும் என்பதை உணர்த்துவதற்கே போட்டிகளில் பங்கேற்கிறார்கள். அதனால் பள்ளிகளில் எல்லோருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாகப் பள்ளிகளிடையே தனிப் போட்டிகளையும் நடத்தலாம்’’ என்று தீர்ப்பு வெளியானது.

இந்தச் சட்டம் டச்யானா சட்டம் என்றே அழைக்கப்பட்டது. அமெரிக்காவின் 13 மாநிலங்களில் இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. 2013-ம் ஆண்டில் அமெரிக்கா முழுவதும் பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகளுக்குச் சமவாய்ப்பு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

15 வயதில் மாற்றுத் திறனாளிகளுக்கான கோடை ஒலிம்பிக் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்ற டச்யானாவின் வெற்றி வேகத்தை இன்று வரை குறைக்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகளில் தங்கப்பதக்கம் பெற்று உலகச் சாம்பியனாக மாறியதோடு, 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய சாதனையையும் படைத்தார் டச்யானா.

டச்யானா இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 2010 நியூயார்க், 2011 சிகாகோ, 2011 லண்டன், 2015 பாஸ்டன் மாரத்தான் போட்டிகளில் தொடர்ந்து சாம்பியன் பட்டங்களைப் பெற்றார். 2013-ம் ஆண்டில் மட்டும் நான்கு மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு அனைத்திலும் சாம்பியன் பட்டங்களை வென்றார். இதுவரை யாரும் செய்யாத உலகச் சாதனை இது! அந்த ஆண்டே 6 தங்கப் பதங்களை வென்று உலகச் சாம்பியன் பட்டங்களையும் குவித்தார்.

2014 மாற்றுத் திறனாளிகளுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக ரஷ்யா சென்றார். பனிச் சறுக்கு போட்டியில் ஓடும் பாதையைத் தவற விட்டதால் தங்கப் பதக்கம் நழுவியது. வெள்ளிப் பதக்கம் வென்றவர், “இந்தப் பதக்கத்தை என் குடும்பத்துக்கு அர்ப்பணிக்கிறேன். இதில் என்னைப் பெற்ற தாயும் அடங்குவார்’’ என்றார். டச்யானாவின் பெற்ற தாயோ, அவர் வளர்ந்த இல்லத்தில் இருந்தவர்களோ, உயிர் பிழைத்திருக்காது என்று நினைத்த குழந்தை, இன்று சாம்பியன் பட்டங்களை அள்ளிக்கொண்டு வருவார் என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

தத்தெடுப்பது நல்லது

ரஷ்யர்களை அமெரிக்கர்கள் தத்தெடுக்கக் கூடாது என்று ஒரு சட்டம் 2012-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார் டச்யானா.

“யாரும் அறியாமல் இறந்துபோக இருந்த என்னை ஒரு அமெரிக்கத் தாய்தான் உலகம் மெச்சும் அளவுக்கு உயர்த்தியிருக்கிறார். என் சகோதரிகள் இருவரும்கூட அல்பேனியாவில் இருந்து தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர்களே. தத்தெடுப்பதன் மூலம் எத்தனையோ குழந்தைகளின் வாழ்க்கை மேன்மையடையும். எத்தனையோ பேர் என்னைப் போல எங்கள் நாட்டுக்குப் பெருமைகளையும் தேடித் தரலாம்.

ரஷ்யா இந்தச் சட்டத்தை மாற்ற வேண்டும். மாற்றுத் திறனாளிகள் இந்த உலகில் சிரமமின்றி வாழ எல்லா இடங்களிலும் வசதிகளைச் செய்து தரவேண்டும். அதே நேரம் அவர்களைச் சமமாகவும் நடத்த வேண்டும் என்பதே எல்லோருக்கும் என் கோரிக்கை’’ என்கிறார் டச்யானா.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் தன்னம்பிக்கை வகுப்புகள் எடுக்கிறார். கவுன்சிலிங் கொடுக்கிறார். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகப் போராடிவருகிறார். உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு என்று இருக்கும் டச்யானா, மற்றவர்களுக்கும் ஆரோக்கியம் தொடர்பாகப் பயிற்சியளிக்கிறார். பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நிதி திரட்டிக் கொடுக்கிறார். குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதி வெளியிடுகிறார். தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளி சாதனையாளர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x